
கஜா புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன. கஜா புயலில் இருந்து மீண்டுவர பலரும் உதவிகளைச் செய்ய வேண்டுமென முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் செல்போன் நிறுவனங்கள் வழியாக நிவாரண நிதி திரட்டலாம் என்று நடிகர் சிம்பு யோசனை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விடியோவில் கூறியதாவது:
டெல்டா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலரும் உதவி செய்கிறார்கள். என்னால் முடிந்த உதவியை நானும் செய்துவிடுவேன். என் ரசிகர்களும் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாகப் போய்ச் சேருகிறதா என்பது ஒரு கேள்வியாகவே இருந்துகொண்டிருக்கிறது. நான் உதவி செய்ய நினைத்தால் என்னால் அரசிடம் கொண்டு தரமுடியும். ஆனால் ஒரு பாமரன் 10 ரூபாய் கொடுக்க நினைத்தாலும் அதை எப்படித் தருவது என்பது அவருக்குத் தெரியாது.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து உதவி செய்ய இதைச் செய்துபார்க்கலாமே என்று தோன்றியது. நாம் எல்லோரும் செல்போன்களைப் பயன்படுத்துகிறோம். ஒரு காலர் டியூனுக்கு 10 ரூபாய் தருவதுபோல நிவாரண நிதிக்காகவும் செல்போன்கள் மூலமாக நம்மால் பணம் அனுப்பமுடியும். செல்போன் சேவையில் இருக்கும் தொலைதொடர்பு நிறுவனங்கள், நம் ஒவ்வொருவரிடமிருந்து பணம் சேகரித்து, அதை அரசிடம் கொடுத்து உதவி செய்யவேண்டும். 10 ரூபாயோ 100 ரூபாயோ யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பது வெளிப்படையாக இருக்கவேண்டும். இவ்வளவு பணத்தை நாங்கள் டெல்டா மக்களுக்குத் தந்துள்ளோம் என்று அரசும் நமக்குக் கூறுவதாக இருந்தால் எல்லோரும் சேர்ந்து இந்த விஷயத்தைச் செய்துபார்க்கமுடியும் என்று யோசனை கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.