மும்பை குண்டுவெடிப்பில் சஞ்சய் தத்துக்கு உள்ள தொடர்பை முதலில் வெளியிட்ட பத்திரிகையாளர், சஞ்சு படத்தைப் பார்க்க மறுப்பு!

ஆயுதங்களைத் தங்கள் வீட்டில் வைத்திருக்கச் சொன்னதை அவர் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால் குண்டுவெடிப்பு நிகழாமலும்...
மும்பை குண்டுவெடிப்பில் சஞ்சய் தத்துக்கு உள்ள தொடர்பை முதலில் வெளியிட்ட பத்திரிகையாளர், சஞ்சு படத்தைப் பார்க்க மறுப்பு!

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்கு துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக நடிகர் சஞ்சய் தத்துக்கு எதிராக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே அவரை மகாராஷ்டிர அரசு விடுவிக்க உத்தரவிட்டது.

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியானது.

இந்நிலையில் சஞ்சய் தத் - 1993 தொடர் குண்டு வெடிப்பு தொடர்புடைய செய்தியை முதல்முதலில் வெளியிட்ட க்ரைம் நிருபர், பல்ஜீத் பர்மர். இவருடைய கட்டுரை வெளியான அடுத்த ஐந்தாவது நாளில் மும்பைக் காவல்துறையால் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார். 

இந்த வழக்கின் பின்னணி குறித்து தி குயிண்ட் ஊடகத்துக்கு பல்ஜீத் அளித்த விடியோ பேட்டியின் தொகுப்பு:

மஹிம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகளில் பவாரும் ஒருவர். பவார் ஒருநாள் காரில் ஏறியபோது வழக்கு குறித்து கேட்டேன். அவசரத்தில் பதில் அளித்த அவர், ஒரு எம்.பி.-யின் மகனுக்கும் இதில் தொடர்பிருப்பதாகப் பிடிபட்டவர்கள் கூறினார்கள் என்றார். 

அப்போது மும்பைக்கு 6 எம்.பி.க்கள் இருந்தார்கள். எனக்கு அவர்கள் அனைவரையும் தெரியும். சுனில் தத்தைத் தவிர மற்ற அனைவரும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். இன்னொரு அதிகாரி அருப் பட்னாயிக் என்னிடம் அடுத்த நாள் மஹிமுக்கு வரச் சொன்னார். அவரிடம், எம்.பி.யின் மகனை விசாரித்துவிட்டீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை என்றார். எம்.பி.யின் மகன் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதாகக் கூறினார். அவ்வளவுதான் எல்லாம் புரிந்துவிட்டது. 

எனக்கு சஞ்சய் தத்தை நன்குத் தெரியும். எனவே இதுபற்றி விசாரித்துக்கொள்ள அவர் வீட்டுக்கு போன் செய்தேன். உதவியாளர்கள் போனை எடுத்தார்கள். சுனில் தத் வெளியே உள்ளார் என்றார்கள். மற்றவர்களிடம் விசாரித்தேன். ஜெர்மனி சென்றுள்ளதாகக் கூறினார்கள். பிறகு என் பழைய நண்பரிடம் விசாரித்தபோது, அவர் லண்டனில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அப்போதுதான் சுனில் தத்துக்கு என்னிடம் பேசப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது. உடனே சுனில் தத் பற்றிய செய்தியை நான் வெளியிடப்போகிறேன் என்பதை அவருக்குத் தெரியப்படுத்திவிடுங்கள் என்று தகவல் சொல்லி அனுப்பினேன். 

உடனடியாக, மகன் சஞ்சய் தத்திடமிருந்து எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. என் தந்தையை எதற்காகத் தேடுகிறீர்கள் என்று அவர் என்னிடம் கேட்டார். நான் அவரிடம் சொன்னேன், உங்களிடம் ஆயுதங்கள் ஏதாவது இருந்தால் உடனே அதை ஒப்படைத்துவிடுங்கள் என்றேன். ஏனெனில் அவருடைய நண்பர்களைக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்கள் அவர் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். ஏகே - 56 ரைபிளும் கையெறி குண்டுகளும் சிறிய ஆயுதங்களையும் நீங்கள் வைத்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளார்கள் என்றேன். பிறகு மொரீசியஸில் இருந்து சஞ்சய் தத் என்னிடம் பேசினார். தன் தந்தையிடம் அவர் பேசியதாகவும் எல்லாவற்றையும் செட்டில் செய்துவிட்டதாகவும் அந்தக் கட்டுரையை நீங்கள் எழுதிய வேண்டியதில்லை என்றும் கூறினார். அப்போதும் நான் சொன்னேன், உங்களிடமுள்ள ஆயுதங்களை ஒப்படையுங்கள். பிறகு பந்த்ரா காவல் நிலையத்தில் சரண் அடைந்துவிடுங்கள். அவர்கள் உங்கள் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொள்வார்கள் என்றேன். ஆனால் தன்னிடமுள்ள ரைஃபிளைப் பாதுகாப்புக்காக வைத்திருப்பதாகக் கூறினார். நான் சொன்னேன், அது ஒன்றும் பாதுகாப்பு ஆயுதம் அல்ல. அது தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஆயுதம் என்றேன். அவர் எல்லாவற்றையும் அனைவரிடமிருந்தும் மறைத்துவிட்டார். உதவியாளர்களைக் கொண்டு சில ஆயுதங்களைத் திரும்பக் கொடுத்துவிட்டாலும் ரைஃபிளைத் தன்னிடம் வைத்துக்கொண்டார். 

ஆயுதங்கள் தத் வீட்டில் இருந்தசமயம் குண்டுவெடிப்பு நிகழவில்லை. ஆயுதங்களைத் தங்கள் வீட்டில் வைத்திருக்கச் சொன்னதை அவர் காவல்துறையிடம் தெரிவித்திருந்தால் அவர்கள் உஷாராகியிருப்பார்கள். குண்டுவெடிப்பு நிகழாமலும் போயிருக்கலாம். ஆனால் அந்த ஆயுதங்கள் எங்கிருந்து வந்துள்ளன என்கிற கேள்வியை சஞ்சய் தத் கேட்கவில்லை. அல்லது எதற்காக அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளன என்றும் கேட்க அவருக்குத் தோன்றவில்லை. என்னுடைய கட்டுரை வெளியானபிறகு சுனில் தத், சஞ்சய் தத் ஆகியோரின் புகழுக்குக் களங்கம் விளைவித்துள்ளதாக ராம் ஜெத்மலானி அலுவலகத்திலிருந்து ரூபாய் ஒன்றரைக் கோடிக்கு வக்கீல் நோட்டீஸ் எனக்கு அனுப்பப்பட்டது. ராம் ஜெத்மலானி எனக்கு குரு போல. நோட்டீஸ் குறித்து அவரிடம் கேட்டேன். நோட்டீஸைக் கிழித்துப் போடு என்றார். தத்கள் இதற்காக அவருக்குப் பணம் அளித்துள்ளதாகவும் அவர் கையெழுத்து போடாமல் இருந்திருந்தாலும் ஒன்றும் வித்தியாசம் இருந்திருக்காது என்று கூறினார். எனவே நானும் அந்த நோட்டீஸை எறிந்துவிட்டேன். 

அடுத்தநாள் அந்தக் கட்டுரையின் தொடர்ச்சியை வெளியிட்டேன். சஞ்சய் தத்துடன் பேசியது குறித்து. அதற்கும் ஒரு நோட்டீஸ் வந்தது. எல்லோரும் எல்லாவற்றையும் மறுப்பதால் என் பத்திரிகை ஆசிரியர் கவலைப்பட்டார்.

19-ம் தேதி சஞ்சய் தத் திரும்பி வந்தபோது கிரைம் பிராஞ்ச் காவலர்கலால் கைது செய்யப்பட்டார். காலை 8 மணிக்கு சஞ்சய் தத் கைதானபோது பத்திரிகையாளர்களில் நான் மட்டுமே அங்கு இருந்தேன். சஞ்சய் தத் நல்ல மனிதர்தான். சிறையில் இருந்தபோது தினமும் அவரைப் பார்ப்பேன். தனக்குத் தலையணை வழங்கப்படாததால் தூங்கமுடியவில்லை என்றார். என் காரிலிருந்து தலையணை எடுத்து வந்து அவருக்குக் கொடுத்தேன். தன் வாழ்க்கை குறித்து என்னிடம் நிறைய பேசுவார். குடும்ப வன்முறையில் தான் பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாகச் சொல்வார். அவருடைய கதையின் சாரம் இதுதான். போதைக்கு அடிமையானதால் ஸ்பூன் முதல் ஹாக்கி ஸ்டிக் முதற்கொண்டு அவற்றால் தாக்கப்பட்டுள்ளார். அப்போதுதான் அவருடைய உடலின் வயதை விடவும் மனது இன்னமும் இளமையாக இருப்பதாக உணர்ந்தேன் என்று பேட்டியளித்துள்ளார். 

இந்நிலையில் சஞ்சு படத்தைத் தான் காணப்போவதில்லை என்று பல்ஜீத் பர்மர் ஃபேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த இரு நாள்களாக நான் சஞ்சு படத்தைக் காணவேண்டும் என்று நூற்றுக்கணக்கான கோரிக்கைகள் வந்துள்ளன. முதலில் நான் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். நான் தீவிர சினிமா ரசிகன் அல்லன். கடைசியாக நான் படம் பார்க்கச் சென்றது 1997-ல். திரைத்துறையை மிகவும் நெருக்கத்திலிருந்து நான் பார்த்து வந்துள்ளேன். திரைத்துறையில் எனக்கு நெருங்கிய நண்பர்கள் இருந்தாலும் அவர்களிடம் திரைப்படங்கள் குறித்து விவாதித்ததில்லை. நிழல் உலகம் குறித்துதான் அவர்களிடம் பேசியுள்ளேன். 

சஞ்சு படத்தைப் பற்றியோ அல்லது அதன் கதாநாயகன் சஞ்சய் தத்தின் நல்லது, கெட்டது குறித்து பேசுவது நேர விரயம். ஹிரானியும் அவரது குழுவினரும் விரைவாகப் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டுள்ளார்கள். இது அவர்களுக்கு வியாபாரம். அவர்கள் விரும்பியதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. கற்பனைக் கதைகளை வடிவமைப்பது அவர்களது பணி. உண்மைத் தகவல்களை அல்ல. கற்பனைகள் மென்மையாக இருக்கும். உண்மைகள் கடினமானவை. ஒன்றைச் சுலபமாக உருவாக்கமுடியும். இன்னொன்றைத் திரட்ட மிகவும் சிரமப்படவேண்டும்.

வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஏற்றாற்போல எடுக்கப்படுபவை.சமூகத்தில் குறை கண்டுபிடிப்பது, போதை மருந்துப் பழக்கத்தின் நன்மை, தீமைகள், பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளுதல், ஊடகம் குறித்த விமரிசனங்கள், கடந்தகால நடவடிக்கைகளுக்கு வருந்தாதது, பரிதாப உணர்ச்சியைத் தூண்டுவது போன்றவைதான் சஞ்சு படம் என்றால், திரையரங்குகளிலிருந்து தள்ளி இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தது குறித்து நான் வருந்தமாட்டேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com