தமிழகத்தை விட கேரளாதான் பெஸ்ட் : எதைச் சொல்கிறார் பார்த்திபன்? 

கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது என்று 'கேணி' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்தார்.  
தமிழகத்தை விட கேரளாதான் பெஸ்ட் : எதைச் சொல்கிறார் பார்த்திபன்? 
Published on
Updated on
1 min read

சென்னை: கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது என்று 'கேணி' திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தெரிவித்தார்.  

மலையாள இயக்குநர் எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் ஒரே நேரம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகி  இருக்கும் படம் "கேணி".  முழுக்க முழுக்க கேரளா - தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, அங்கு நிலவக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.

இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனுஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ‘பிளாக்’ பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளியன்று நடைபெற்றது. அதில் ஜெயப்ரதா, பார்த்திபன், ரேவதி, ரேகா, அனுஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக சுஹாசினி கலந்துகொண் டார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் பார்த்திபன் பேசியதாவது:

நமது நாடு பசுமைப் பூங்காவாக மாற வேண்டுமெனில் தண்ணீர் முக்கியமாக தேவை. ஆன்மீக அரசியலைப் பற்றி சமீபத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள், இது நீர்மீக அரசியல் பேசும் படம். இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சினை தீர வேண்டுமெனில் நதிகளை இணைக்க வேண்டுமென எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு மனித மனங்களை இணைக்க வேண்டும். அப்படி இதயங்களை இணைக்கும் ஒரு படமாக நிச்சயமாக “கேணி” இருக்கும்.

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பு கேரள எல்லைக்குள் பிரிக்கப்படுகிற தமிழகத்தைச் சேர்ந்த கிணற்றுக்காக கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து தமிழர் ஒருவர் போராடுவதே “கேணி” படத்தின் கதை.. பொதுவாக நீர் பிரச்சனை என்பது தமிழர்கள் சம்பந்தப்பட்டதோ, மலையாளிகள் சம்பந்தப்பட்டதோ இல்லை. அது மனிதர்கள் சம்பந்தப்பட்டது. தண்ணீரை வைத்துக் கொண்டு கேரளாவோ தமிழ்நாடோ அரசியல் செய்யலாம், ஆனால் கலைஞர்கள் அந்த அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்கள்.

தமிழகத்தை விட கேரளாவில் கலைஞர்களுக்கான சுதந்திரம் என்பது அதிகமாக இருக்கிறது, அங்கே திருவனந்தபுரம் ராஜாவைக் கூட விமர்சனம் செய்யலாம், இங்கே யாரையுமே விமர்சனம் செய்ய முடிவதில்லை. அதனால் தான் நல்ல விசயத்தை சொல்லும் இந்த “கேணி” படத்திற்குள் என்னையும் இணைத்துக் கொண்டேன்.

தமிழகத்தில் இப்போதெல்லாம் சகிப்புத் தன்மை இல்லாமல் போய்விட்டது. அந்த வகையில் பார்க்கப் போனால் கருத்து சுதந்திரத்தில் தமிழகத்தை விட கேரளம் சிறந்து விளங்குகிறது. இந்தப் படம் நல்ல தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும் என்பது பாராட்டிற்குரியது.

இவ்வாறு பார்த்திபன் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com