வைரலாகிய 'தல' ரசிகர்களின் ஓப்பனிங் சாங்!

அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக்
வைரலாகிய 'தல' ரசிகர்களின் ஓப்பனிங் சாங்!
Published on
Updated on
2 min read

அஜித் நடிப்பில், சிவா இயக்கியுள்ள படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்திருக்கிறார். விஸ்வாசம் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. இப்படத்தில், ' அடிச்சுத் தூக்கு' என்னும் ஓப்பனிங் பாடல் இணையத்தில் வெளியாக ' தல' ரசிகர்களிடமிருந்து பலவகையான விமரிசனங்கள் வந்தன. 

ஈழத்துக் கவிஞர் அஸ்மின் அந்த ஓப்பனிங் பாடலை, அஜீத் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி செம கெத்தாக தன் சொந்த வரிகளில் ஒரு மணி நேரத்தில் எழுதி முகநூலில் வெளியிட அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அப்பாடலுக்கு முறையாக இசையமைத்து வெளியிட முடிவெடுத்தார், அஸ்மின்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் கல்லூரியில் பியானோ கற்பித்து வரும் இசையமைப்பாளர் தஜ்மீல் ஷெரீஃப் இசையிலும், குரலிலும் அஸ்மின் வரிகளிலும் ஓப்பனிங் பாடல்  இணையத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. 

பொங்கலுக்கு ரஜினியின்  'பேட்ட'  படம் வெளியாகும் நேரத்தில் தான் அஜீத்தின் 'விஸ்வாசம்' படமும் வெளியாகிறது. அதில் இடம்பெறும் அடிச்சுத்தூக்கு என்னும் ஒரிஜினல் ஓப்பனிங் பாடலுக்குப் பதிலாக அஸ்மினின் பாடலையே ஓப்பனிங் பாடலாக வைக்க வேண்டுமென்று அஜீத் ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். இலங்கையில் தேசிய விருது பெற்ற கவிஞர் அஸ்மின். இவர் விஜய் ஆண்டனியின் ' நான்' படத்தில் ' தப்பெல்லாம் தப்பேயில்லை'  என்னும் பாடலை எழுதியவர். செல்வி ஜெயலலிதா மறைந்த பொழுது 'வானே இடிந்ததம்மா' என்னும் பாடலின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

வைரலாகி இருக்கும் அவருடைய ஓப்பனிங் பாடலைப் பற்றியும், வருங்காலக் கனவு பற்றியும் அவரிடம் கேட்டபொழுது, ‘அஜீத் ரசிகர்களிடமிருந்து என் பாடலுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. எனது தந்தை உதுமாலெவ்வைதான் எனக்கு முதல் ஹீரோ. இயல்பாகவே கலையார்வம் மிக்க அப்பா வானொலி பிரியர், சிறந்த பத்திரிகை வாசிப்பாளர். உள்ளுர் செய்தி முதல் உலக செய்திவரை வரை உள்ளங்கையில் வைத்திருப்பார். அவரது சுவாரசிய பேச்சுக்காக அவரை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவர் பேசும் போது இடைக்கிடை நாட்டார் பாடல்களும், பழமொழிகளும் தெறிக்கும் வாழ்வின் தத்துவங்களை இயல்பாகவே பேசுவார். எனது பள்ளிக்கூடம் முதலில் அப்பாவில் இருந்து தொடங்கியது..நான் தாலாட்டோடு தமிழ்பாட்டும் கேட்டு வளர்ந்தவன். எங்கள் வீட்டில் முழுநேரமும் இலங்கை வானொலி  ஒலித்துக் கொண்டே இருக்கும். எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் காலையில் கண் விழிக்கும் போது பாடல்களோடு தொடங்கும் என் பொழுது இரவு தூங்கும் போது பாடல்களோடுதான் அடங்கிப் போகும்.’

அப்பா சிறுவயதில் இருந்தே என்னை பத்திரிகை வாசிக்க தூண்டினார். குழந்தை பருவத்தில் இருந்தே பத்திரிகை வாசிப்பின் மீதும் தமிழ் மீதும்  காதல் எனக்குள் வந்துவிட்டது. எனது கை படாத நூல் எமது நூலகத்தில் இல்லையென்றே சொல்லுமளவுக்கு எமது ஊரின் நூலகத்தை நான் சிறப்பாக பயன்படுத்தியுள்ளேன். கல்லூரி விடுமுறை நாட்களில் காலையில் வாசகசாலை சென்று மாலையில் வீடு திரும்பிய சந்தர்ப்பங்கள் அதிகம். படிப்படியாக நல்ல நல்ல நூல்களால் எனது உலகத்தை நான் விரிவாக்கிக்கொண்டேன்.

1997-ஆம் ஆண்டு ஒன்பதாம் வகுப்பு படிக்குபோதே கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். பத்தாம் ஆண்டில் இலங்கை பத்திரிகைகளில் எனது கவிதைகள் வெளிவர ஆரம்பித்தன. ஆரம்பத்தில் காதல் கவிதைகள்தான் எழுதினேன் நான் வளர வளர எனது சிந்தனையாற்றலும் கவிதை பற்றிய பார்வையும் வேறுபட்டது.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சில் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியில் இணைந்து இற்றைவரை பணிபுரிந்து வருகின்றேன். இசைஞானி இளையராஜா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் ஒரு பாடலாவது எழுத வேண்டும் எனது கனவாகும்’ என்கிறார். அவரின் கனவுகள் நனவாக வாழ்த்துவோம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com