இந்த ஒரு காரணத்துக்காக பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க விரும்பவில்லை: மவுனிகா

தான் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே மவுனிகாவுடனான தனது உறவை துண்டித்த பாலுமகேந்திரா, அந்தப் பிரிவுக்கான காரணத்தைப் பற்றி ஒருபோதும் மவுனிகாவிடம் விளக்கமளிக்க முயற்சித்ததில்லை என்கிறார் மவுனிகா.
இந்த ஒரு காரணத்துக்காக பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட மன்னிக்க விரும்பவில்லை: மவுனிகா

நடிகை மவுனிகாவுக்கும், மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவுக்குமான ஆத்மார்த்தமான உறவைப் பற்றி திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். பாலுமகேந்திராவே மவுனிகாவுடனான தனது உறவை ‘அவரும் எனக்கொரு துணைவி’ என்ற தலைப்பில்  பலமுறை நேர்காணல் மூலமாக அறியத் தந்திருக்கிறார். தமிழ் சினிமா உலகின் ஜாம்பவனாகத் திகழ்ந்த பாலுமகேந்திரா இறந்து 4 வருடங்கள் கழிந்த நிலையில் தற்போது மவுனிகா, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் 4 அக்காக்களில் ஒருவராக நடித்திருக்கிறார்.

மவுனிகா 1985 ஆம் ஆண்டில் பாலுமகேந்திராவின் ‘உன் கண்ணில் நீர் வழிந்தால் திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். அந்தப் படத்தில் ஒரே காட்சியில் வந்து சென்றாலும் அதன் பின் பாலுமகேந்திராவின் ‘வண்ண வண்ணக் கனவுகள் திரைப்படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்திருந்தார். அத்திரைப்படத்தைத் தொடர்ந்து மவுனிகாவுக்கு திரை வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தன. ஆயினும் பாலுமகேந்திராவுடனான உறவின் காரணமாக மவுனிகா திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தாமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கிவிட்டார். சின்னத்திரையில் ஒரு காலகட்டத்தில் மவுனிகாவின் நடிப்பில் 5 ஆண்டுகளைக் கடந்து ஓடி வெற்றி கண்ட தொடர்கள் எல்லாம் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், அந்த நடிப்புக்கும் கூட முழுக்குப் போட்டார் மவுனிகா. காரணம் பாலுமகேந்திராவின் பிரிவு.

தான் இறப்பதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே மவுனிகாவுடனான தனது உறவை துண்டித்த பாலுமகேந்திரா, அந்தப் பிரிவுக்கான காரணத்தைப் பற்றி ஒருபோதும் மவுனிகாவிடம் விளக்கமளிக்க முயற்சித்ததில்லை என்கிறார் மவுனிகா. அவர் உயிரோடு இருக்கும் போதே நிகழ்ந்த அந்தப் பிரிவு தன்னை மனதளவில் மிகவும் உருக்கியதாகக் குறிப்பிடும் மவுனிகா, பிரிவின் போது ஒரே ஒருமுறை பிரிவுக்கான காரணமாகத் தனது வயோதிகத்தை குறிப்பிட்டு பாலுமகேந்திரா தனக்கொரு கடிதம் அனுப்பியதாகத் தெரிவிக்கிறார். அந்தக் கடிதத்தில் . தனது வயோதிகத்தை மவுனிகாவின் மேல் சுமத்த பாலுமகேந்திரா விரும்பாததால் தான் அந்தப் பிரிவு நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார், ஆனால், அதை ஒரு போதும் தன்னால் ஏற்றுக் கொள்ளவே முடிந்ததில்லை எனவும், அந்த ஒரு காரணத்திற்காகவே பாலுமகேந்திராவின் ஆன்மாவைக் கூட தான் தற்போதும் மன்னிக்க விரும்பவில்லை எனவும் மவுனிகா சமீபத்திய தனது நேர்காணலொன்றில் தெரிவித்துள்ளார்.

28 வருடங்கள் தன்னுடன் வாழ்ந்த ஒரு மனிதர், தன்னைப் பற்றி எப்படி இப்படி நினைக்கலாம். வயோதிகம் தம்பதிகளுக்கிடையிலான பிரிவுக்கு ஒரு காரணமாகலாமா? என்ற ஆற்றாமையில் தான் கடந்த 4 ஆண்டுகளாக அவரது இழப்பிலிருந்து வெளிவர முடியாமல் தவித்ததாகக் குறிப்பிடும் மவுனிகா, தான் எப்போதும் வாய்ப்பு கேட்டு பிறரை அணுகியதில்லை என்பதால் தொடர்ச்சியாக திரைப்படங்களிலோ, சின்னத்திரையிலோ நடிக்க முடியாமல் போயிருக்கலாம். ஆயினும் தன்னை தேடி வந்து வாய்பளிப்பவர்களின் படங்களில் நடிக்க தான் எப்போதும் தயங்கியதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அதோடு பாலுமகேந்திரா மீதான காதலுக்கு காரணம் அவரது திரைப்படங்களே எனவும், ஒருவேளை பாலுமகேந்திராவின் காதல் தனக்கு கிடைத்திராமல் போயிருந்தால் தன் அம்மா, அண்ணன் ஆகியோரது எதிர்பார்ப்பின் படி தானொரு வெற்றிகரமான நாயகியாகச் சில காலம் தமிழ் சினிமாவில் வலம் வந்திருக்கக் கூடுமமோ என்னவோ! என்றும் அவர் குறிப்பிட்டார்.

video courtesy: thanthi TV
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com