போனி கபூருக்கு உதவ துபை பறந்தார் நடிகர் அர்ஜுன் கபூர்!

போனி கபூருக்கு உதவ துபை பறந்தார் நடிகர் அர்ஜுன் கபூர்!

நடிகை ஸ்ரீதேவி துபையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்றபோது அங்கு ஞாயிற்றுக்கிழமை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல் கிடைத்தது. இது திரையுலகினரையும், ஏராளமான அவரின் ரசிர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

துபை ஹோட்டலில் உள்ள அறையில் குளிக்கும் தண்ணீர் தொட்டிக்குள் (பாத் டப்) சுயநினைவில்லாமல் தவறி விழுந்து மூழ்கி ஸ்ரீதேவி மரணமடைந்ததாக துபை அரசு நேற்று தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சுட்டுரையில் துபை அரசின் செய்தித் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவுகளில், 'சுயநினைவை இழந்த நிலையில் ஹோட்டலில் உள்ள குளிக்கும் தண்ணீர் தொட்டியில் இருக்கும் நீரில் விழுந்து ஸ்ரீதேவி மூழ்கியதாலேயே உயிரிழந்துள்ளார். ஸ்ரீதேவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து முடித்த பிறகு, இந்த முடிவுக்கு காவல்துறை தலைமையகம் வந்துள்ளது. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை, சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்புக்கு (துபை பப்ளிக் புராசிக்யூஷன்) காவல்துறை மாற்றியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் துபையில் உள்ள போனி கபூருக்கு உதவ அவருடைய முதல் மனைவி மோனா ஷோரியின் மகனும் பிரபல நடிகருமான அர்ஜுன் கபூர் துபைக்குச் சென்றுள்ளார். ஹோட்டலில் உள்ள தனது தந்தைக்கு ஆறுதலாகவும் ஸ்ரீதேவியின் உடலை இந்தியாவுக்கு அனுப்புவது தொடர்பாகத் தந்தைக்கு உதவி செய்வதற்கும் அவர் துபை சென்றுள்ளதாக யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ் செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கப் பெற்றாலும் ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்ய முஹாய்ஸ்னாவுக்கு (Muhaisna) இதுவரை எடுத்துச் செல்லப்படவில்லை. இதனால் ஸ்ரீதேவியின் உடல் இன்னமும் பிணவறையில்தான் உள்ளது. வழக்கு விசாரணையை, சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்புக்கு (துபை பப்ளிக் புராசிக்யூஷன்) காவல்துறை மாற்றியுள்ளதால் அதன் அனுமதி கிடைத்தபிறகே எம்பாமிங் செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் துபை நேரம் மதியம் 12 மணி வரை இதற்கான அனுமதி கிடைக்கவில்லை. 

துபை காவல் நிலையத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் இந்தியத் தூதரகப் பிரதிநிதிகள் மூவரும் காலை 8 மணி முதல் அனுமதிக்காகக் காத்திருந்தும் அவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கவில்லை. இதனால் இரு தரப்பினரும் காலை 11.30 மணிக்கு காவல் நிலையத்திலிருந்து வெளியேறினார்கள் என்று கூறப்படுகிறது. வழக்கு விசாரணையிலும் அனுமதி அளிப்பதிலும் சட்ட ரீதியாக எவ்விதச் சிக்கல்களும் வரக்கூடாது என்பதற்காக அனைத்து நடைமுறைகளையும் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது சட்ட நடைமுறைகளை கையாளும் அமைப்பு. இதனால் ஸ்ரீதேவியின் உடல், இந்தியாவுக்கு கொண்டு வரப்படுவதில் மேலும் காலதாமதம் ஏற்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com