ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ‘பிக் பாஸ்’ ஜூலி ஆதரவு!

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைதான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார்...
ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ‘பிக் பாஸ்’ ஜூலி ஆதரவு!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கூட்டமைப்பு (ஜாக்டோ ஜியோ) சார்பில் சென்னை கோட்டையை
முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அண்ணாசாலை, சேப்பாக்கம், கடற்கரைச் சாலைகளில் 6000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் ஆசிரியர்களின் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தியதைத் தொடர்ந்து வாலாஜா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்கள். சென்னை பல்கலைக்கழகம் அருகேயும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். 

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைதான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்து தன்னுடைய கருத்தை வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் ஜூலி. அதில் அவர் கூறியதாவது:

நான் அவர்களின் எதிர்ப்பின் காரணத்தை ஆதரிக்கிறேன். ஆசிரியர்கள் இளம் தலைமுறையின் பின் எலும்புகள். நாம் அனைவரும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். #suportteachersprotest என்று கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூலி, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில், போட்டியாளராகக் களமிறங்கினார். அந்த நிகழ்ச்சியில் திடீரென நடிகை ஓவியாவுக்கும் ஜூலிக்கும் இடையே கருத்து மோதல் உண்டானதால் ரசிகர்களின் ஆதரவை இழந்த ஜூலி, பிறகு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதம், செவிலியர் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த ஜூலிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தார்கள். நானும் ஒரு செவிலியர்தான். என்னையும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதியுங்கள் என்கிற ஜூலியின் கோரிக்கையை காவல்துறையினர் நிராகரித்ததால் ஜூலி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.

மருத்துவப் படிப்பில் சேர முடியாமல் போனதற்காக கடந்த வருடம் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வாழ்க்கை திரைப்படமாகிறது. அனிதா வேடத்தில் ஜூலி நடிக்கவுள்ளார். Dr.S. அனிதா MBBS என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. உத்தமி என்கிற படத்தில் நடித்து வரும் ஜூலி கதாநாயகியாக நடிக்கும் 2-வது படமிது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com