என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்கள் குறித்து எனக்குக் கவலையில்லை: சர்ச்சை குறித்து இயக்குநர் மிஷ்கின் பதில்!

மிஷ்கினின் பேச்சை, அவர் மம்மூட்டியின் நடிப்பைப் பாராட்டுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்..
என் பேச்சால் மனவருத்தம் அடைந்தவர்கள் குறித்து எனக்குக் கவலையில்லை: சர்ச்சை குறித்து இயக்குநர் மிஷ்கின் பதில்!
Published on
Updated on
2 min read

கற்றது தமிழ், தங்க மீன்கள் எனப் படத்துக்குப் படம் தமிழ் ரசிகர்களின் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருபவர் இயக்குநர் ராம். இவரின் அடுத்தப் படமாக உருவாகியுள்ள பேரன்பு வெளிவருவதற்கு முன்பே பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படம் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 

மம்மூட்டி, சரத்குமார், அஞ்சலி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் பேரன்பு படத்தில் நடித்துள்ளார்கள். தங்க மீன்கள் படப் புகழ் பேபி சாதனா மம்மூட்டியின் மகளாக நடித்துள்ளார். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நா. முத்துக்குமாரின் மறைவால் தற்போது ராம் - யுவன் - வைரமுத்து என்கிற புதிய கூட்டணி ஒன்று இந்தப் படத்தில் உருவாகியுள்ளது. கருணாகரன், சுமதி ராம் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராமின் நண்பரும் இயக்குநருமான மிஷ்கின் பேசியது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த விழாவில் மம்மூட்டி குறித்து மிஷ்கின் பேசியதாவது:

இந்தப் படத்தில் ஒரு குளோஸ் அப் காட்சி ஒன்று உண்டு. தமிழ் சினிமாவின் முக்கியமான காட்சி அது. தன் மகளின் ஒரு செயலைக் கண்டு திடுக்கிடும் தந்தையின் உணர்வை வெளிப்படுத்தும் காட்சி அது. அந்தக் காட்சியில் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் மம்மூட்டி. வேறு யாராவது அக்காட்சியில் நடித்திருந்தால் பயந்திருப்பேன். வேறு மாதிரி ஆகியிருக்கும். 

இந்தப் படத்தில் நடிக்க மம்மூட்டியைத் தேர்வு செய்தது அருமையான தேர்வு. இந்தப் படம் முழுக்க மம்மூட்டியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். மம்மூட்டி சாருக்குக் கொஞ்சம் வயது கம்மியாக இருந்திருந்தால், நான் பெண்ணாக இருந்திருந்தால் அவரை நான் காதலித்திருப்பேன். நான் பெண்ணாக இருந்திருந்தால் அவரை ரேப் செய்திருப்பேன். இந்தப் படம் நடிப்பு குறித்த ஒரு பாடமாக உள்ளது. எப்படி நடிக்காமல் இருப்பது என்பதற்கு. இந்தப் படத்தில் அவர் நடிக்கவேயில்லை. நடித்துக் கொட்டவேயில்லை. அதற்காகவாவது இந்தப் படத்தைப் பாருங்கள். எப்படியாவது சர்ச்சையை உருவாக்கினால் இந்தப் படம் ஓடும். பேரன்பு ஆயிரம் நாள்கள் ஓடவேண்டும் என எண்ணுகிறேன் என்று பேசினார்.

இதன் காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியானதையடுத்து மம்மூட்டி குறித்த மிஷ்கினின் பேச்சுக்குக் கடும் கண்டனங்கள் எழுந்தன. பெண்களை அவமானப்படுத்தும் விதமாக மிஷ்கின் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு இந்தச் சர்ச்சை குறித்து இயக்குநர் மிஷ்கின் பதில் அளித்ததாவது:

நான் ஒரு படத்தின் கதை வேலையில் மும்முரமாக உள்ளேன். என் பேச்சால் மன வருத்தம் அடைந்தவர்கள் குறித்து எனக்குக் கவலையில்லை என்று கூறியுள்ளார். 

இயக்குநர் ஏ.எல். விஜய், மிஷ்கின் பேச்சு குறித்துப் பேட்டியளித்ததாவது: மிஷ்கினின் பேச்சை, அவர் மம்மூட்டியின் நடிப்பைப் பாராட்டுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு சர்ச்சையை உருவாக்கக் கூடாது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com