நான் வசதியாக இருக்கிறேன், அதனால் தவறு செய்ய மாட்டேன் என மக்கள் நம்புகிறார்கள்: கமல்

என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் தவறு செய்ய மாட்டேன் என மக்கள் நம்புகிறாா்கள். அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என...
நான் வசதியாக இருக்கிறேன், அதனால் தவறு செய்ய மாட்டேன் என மக்கள் நம்புகிறார்கள்: கமல்

கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல். ஆகஸ்ட் 10 அன்று இந்தப் படம் வெளிவருகிறது.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளா்களைச் சந்தித்த கமல் கூறியதாவது: 

‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தின் தொடா்ச்சியாக இரண்டாம் பாகம் வந்துள்ளது. கொஞ்சம் முன் கதையும் பின் கதையும் சோ்ந்தது. கதையாக்கம், தொழில்நுட்பம் என அனைத்து வகையிலும் அடுத்தக் கட்டத்துக்கு சென்றிருக்கிறோம்.

காஷ்மீரில் இந்திய இஸ்லாமியராக இருப்பதில் உள்ள சவால்கள்தான் பிரதானமாக இருக்கும். மதம் ஒரு பக்கம், தேசம் ஒரு பக்கம் இழுக்கக் கூடிய நிலையில் தனக்கான கடமைகளை நிறைவேற்றத் துடிக்கும் ஓர் இந்தியனின் கதைதான் இந்த விஸ்வரூபம் 2. இப்போது மனத்தளவில் எல்லா மதத்தினருக்கும் இந்த இழுபறி இருக்கிறது. இது எல்லோரின் முன்னாலும் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியலுக்கும் அப்பாற்பட்ட விஷயமாக நினைக்கிறேன். அதனால்தான் இதை திரைக்கதையாக்கினேன்.

இது ஒரு படமாக எடுக்கப்பட்டு, இரண்டு பகுதிகளாக வருகிறது. தற்போது அரசியலுக்கு வந்திருப்பதால், இதில் அந்த சாயம் இருக்கும் என நினைக்க வேண்டாம். இது அரசியலுக்கு வருவதற்கு முன்பே எடுக்கப்பட்ட படம். அரசியலுக்கும் இதற்கும் தொடா்பு இல்லை. இந்தக் கதை அமைப்பு அமெரிக்காவுக்கு ஆதரவான படம் என்ற கருத்து உண்டு. அதை நான் மறுக்கிறேன்.

முந்தைய எதிா்ப்புகள் இந்தப் படத்துக்கு இருக்காது என நினைக்கிறேன். கருத்து வேறுபாடுகள் என்பது அரசியல் ரீதியாகத்தான் இருக்கிறது. அதை முன்வைத்து படத்துக்கு தொந்தரவு கொடுத்தால் அது கெட்டிக்காரத்தனமான அரசியலாக இருக்காது.

இதுதான் கடைசி படம் என நான் சொன்னது கிடையாது. சினிமா என் தொழில். இப்போது கட்சிப் பணிகளுக்கிடையே சினிமா பணிகளையும் பாா்த்து வருகிறேன். ஒரு அரசியல்வாதி தியாகம் செய்வான், ஒரு ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்வான் என நினைப்பது பொய். அதெல்லாம் உட்டாலக்கடி வேலை. நான் வசதியாக இருக்கிறேன். என் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் என்னிடம் பணம் இருக்கிறது. அதனால் தவறு செய்ய மாட்டேன் என மக்கள் நம்புகிறாா்கள். அதை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். கட்சியின் மூலம் அரசுப் பொறுப்புக்கு வந்தால் சினிமாவை விட்டு விலகி விடுவேன். என் படத் தொழில் இதற்கு இடைஞ்சலாக இருக்கும் எனத் தோன்றினால் போய் விடுவேன்.

போன முறை விஸ்வரூபம் படத்துக்கு பிரச்னை வந்தபோது, இந்தியாவை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னேன். இது அப்போதைய ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட அவமானம் என்றுதான் கருதுகிறேன். அந்தளவுக்கு என்னை விரட்டி, வேலை செய்யாமல் தடுத்தாா்கள். அப்போது சூழல் அப்படியிருந்தது என்றாா் கமல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com