
அரசியல் களத்துக்கு தயாராகி வரும் ரஜினியின் நடிப்பில் அடுத்து வரவுள்ள படம் காலா. கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால், தனுஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் டீஸர் வெளியான நிமிடத்தில் இருந்து சுமார் 12 மணி நேரத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இணைய தளங்களில் அதிகமாக தேடப்பட்ட விடியோக்கள் வரிசையில் முன்னணி இடத்தை 'காலா' பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் அதிகமாக காலா டீஸர் பகிரப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹூமா குரேஷியை டீஸரில் ஒரு ஷாட்டில் பார்த்த ரசிகர்கள் கதையில் அவரது பங்களிப்பு என்னவாக இருக்கும் என்பதையும் இணையதளங்களில் கற்பனை குதிரையை தட்டி விட்டு மீம்ஸ்கள் போட்டு வருகின்றனர். ஹூமாவைப் பற்றிய இந்தத் தகவல்கள் அவர்களுக்கு உதவக் கூடும்.
ஹூமாவுக்கு சொந்த ஊர் தில்லி. அவருடைய தந்தை அங்கு ஹோட்டல் நடத்தி கொண்டிருந்தார். நடிக்க வேண்டும் என்ற கனவுடன் பாலிவுட்டுக்கு வந்துவிட்டார் ஹூமா. இரண்டு ஆண்டுகள் இந்துஸ்தான் யூனிலிவரின் ஒப்பந்தத்தில் இருந்தவர் விளம்பரப் படங்களில் நடித்துவந்தார். சாம்சங் மொபைல் விளப்பரப் படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்த போது இயக்குநர் அனுராக் கஷ்யப்பின் கண்ணில் படவே, காங்ஸ் ஆஃப் வாஸிபூரில் நடிக்க வைத்தார். படம் சூப்பர் ஹிட்டாகவே அதன்பின் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வருகிறார் ஹூமா.
நான் நடிக்கவிருக்கும் படங்களில் தன்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நன்கு தெரிந்த பின்னர்தான் நடிக்க ஒப்புக் கொள்வாராம். சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களை தவிர்த்துவிடுபவர் ஹூமா. த்ரிஷ்னா, டி டே, வொயிட், ஜாலி எல்எல்பி-2, பத்லபூர் தற்போது காலா என்று தொடர்ந்து இந்தி, மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். சிறந்த நடிப்புக்கான விருதுகளையும் பெற்றுள்ள இவர் இசை ஆல்பம், மற்றும் வைஸ்ராய்ஸ் ஹவுஸ் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார். பாலிவுட் கோலிவுட் என எதுவானாலும் நல்ல திரைப்படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே இவரது ஆசை. காலாவில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் ஜரீனா. பாலியல் தொழிலாளியாக நடிக்கிறார் என்று தெரிகிறது. ஏப்ரல் 27-ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்ற எதிர்ப்பார்ப்பில் இருந்தது, ஆனால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என்றும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.