‘பாட்டிகள் ஜாக்கிரதை’ சுரேஷ் சக்ரவர்த்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

இதில் கமல் வேடத்தில் ஐ மீன் பெண் வேடமிடும் கணவராக சுரேஷ் சக்ரவர்த்தி அசத்தி இருந்தார். மனைவியாக கோடை மழை வித்யா. அந்த சீரியலை யூடியூபில் தேடிப் பார்த்ததில் அப்படியோர் சீரியல் ஒளிபரப்பானதற்கான தடயங்கள்
‘பாட்டிகள் ஜாக்கிரதை’ சுரேஷ் சக்ரவர்த்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?
Published on
Updated on
2 min read

அது சன் தொலைக்காட்சியின் மாலை நேர ஸ்லாட் ஆரம்பித்திருந்த புதிது என்று நினைவு. அப்போது ‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்றொரு மினித்தொடர் ஒளிபரப்பானது. அவ்வை ஷண்முகி படமும் அந்த  நேரத்தில் தான் ரிலீஸ் ஆனது. இப்போது போல மீம்ஸ்கள், ட்ரால்கள் எல்லாம் இல்லாத காலம் அது. அப்போது இன்டர்நெட்டே அரிது. செல்ஃபோன்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வஸ்துக்களாக இருந்த நாட்கள் அவை. அப்படியே செல்ஃபோன்கள் இருந்தாலும் கூட அவை போலீஸ்காரர்களின் வாக்கிடாக்கி லுக்கில் நுனியில் சின்ன ஆண்டெனாக் கொம்புகளுடன் மினி எருமைக்குட்டிகள் போல இருக்கும். அப்படியோர் காலத்தில் தான் அவ்வை ஷண்முகியை ட்ரால் செய்வது போல ‘பாட்டிகள் ஜாக்ரதை’ என்றொரு சீரியல் ஒளிபரப்பானது. 

கதை அவ்வை ஷண்முகியின் அதே பிளாட்ஃபார்ம். கணவரை விவாகரத்துச் செய்து விட்ட மனைவியின் மனதை கணவரே பெண் வேடமிட்டுச் சென்று (ஏ)மாற்றி அவளை மனம்மாறச் செய்வது தான். இதில் கமல் வேடத்தில் ஐ மீன் பெண் வேடமிடும் கணவராக சுரேஷ் சக்ரவர்த்தி அசத்தி இருந்தார். மனைவியாக கோடை மழை வித்யா. அந்த சீரியலை யூடியூபில் தேடிப் பார்த்ததில் அப்படியோர் சீரியல் ஒளிபரப்பானதற்கான தடயங்கள் ஏதும் சிக்கவில்லை. 

அதற்குப் பதிலாக 2011 ஆம் ஆண்டில் ஜெயாடிவியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ சீரியலில் சுரேஷ் சக்ரவர்த்தி மோனோ ஆக்டிங் செய்த இந்த வீடியோ கிளிப்பிங் தான் கிடைத்தது. இதுவும் கலக்கல் காமெடி தான் பார்த்து ரசியுங்கள்.

இவரது காமெடி நடிப்பை முதன்முதலில் கண்டு ரசித்தது ‘அழகன்’ திரைப்படத்தில் ’அதிராம்பட்டிணம் சொக்குவாக’... ஒரு கால் உடைந்த காமெடியனாக சில காட்சிகளில் வருவார்.

இவரது என்ட்ரியைக் கண்டு அழகன் திரைப்படத்தில் வரும் குழந்தைகள் பேசிக் கொள்ளும் வசனம்;

‘இப்படி ஒரு சீக்கு மாமா வருவார்னு தெரிஞ்சிருந்தா, நாம வேற வீட்ல போய் பொறந்திருக்கலாம்’ 

இவர் திரைப்படங்களில் நிறைய வந்ததாகத் தெரியவில்லை. சின்னத்திரையிலும் அதிகமாகத் தென்படவில்லை. சொல்லி வைத்தாற்போல வெகு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் இவரைக் கண்டதாக நினைவு. ஆனால் தான் பங்களித்த அத்தனையிலும் பார்ப்பவர்கள் கண்டு ரசிக்கும் வகையிலும் சபாஷ் சொல்லும் வகையிலும் இருந்தது இவரது திறமை!

சரி, திடீரென என்ன ஒரே சுரேஷ் சக்ரவர்த்தி மகாத்மியம் என்று தோன்றலாம்.

நேற்று சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ‘அன்புடன் ரம்யாகிருஷ்ணன்’ என்றொரு புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். 

அதில் ரம்யாவின் நண்பர்களில் ஒருவராக சுரேஷ் சக்ரவர்த்தியும் பங்கேற்று ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் தயிர்ச்சாத ரெஸிப்பி சொல்லி அனைவரையும் சிரி, சிரியென்று சிரிக்க வைத்தார்.

இப்போது மேலதிக தகவலாக ஒன்று இன்றைய தேதிக்கு சுரேஷ் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ‘பனானா ட்ரீ’ என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரென்ட் வைத்து நடத்தி வருகிறாராம். இங்கிருந்து அங்கே படப்பிடிப்புக்காகச் செல்லும் கோலிவுட் நண்பர்களுக்கு படப்பிடிப்பு ரீதியாக உதவுவதும் அவர் தான் என்கிறார்கள்.

நகைச்சுவை நடிப்பில் பலவகைகள் இருக்கலாம். அதில் யூகி சேது, மோகன் வெங்கட்ராம், சுரேஷ் சக்ரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, கோவை அனுராதா வகைக் காமெடி தனி ரகம். அந்த வகைக் காமெடிகளுக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடையே!

அந்த வகையில் தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் காமெடியன்கள் பலர் இருக்கலாம், ஆனாலும் வி மிஸ் யூ சுரேஷ் சக்ரவர்த்தி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com