
நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா பழம்பெரும் நடிகரும், தனது தந்தையும் முன்னாள் ஆந்திரப் பிரதேச முதல்வருமான நந்தமூரி தாரக ராமாராவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் இருக்கிறார் என்பது திரை ரசிகர்கள் அனைவரும் அறிந்த செய்திதான். அத்திரைப்படத்தை இயக்கவிருப்பது தெலுங்கு இயக்குனர் கிரிஷ் ஜகர்லமுடி. இவர் ‘மகாநடி’ திரைப்படத்தில் இயக்குனர் நாகி ரெட்டியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். என்.டி.ஆர் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கிய அதே நாளில், கடந்த மார்ச் மாதம் ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியது. பாலகிருஷ்ணா துரியோதனன் வேடத்தில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அது என் டி ஆர் 1977-ம் ஆண்டு ‘தான வீர சூர கர்ணா’ என்ற திரைப்படத்துக்காக ஏற்ற வேடம்.
இத்திரைப்படத்தில் பாலகிருஷ்ணா, அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார். நாகேஸ்வர ராவ் அலைஸ் என்.டி.ஆர். வேடம் ஏற்கவிருப்பவர் நாகேஸ்வர ராவின் பேரனும் நடிகருமான சுமந்த். நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த கீர்த்தி சுரேஷ் இத்திரைப்படத்திலும் அதே வேடம் ஏற்கிறார். என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலன் நடிக்கிறார். ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வராக இருந்த நாடென்ட்ல பாஸ்கர ராவ் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் பரேஷ் ரவால் நடிக்கிறார்.
என்.டி.ஆரின் மனைவி வேடம் என்றாலும், அவரை எதிர்த்து செயல்படுபவராக கதையில் உள்ளதால் முதலில் நடிக்கத் தயக்கம் காட்டிய வித்யாபாலன், பிறகு சம்மதித்துள்ளாராம். அண்மையில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டுள்ளார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தெலுங்கு திரை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் பிரமுகர்களும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படம் இதுதான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.