புதிய நிறுவனத்துடன் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம்! முடிவுக்கு வருகிறதா வேலை நிறுத்தம்?

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்...
புதிய நிறுவனத்துடன் தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்பந்தம்! முடிவுக்கு வருகிறதா வேலை நிறுத்தம்?

திரையரங்குகளில் டிஜிட்டல் ஒளிபரப்புக்கு அதிகக் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக மார்ச் 1 முதல் வேலை நிறுத்தம் செய்து வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். இதனால் மார்ச் 1 முதல் புதிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளிவரவில்லை.

தொடர்ந்து பல வருடமாக நடைமுறையில் இருந்துவரும் மிக அதிகப்படியான கட்டணத்தை குறைக்க வேண்டி பல முறை நேரிலும், கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டு கேட்டும், கண்டுகொள்ளாத டிஜிட்டல் சேவை வழங்குநர்களுக்கு எதிராக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்த ஒரு புதிய தமிழ்த் திரைப்படத்தினையும் திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், தமிழகத்தில் மார்ச் 16-ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. 'பெப்சி' அமைப்பின் ஒப்புதலுடன் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதை அறிவித்தது. மார்ச் 16 முதல் தமிழ் திரைப்பட படப்பிடிப்புகள் நிறுத்தம், சினிமா நிகழ்ச்சிகளும், போஸ்ட் புரொடெக்சன் பணிகளும் நடைபெறாது என தமிழக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்தார். அதேபோல தமிழ்நாட்டில்
திரைப்படப் படப்பிடிப்புகளும் எதுவும் தற்போது நடைபெறவில்லை.

இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், மைக்ரோப்ளக்ஸ் என்கிற புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் டிசிஐ, 2கே, 4கே புரொஜக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க ​​டிஜிட்டல் சர்வீஸ் புரொவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இது மாபெரும் மைல்கல் ஆகும். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமாக நீடித்து வரும் வேலை நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com