தயாரிப்பாளர் சங்க பூட்டு திறப்பு: பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

விஷாலுக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போடப்பட்ட பூட்டைப் பதிவுத்துறை அதிகாரிகள் திறந்துள்ளார்கள்... 
தயாரிப்பாளர் சங்க பூட்டு திறப்பு: பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

விஷாலுக்கு எதிராகத் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போடப்பட்ட பூட்டைப் பதிவுத்துறை அதிகாரிகள் திறந்துள்ளார்கள். 

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகத்தைக் கண்டித்து தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தினார்கள். பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் விஷால் தன்னிச்சையாக முடிவு எடுக்கிறார். பிரச்னைகள் தொடர்பாகப் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும் என்று போராட்டம் நடத்திய தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்தார்கள். கடந்த நிர்வாகம் சேமித்து வைத்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்றும் இவர்கள் கேள்வியெழுப்பினார்கள். மேலும் விஷால் குறித்து முதலமைச்சரிடம் முறையிட உள்ளதாகவும் அவர்கள் கூறினார்கள். 

விஷால் பதவி விலகக் கோரி, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் இரு அலுவலகங்களுக்குத் தயாரிப்பாளர்களில் ஒரு பிரிவினர் பூட்டு போட்டார்கள். 

இந்த விவகாரம் குறித்து விஷால் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்கள். இதையடுத்து தியாகராய நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் போட்ட பூட்டை உடைக்க விஷால் இன்று வந்தார். ஆனால் பூட்டை உடைக்கக் காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். பதிவுத்துறையினர் வந்து பூட்டைத் திறப்பார்கள் என்று காவலர்கள் விஷாலிடம் தகவல் தெரிவித்தார்கள். இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் விஷால். எதிர்தரப்பினர் போட்ட பூட்டை உடைக்க அனுமதி மறுத்ததால் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் மற்றும் அவருடைய ஆதரவு தயாரிப்பாளர்கள் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாரதிராஜா, ஏ.எல். அழகப்பன், எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை இன்று சந்தித்தார்கள். விஷாலுக்கு எதிரான புகார் மனு முதல்வரிடம் அளிக்கப்பட்டது. 

சிறப்பு அதிகாரியை நியமித்து ஒரு நிர்வாகக் குழுவை அமைக்கவேண்டும். விஷால் தலைமையிலான நிர்வாகக் குழுவின் கணக்குகளுக்கு விளக்கம் கேட்கவேண்டும். 4 மாதங்களில் முறையாகத் தேர்தல் நடத்தவேண்டும் போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இதனிடையே காவலர்களால் கைதான விஷால் உள்ளிட்ட தயாரிப்பாளர்கள், வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இறுதியாக, தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களில் எதிரணியினர் போட்ட பூட்டுகள் திறக்கப்பட்டுள்ளன. பதிவுத்துறை அதிகாரிகள் தயாரிப்பாளர் சங்க அலுவலகங்களின் பூட்டுகளைத் திறந்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com