இயக்குநர் கௌதம் மேனனின் புதிய அவதாரம் இது!

முன்னொரு காலத்தில் போலீஸ் எனப்படுபவர்கள் கடைசி காட்சியில் வந்து செல்பவர்களாக இந்தியத் திரையை நிறைத்தனர். பாலிவுட்,
இயக்குநர் கௌதம் மேனனின் புதிய அவதாரம் இது!

முன்னொரு காலத்தில் திரைப்படங்களில் போலீஸ் எனப்படுபவர்கள் கடைசி காட்சியில் வந்து செல்பவர்களாக இந்தியத் திரையை நிறைத்தனர். அதற்கு பின்னர் மறுமலர்ச்சி காலகட்டத்தில், பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டல்வுட், மல்லுவுட் உள்ளிட்ட திரை உலகில் போலீஸ் கதாபாத்திரத்திற்கு புத்துயிர் கிடைத்தது. பன்முகத் தன்மை கொண்டதாகவும் விரைவில் மாறிவிட்டது. அதாவது போலீஸை ஹீரோவாக ஒரு படம் கொண்டாடினால், ஒரு படம் படு வில்லனாக சித்தரிக்கும். இன்னொரு படத்தில் குணசித்திர வேடத்தில் போலீஸ் வருவார்கள். கிறுக்கு போலீஸ் முதல் சிரிப்பு போலீஸ் வரை விதவிதமான போலீஸ்களை கண்டு மக்கள் மகிழ்ந்துள்ளனர்.

இதில் குறிப்பாக மல்லுவுட்டில் யூனிபார்ம் போடாத போலீஸ் அதிகாரிகளாகவே மதிக்கப்படுபவர்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால் எனலாம். அந்தளவுக்கு அக்கதாபாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார்கள் அவ்விருவரும். அண்மையில் அவர்களை ரிலீவ் செய்யும்விதமாக பிருத்விராஜ், நிவின் பாலி, துல்கர் சல்மான் (இவர் போலீஸாக விரும்பி கடைசியில் ஐஏஎஸ் அதிகாரியாகிவிடுவார்), உண்ணி முகுந்தன் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.

கோலிவுட்டிலும் அனேக போலீஸ் அதிகாரிகள் உள்ளனர். தங்கப்பதக்கம் சிவாஜி, மூன்று முகம் ரஜினி, வேட்டையாடு விளையாடு கமல் முதல், கடமை கண்ணியம் கட்டுப்பாடு பட சத்யராஜை தொடர்ந்து, காக்க காக்க, சிங்கம் 1,2,3 சூர்யா வரை இங்கும் நெடிய பாரம்பரியம் உடையது போலீஸ் ரோல். நாயகன் படத்தில் நாஸரையும், யுத்தம் செய் படத்தில் சேரனையும்  நம்மால் மறக்க முடியுமா? காத்திரமான போலீஸ்காரர்களாக படத்திற்கு பெருமளவு பங்களித்திருப்பார்கள் அவர்கள். காமெடி போலீஸ்களான கவுண்டமணி செந்தில் இணையரையும் நாம் கண்டுகளித்துள்ளோம். லேடி போலீஸ் விஜய்சாந்தியையும், இதுதாண்டா போலீஸ் என்று சொன்ன ராஜசேகரையும் போலீஸ் கூறும் திரையுலகம் நினைவில் நிறுத்தியேயிருக்கும்.

கேப்டன் என்றே அழைக்கப்படும் அளவிற்கு ராணுவத்திலும் போலீஸிலும் , ஸ்பெஷல் ப்ரான்ச், க்ரைம் ப்ரான்ச் என அனைத்துவித உளவுத் துறை மற்றும் புலனாய்வுத் துறைகளிலும் திரை சேவையாற்றிய, சத்ரியனில் பன்னீர் செல்வமாக மிளிர்ந்த விஜய்காந்தை யார் தான் மறுக்க முடியும். இப்படி ஒவ்வொரு ஹீரோவும் போல போலீஸாக நடிக்க ஆசைப்படும் அளவிற்கு வலுவான கதாபாத்திரம் அது. தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பவர்ஃபுல் போலீஸாக கார்த்தி நடித்தது அவரது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.

அண்மையில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் அவரது நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. இவ்வகையில் விக்ரம், அஜித், விஜய், விஷால், விஜய் சேதுபதி என அனைத்து நடிகர்களும் போலீஸ் கெட்டப்பில் படு ஃபிட்டாக திரையில் ஆழமாக தடம் பதித்துவிட்டார்கள்.

ஹீரோ போலீஸ்கள் ஒருபுறமிருக்க அச்சுறுத்தும் வில்லத்தனங்களை காட்டும் போலீஸாக நடிகர் அசோகன் முதல் ஆஷிஷ் வித்யார்த்தி வரை அனேகர் கோலிவுட்டில் காக்கியில் கலக்கி வருகிறார்கள். அண்மையில் வெளிவந்த அச்சம் என்பது மடமையடா படத்தில் இந்தி நடிகர் பாபா ஷேகலின் கொடூர போலீஸ் கேரக்டரையும் யாரும் மறந்திருக்க முடியாது. கெளதம் வாசுதேவ் மேனனைப் பொருத்தவரையில் திரையில் கதாநாயகன் மற்றும் எதிர்நாயகன் ஆகிய இரண்டு நிலைகளிலும் போலீஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் அவரையே இன்னொரு இயக்குநர் போலீஸாக மாற்றியிருப்பதுதான் இப்போது டாக் ஆஃப் கோலிவுட் எனும்படியான பரபரப்புச் செய்தி.

கோலிசோடா என்ற படத்தை இயக்கிய ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் அந்தப் படத்தின் வரவேற்பு மற்றும் வெற்றியால் தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் புதுமுகங்கள் அனேகர் நடித்துவருகிறார்கள். நடிகர் சமுத்திரக்கனி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.  இந்த மாதம் வெளியாக வேண்டிய கோலிசோடா 2 ஸ்டிரைக் காரணமாக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் போலிஸாக நடித்துள்ளார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. இயக்குநர் விஜய் மில்டன் இக்கதாபாத்திரத்தைப் பற்றிக் கூறியது, ‘இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு சிறந்த நடிகராக இப்படத்தின் முலம் தன்னை நிரூபித்துள்ளார். போலிஸாக அவர் நடித்துள்ள காட்சிகள் நிச்சயம் ரசிகர்களின் கவனத்தை கவரும். சின்ன ரோல்தான் ஆனால் மிகவும் பேசப்படும். இந்தப் படம் வெளியான பிறகு சமுத்திரக்கனியைப் போல கௌதம் மேனனும் பரபரப்பான நடிகராகிவிடுவார். அந்தளவிற்கு இக்கதாபாத்திரம் வலுவானது’ என்று குறிப்பிட்டார்.

இதற்குன் முன் கெளதம் வாசுதேவ் மேனன் கோலிசோடாவில் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியான போது அதில் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. இப்போது அக்கதாபாத்திரம் போலீஸ் என்றபடியால் கெளதம் மேனன் கெட்ட போலீஸாக நடிக்கிறார் என்று தெரிகிறது. படம் வெளியானதும் தான் நம்மால் ஒரு முடிவுக்கு வர முடியும் என்றபடியால் இப்போதைக்கு இதை சஸ்பென்ஸில் வைத்துக் கொள்ளலாம். திரையுலக ஸ்ட்ரைக் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என்று காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com