தோல்விப் படம் என்றாலும் ரூ. 200 கோடி வசூலித்துள்ள அமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்!

இந்தியாவில் மட்டுமே ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்...
தோல்விப் படம் என்றாலும் ரூ. 200 கோடி வசூலித்துள்ள அமீர் கானின் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான்!

தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் பலரைத் திருப்திப்படுத்தவில்லை. எனவே அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று அமீர் கான் கூறியுள்ளார். எனினும் அந்தப் படத்தின் வசூல் ரூ. 200 கோடியைத் தாண்டியுள்ளது.

தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் என்கிற படத்தில் முதல்முறையாக அமீர் கானும் அமிதாப் பச்சனும் இணைந்து நடித்துள்ளார்கள். கத்ரினா கயிஃப், ஃபாத்திமா சனா சயிக் போன்றோரும் நடித்து, விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கியுள்ள இந்தப் படம் நவம்பர் 8 அன்று வெளியானது.

இந்தியா முழுக்க 5000 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் எதிர்மறை விமரிசனங்களால் நாளுக்கு நாள் வசூலில் அதிகப் பாதிப்பை அடைந்தது. முதல் நாளன்று ஹிந்திப் பதிப்பில் மட்டும் இந்திய அளவில்ரூ. 51 கோடி வசூலை அடைந்தது. ஆனால் அடுத்த நாளே இதன் வசூல் ரூ. 28 கோடியாகக் குறைந்தது. முதல் வாரம் இந்தப் படம் இந்தியாவில் ரூ. 135 கோடி வசூலித்தது (வியாழன் அன்று வெளியானதால் 8 நாள்கள் கொண்ட முதல் வாரம்).  தமிழ், தெலுங்கில் முதல் 8 நாள்களில் ரூ. 5.45 கோடி வசூலே கிடைத்தது. 

ஆனால் அடுத்த வாரம் இதன் வசூல் பல மடங்குக் குறைந்து ரூ. 9 கோடி மட்டுமே கிடைத்தது. அதாவது முதல் வாரத்தை விடவும் அடுத்த வாரம் வசூல் 94% குறைந்துள்ளது. இதனால் இந்தப் படம் இந்தியாவில் முதல் இரு வாரங்களில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கிட்டத்தட்ட ரூ. 149 கோடி வசூலித்தது. 

வெளிநாடுகளில் இந்தப் படம் ரூ. 64 கோடி வசூலித்துள்ளது. இதையடுத்து உலகளவில் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 213 கோடி வசூலித்துள்ளது. ஆனாலும் இது அனைவரும் எதிர்பார்த்த ஒரு வசூல் இல்லை என்பதுதான் இப்படத்துக்குப் பின்னடைவாக உள்ளது.

இந்தியாவில் மட்டுமே ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படம் முதல் இரு வாரங்களில் ரூ. 150 கோடி வசூலைக் கூட அடையவில்லை. இதற்கும் மேலும் இதன் வசூல் அதிகமாகாது என்பதால் இதுவே இதன் கடைசி வசூலாக அறியப்படுகிறது. அமீர் கான் நடித்த பிகே மற்றும் டங்கல் ஆகிய படங்கள் முதல் 8 நாள்களிலேயே (வரி நீங்கலாக) ரூ. 200 கோடி வசூலித்துச் சாதனை செய்தன. இதனுடன் ஒப்பிட்டால் தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான், வசூல் அளவில் அமீர் கானுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தையே அளித்துள்ளது. 

எனினும் அமீர் கானின் ஒரு தோல்விப் படம் என்பது குறைந்தபட்சம் ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் சக்தி கொண்டதாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com