உங்களிடம் பகிர நிறைய ‘உண்மைகள்’ உள்ளன: தடை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

இப்போது நான் எதுவும் பேசினால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். எனவே பொறுமையாக இருக்க...
உங்களிடம் பகிர நிறைய ‘உண்மைகள்’ உள்ளன: தடை குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் குடும்பப் பிரச்னைகளை அலசும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி பலவிதமான விமரிசனங்களுக்கு மத்தியில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்துள்ளது.

ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில், சொல்வதெல்லாம் உண்மை தொலைக்காட்சி நிகழ்ச்சி தனி மனித, குடும்பப் பிரச்னைகளில் தலையிடுவதாகத் தெரிவித்திருந்தார். மேலும் டிஆர்பி ரேட்டிங்குக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத்தடை விதித்தது. மேலும் இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள், தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உயர் நீதிமன்றக் கிளை.  

இந்நிலையில், இடைக்காலத் தடை குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், ட்விட்டரில் கூறியதாவது:

என்னைப் புரிந்துகொண்டு கேள்விகளால் துளைத்தெடுக்காமல் இருந்ததற்காக அனைவருக்கும் நன்றி. நாம் அனைவரும் சட்டத்தை மதிக்கும் குடிமகன்கள். இப்போது நான் எதுவும் பேசினால், நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். எனவே பொறுமையாக இருக்க முடிவெடுத்துள்ளேன். உங்களிடம் பகிர பல ‘உண்மைகள்’ உள்ளன. சரியான நேரம் வரும்போது அதைச் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com