குழந்தைப் பேற்றுக்குப் பின் நடிகைகள் குண்டானால் அதைக் கேலிக்குரிய விஷயமாக சமூக ஊடகங்கள் கையாள்வது என்னவிதமான மனநிலை?!
ஒருபக்கம் நடிகைகள் வயது ஏற ஏற அழகு குறையக் கூடாது என்பதற்காக அதிகளவில் காஸ்மெடிக் சர்ஜெரி செய்வதால் தான் சீக்கிரத்தில் இறந்து போகிறார்கள் என பசுத்தோல் போர்த்திய புலிகளாக நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டே மறுபுறம் யாராவது பிரபல நடிகைகள் குழந்தைப்பேற்றினால் தோற்றம் சற்றே பூசினாற் போல மாறினால், ஐயோ இதென்ன இவர் இப்படியாகி விட்டார்?! ரன் படத்தில் எப்படியிருந்த மீரா ஜாஸ்மின் இப்போது இப்படியாகி விட்டாரே?! மிஸ் வேர்ல்டு ஐஸ்வர்யா ராயா இது? முகம் பூசனிக்காய் மாதிரியாகி விட்டதே, ராய் இனி பழைய ராய் ஆக முடியாது, எல்லாம் திருமணமாகி குழந்தை பெற்றதால் வந்த மாற்றம் என்று நரித்தனமாக சமூக வலைத்தளங்களிலும், யூ டியூபிலும் சோக ஸ்மைலி தட்டுவது. இதெல்லாம் நியாயமா? இப்படியான விமர்சனங்களுக்கு ஆளான நடிகைகள் ஒருவரா? இருவரா?
ஐஸ்வர்யா ராய் முதல் சரண்யா மோகன், நஸ்ரியா நசீம், காதல் சந்தியா, விஜயுடன் மதுரை படத்தில் நடித்த ரக்ஷிதா இன்று மீரா ஜாஸ்மின் வரை பல நடிகைகள் இந்த உடல் எடை மாற்ற விஷயத்துக்காக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி துபை நட்சத்திர விடுதியில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து மூச்சுத் திணறி மரணமடைந்ததற்கு காரணம் அவர் ஆல்கஹால் அருந்திய நிலையில் நினைவு தப்பியிருந்த நிலை தான் காரணம் எனப்ப்பட்டது. ஆல்கஹால் அருந்தி நினைவு தப்பும் அளவுக்கு ஸ்ரீதேவிக்கு என்ன விதமான பிரச்னைகள் இருந்திருக்கக் கூடும் என்ற ஊடக ஆராய்ச்சியில் அவர் செய்து கொண்ட காஸ்மெடிக் சர்ஜெரிகளின் காரணமாக எடுத்துக் கொண்ட வீரியமான மருந்துகளும் காரணம் என்றெல்லாம் கூட சொல்லப்பட்டது. நடிகைகளை தங்களது தோற்றப் பொலிவிற்கு ஒவ்வொரு நொடியும் முக்கியத்துவம் தந்தே ஆகவேண்டுமென்ற நிர்பந்தத்தில் சிக்க வைத்தது யார்? தீயாகப் பின் தொடரும் ஊடகங்களும், அவற்றில் வெளிவரும் செய்திகளைக் கண்டு சமூக ஊடகங்களில் உடனுக்குடன் வெளியாகும் விமர்சனங்களும் தானே?
தங்களது உடலின் மீதான அக்கறை, அழகின் மீதான ஈடுபாடு இயல்பாக வந்தால் அது ஆரோக்யமானது மட்டுமல்ல இயற்கையானதும் கூட. அதே வயதுக்கேற்ற இயல்புடன் நடிகைகளை இயல்பாக நடமாட விடாமல் சதா பின் தொடர்ந்து சென்று அவர்கள் எப்படிப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி புகைப்படங்களை சுட்டுத் தள்ளி அவற்றை உடனுக்குடன் சமூக ஊடகங்களில் பரவ விடுவதால் உண்டான பயத்தின் காரணமாக நடிகைகள் 24 மணி நேரமும் முழு ஒப்பனையுடன் இருந்தாக வேண்டும் என்ற நிலையை ஊடகவியலாளர்கள் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில் சினிமா ஊடகவியலாளர்கள் உருவாக்கி வைத்திருப்பது தான் ஊடக தர்மமா?
ஒரு டாக்டரோ, மென் பொறியாளரோ, டீச்சரோ, பெண் காவல் அதிகாரியோ யாராக இருந்தாலும் அவர்கள் பணியிலிருந்து வீடு திரும்பி விட்டார்கள் என்றால் அவருக்கு அங்கே அம்மா, மனைவி, அக்கா என்று பல ரோல்கள் இருக்கும். அந்தந்த ரோல்களுக்கு ஏற்றவாறு அவர் பேசிச் சிரிக்கலாம், வெளியில் சர்வ சாதாரணமாக நடைபயிற்சி மேற்கொள்ளலாம். நினைத்த மாத்திரத்தில் அவர் விரும்பும் இடங்களுக்கெல்லாம் அவர் விரும்பிய தோற்றத்தில் சென்று வரலாம். ஆனால் நடிகைகள் அப்படியல்ல, அவர்கள் வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு நொடியிலும் நடிகையாகவே அப்பட்டமாகச் சொல்வதென்றால் பொதுச்சொத்து எனும் பாவனையில் பார்க்கப்படுகிறார். அவரது தொழில் அவருக்குப் பொருளாதார ரீதியாக சமூக விடுதலை பெற்றுத்தருவதற்கு பதிலாக செலிப்ரிட்டி, நட்சத்திரம் எனும் அந்தஸ்துடன் பிற பெண்களுக்கு கிடைக்கத் தக்க அளவிலான இயல்பான சமூக அங்கீகாரத்தைக் கூட வழங்க மறுக்கிறது. இதன் காரணமாகத்தான் நடிகைகளில் பலர் பலத்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.
ஆர்த்தி அகர்வால் என்றொரு நடிகை இருந்தார். தமிழில் ஸ்ரீகாந்த் ஜோடியாக ஒரு படத்தில் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் லிப்போசக்ஸன் எனும் கொழுப்பு நீக்க காஸ்மெடிக் சர்ஜரி ஒன்றைச் செய்து கொள்ள முயன்ற போது பரிதாபகரமாக உயிரிழந்தார் என்பது துக்ககரமான செய்தி. நடிகைகளை இப்படியான நிலைகளுக்குச் செல்லத் தூண்டுவது எது? எடுத்ததற்கெல்லாம் சமூக ஊடகங்களைக் குறை சொல்லாதீர்கள். நடிகைகள் திரைப்படங்களில் தங்களுக்கு வாய்ப்புக் குறையக் கூடாது என்பதற்காகவும் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும் காஸ்மெடிக் சர்ஜெரிகளை செய்து கொள்கிறார்கள் அதற்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாவோம் என்று சொல்லாதீர்கள்.
நடிகைகள் குண்டானால் அவர்களைப் பகடி செய்து சுய கழிவிரக்கத்தில் ஆழ்த்தாமல் இருந்தாலே போதும். அவர்கள் கதாநாயகி ரோல் கிடைக்கா விட்டாலும் கூட அண்ணி, அக்கா, மாமியார் ரோல் செய்து கூடத் தங்களது திரைப்பங்களிப்பைத் தொடர்ந்து கொள்வார்கள். அதற்குத் தயாராகும் தைரியம் கூட வரவிடாமல்... எப்படி இருந்த நீ... இப்போ இப்படி ஆயிட்டியே?! என அவர்களை அநியாயத்துக்கு பகடி செய்யாமல் இருந்தால் போதும்!