கமல் முன்பு பாடிய ராகேஷ் உன்னிக்குக் குவியும் திரைப்பட வாய்ப்புகள்! வாக்குறுதி அளித்துள்ள இசையமைப்பாளர்கள்!

உனைக் காணாது நான் இன்று நான் இல்லையே . . .பாடினார். கலங்கினார். கலங்கினோம்...
கமல் முன்பு பாடிய ராகேஷ் உன்னிக்குக் குவியும் திரைப்பட வாய்ப்புகள்! வாக்குறுதி அளித்துள்ள இசையமைப்பாளர்கள்!

சமூகவலைத்தளங்களின் வளர்ச்சியால் இனி எந்த உண்மையான திறமைக்கும் வெளிச்சம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை உருவாகியுள்ளது.

விஸ்வரூபம் படத்தில் ஷங்கர் மகாதேவன் பாடிய உனைக் காணாது பாடலை ஒருவர் அற்புதமாகப் பாடிய விடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் சில நாள்களுக்கு முன்பு அதிகமாகப் பகிரப்பட்டது. தோட்டத்தில் அமர்ந்துகொண்டு சாதாரண தோற்றம் கொண்ட ஒருவர் மிகவும் லயித்து இந்தப் பாடலைப் பாடிய விடியோவைப் பலரும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார்கள். 

அந்த விடியோ ஷங்கர் மகாதேவன் கவனத்துக்கும் சென்றது. அதனைத் தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த ஷங்கர் மகாதேவன், பாடகரைப் பற்றிய தகவல்களைத் தனக்குத் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறியதாவது: 

இதைக் கேட்கும்போது, இந்த நாட்டின் மீது பெருமையாக உள்ளது. கலாசாரத்தில் மிகவும் வலிமையாக இருப்பதுடன் இதுபோன்ற பல திறமைகளையும் கொண்டுள்ளது. யார் இவர்? இவரை நான் எப்படிக் கண்டுபிடிப்பது? இதுகுறித்து எனக்கு உதவி தேவை. இவருடன் இணைந்து பணிபுரிய விருப்பம் என்று கூறினார். 

இவரைப் பற்றி விசாரித்த இசையமைப்பாளர் கோபி சுந்தருக்குப் பின்னர் அவருடைய தொடர்பு எண் கிடைத்தது. ஷங்கர் மகாதேவனுக்கும் கிடைக்கவே, உடனடியாக வெளியுலகுக்கு அறிமுகமானார் ராகேஷ்.

இதையடுத்து ஷங்கர் மகாதேவன் அடுத்த ட்வீட் ஒன்றை வெளியிட்டார். இணையத்தின் வலிமை காரணமாக அந்தப் பாடகரைக் கண்டுபிடித்துவிட்டேன். அவரிடம் பேசினேன். இனிமேல் நல்ல விஷயங்கள் நடக்கும். எனக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார். 

அந்தப் பாடகரின் பெயர் ராகேஷ் உன்னி என்றும் கேரளாவின் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் என்றும் தினக்கூலியில் ஈடுபடும் மரத் தொழிலாளி என்று அனைவரும் தேடிய பாடகரின் தகவல்கள் வெளியாகின. ராகேஷின் அன்றாடப் பணி - மரத்தை வெட்டி அதை வண்டியில் தூக்கிச்சென்று வைக்கவேண்டும். அவருடைய நண்பர் ஷமீர், ராகேஷ் ஓய்வு நேரத்தில் பாடியதை விடியோ எடுத்து அதனைச் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார். அதுதான் இப்போது ராகேஷ் உன்னியை வெளியுலகுக்கு அறிமுகம் செய்துவைத்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவனும் ராகேஷ் உன்னியின் விடியோவை ட்விட்டரில் பகிர்ந்து, அதை பல இசையமைப்பாளர்களுக்கு டேக் செய்து, அவருக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டார். கோபி சுந்தர், ஷங்கர் மகாதேவனின் தீவிரத் தேடலின் இன்று பின்னணிப் பாடகராகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ராகேஷ். அதிலும் அவர் கமலை நேரில் சந்தித்துப் பாடியது மேலும் அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது.

கமலின் அழைப்பின்பேரில் நேற்று சென்னை வந்த ராகேஷ், கமலை நேரில் சந்தித்துள்ளார். அவர் முன்னிலையில், விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற, உன்னைக் காணாது நான் இன்று நான் இல்லையே பாடலைப் பாடிக் காண்பித்துள்ளார். அப்போது, தன்னுடைய அடுத்தப் படத்தில் ராகேஷ் பாடுவதற்கான வாய்ப்பை நிச்சயம் அளிப்பதாக கமல் வாக்குறுதி அளித்துள்ளார். 

இதுகுறித்து கமலின் நண்பரும் இயக்குநருமான சுகா ஃபேஸ்புக்கில் எழுதியுள்ளதாவது: 

கலைஞன் . . .

சுதீஷ் ராமச்சந்திரன் மூலமாகத்தான் ராகேஷைப் பிடிக்க முடிந்தது.

‘தமிழ் தெரியாதேன்னு தயங்கறார், ஸார். நீங்கதான் மலையாளம் பேசிடுவீங்களே! தைரியம் சொல்லி அனுப்பி வைக்கிறேன்!’

தன் ஆதர்ஸ கலைஞனை நேரில் பார்த்த ராகேஷுக்கு முதலில் சில நொடிகளுக்கு பேச்சே வரவில்லை.

‘எனிக்கி பறயான் அறியில்லா ஸாரே!’

தொண்டை வறண்டு, எச்சில் முழுங்கியபடி சொன்னர் ராகேஷ்.

‘பறயண்டா! பாடியாள் மதி!’ என்றார்.

உனைக் காணாது நான் இன்று நான் இல்லையே . . .

பாடினார். கலங்கினார். கலங்கினோம் 

என்று சுகா எழுதியுள்ளார்.

ஜிப்ரான், சாம் சிஎஸ், கோபி சுந்தர் போன்ற இசையமைப்பாளர்கள் தாங்கள் பணியாற்றும் படங்களில் ராகேஷ் உன்னிக்கு வாய்ப்பளிக்க ஆர்வமாக உள்ளார்கள். 

அடுத்தச் சில நாள்களில் ராகேஷ் பாடும் பாடலைப் பதிவு செய்யப்போகிறேன். நானும் கஷ்டப்பட்டுத்தான் இந்நிலைக்கு வந்துள்ளேன். எனவே இவரைப் போன்ற ஒரு திறமையை அறிமுகப்படுவதில் பெருமை கொள்கிறேன் என்று சாம் சிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.

கமல் முன்பு ராகேஷ் பாடும் பாடலைப் பகிர்ந்துள்ள ஜிப்ரான், இது நடந்துள்ளது. என் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. தினமும் நம்பிக்கையுடன் என்னை எழவைப்பது இதுதான் - திறமையும் கடின உழைப்பும் கவனம் பெறாமல் போகாது. கமல் சார் முன்னிலையில் ராகேஷ் பாடும் விடியோ இது. விரைவில் அவர் பாடும் பாடலைப் பதிவு செய்யவுள்ளேன் என்று ட்வீட் செய்துள்ளார் ஜிப்ரான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com