எல்லா விதமான படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்! பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் பேட்டி!

நல்ல படங்கள் அதற்கான ரசிகர்களை கண்டடையும் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.
எல்லா விதமான படங்களிலும் நடிக்க விரும்புகிறேன்! பரியேறும் பெருமாள் பட நாயகன் கதிர் பேட்டி!

நல்ல படங்கள் அதற்கான ரசிகர்களை கண்டடையும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான 'பரியேறும் பெருமாள்'. கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களின் பரவலான கவனத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது. நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக பா.ரஞ்சித் தயாரித்துள்ள இப்படத்திற்கான வரவேற்பினைத் தொடர்ந்து, திரையரங்குகளில் காட்சிகளை அதிகரித்துள்ளனர். இதுவே இப்படத்துக்கான முதல் வெற்றி எனலாம்.

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் கதிர். அவரது திரை வாழ்க்கையில் இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. இப்படம் குறித்தும் தனது கதாபாத்திரம் குறித்தும் கதிர், சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்பு நிருபர் அவினாஷ் ராமசத்திரனிடம் விரிவாகப் பேசியதிலிருந்து சில துளிகள்.

இந்தப் படம் ஏன் வெளி வர வேண்டும், இத்தகைய படங்களின் தேவை என்ன என்பதை மாரி செல்வராஜ் நடிகர்களிடம் விளக்கியிருக்கிறார். அவர் உங்களிடம் குறிப்பிட்டு என்ன சொன்னார்?

உண்மை சம்பவம் ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கதைதான் பரியெறும் பெருமாள். நிஜ வாழ்க்கையில் அந்த மனிதன் கடந்து வந்த பாதைகளையும், எதிர்கொண்ட பிரச்னைகளையும், துயரையும் படத்தில் உள்ளது போல விரிவாகவே எனக்கு விளக்கினார் மாரி செல்வராஜ். என் பாத்திரம் மற்றும் ஆனந்தியின் பாத்திரம் இரண்டிற்கும் இடையிலான காதல் எத்தகையது, அன்பு மற்றும் நட்புக்கு இடையில் ஒரு அழகான குழப்பம் அது என்று நுட்பமாகச் சொன்னார். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், அவர்களுடைய உறவு ஆத்மார்த்தமான ஒரு அன்பின் அனுபந்தம் என்பதை எங்களுக்கு உணர்த்தினார்.

படத்தில் கருப்பியின் ரோல் எப்படி?

இயக்குநர் மாரி செல்வராஜின் சகோதரனின் நாய்தான் கருப்பு. கருப்பு சார்ந்த காட்சிகள் அனைத்தும் அவளை எவ்விதத்திலும் தொந்திரவுக்கு உட்படுத்தாமல் எடுக்கப்பட்டன. ஒரு கட்டத்திற்குப் பிறகு, கருப்பு என் சொந்த நாய் போல் ஆகிவிட்டாள். அது என்னை ஏத்துக்கிச்சு...இப்படி நாங்கள் பழகிவிட்டதும் நல்லதாகிப் போனது. கருப்பி ஒரு வேட்டை நாய். சற்று கோபக்காரியாக இருந்தாலும் அறிவார்ந்தவளும்கூட. சில நாட்கள் படப்பிடிப்புக்குப் பிறகு, 'ஆக்‌ஷன்' மற்றும் 'கட்' போன்றவற்றை கற்றுக் கொண்ட கருப்பி, அதன்படி செயல்பட ஆரம்பித்துவிட்டாள். அந்தளவுக்கு புத்திசாலி அவள்.

கருப்பியை தயாரிப்பாளர் ஒரு உருவகமாகக் குறிப்பிட்டுள்ளாரா?

நிஜ வாழ்க்கையில் பரியனுக்கும் கருப்பியின் மீது பேரன்பு இருந்தது. நாம் நாய்களை நடத்துவதில் வித்தியாசமான ஒரு அணுகுமுறை இருந்து வருகிறது. அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல், அவர்களுடன் நாம் விளையாடுவோம். சில நேரங்களில் அவர்கள் நம்முடன் இருக்க விரும்பும் போது, அவர்களை வெளியே கட்டி வைத்து விடுகிறோம். எனவே, நம்முடைய நடத்தை நாய்களிடம் ஒருவகையிலும், சக மனிதர்களிடமிருந்தும் இடையில் வரையறுக்கப்பட்டுள்ளன.

'கதிர் படத்தில்' என்ன எதிர்ப்பார்க்கலாம்?

என்னைப் பொறுத்தவரை, ஸ்கிரிப்ட்தான் முதல் ஹீரோ. நான் எனக்கென்று ஒரு சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். 'நான் ஏன் கதிர் நடித்த படங்களைப் பார்க்க வேண்டும்?' என்று கேட்கும் மக்களுக்கு, உண்மையில் நான் அதற்கான நியாயத்தை செய்ய கடமைப்பட்டுள்ளேன். அதனால்தான் தேர்ந்தெடுத்து ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். 100 சதவிகிதம் மசாலா படங்களுக்கு மத்தியில் அசல் சினிமாவிற்கென ஒரு இடம் இருக்கத்தான் செய்கிறது. அந்த அருமையான பாதையில் பயணிக்க விரும்புகிறேன்.

வணிக ரீதியான வெற்றி உங்களுக்கு எந்தளவு முக்கியம்?

நான் நடிக்க விரும்பும் படங்களில் நடிப்பதன் மூலம் எனக்கான வணிக வெற்றியையும் சேர்த்தே தேடிக் கொண்டேன். அதனால் இத்தகைய படங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரவு செலவு திட்டம் தேவை, அதனால் தான் இதில் வெற்றி முக்கியம். மேலும் எல்லா விதமான படங்களிலும் பரீட்சார்த்தமான முயற்சிகள் செய்ய விரும்புகிறேன், வர்த்தக ரீதியான அம்சங்களில் சமரசம் இன்றி, கலாபூர்வமான படங்களில் நடிக்க ஆசை இருக்கிறது. என்னுடைய படங்கள் ரசிகர்ளுக்கு நிறைவானவையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் விக்ரம் வேதா படத்தில் கேமியோ ரோலில் நடிக்க எப்படி முடிவு செய்தீர்கள்?

அது ஒரு கடினமான முடிவாகத்தான் இருந்தது, ஆனால் அந்தப் படத்தில் நடித்தவர்களால் அது எனக்கு எளிதாகி விட்டது. இயக்குநர் புஷ்கர்-காயத்ரி ஆரம்ப காலத்திலிருந்தே என்னுடைய நலம் விரும்பிகள். இன்றைய தேதி வரை, என்னுடைய புதுப் படங்கள் உறுதிப்படுத்துவதற்கு முன்பு அவர்களிடம் கலந்து பேசுவேன். அப்பறம் சேது அண்ணா (விஜய் சேதுபதி), சொன்னதும் சரியா இருந்தது. இந்தப் படம் உனக்கு பெரிய மாற்றத்தை தருமான்னு எனக்குத் தெரியலை ஆனா நிச்சயம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாதுன்னு உறுதியாக சொன்னார். படத்தில் ஒரு பாத்திரம் தவிர்க்க முடியாததாக இருந்தால், அது சிறியதாக இருந்தாலும் சரி வலுவாக உள்ளது என்று நினைத்து அதில் நடிக்க முடிவு செய்தேன். மாதவன் சார், சேது அண்ணா மற்றும் பலரோட சேர்ந்து நடிக்கும் போது நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.

நீங்கள் நடிக்கும் கதாபாத்திரங்களில் இறந்து போவதை அடிக்கடி காண முடிகிறது ...

மத யானைக் கூட்டத்தில் நடித்த போது, சினிமாவைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, அது ஒரு நல்ல வாய்ப்பாக மட்டுமே இருந்தது. எனினும், இப்போது என் பாத்திரம் இறக்கும் மாதிரியான படங்களில் நடிப்பதை தவிர்க்கிறேன். குறைந்தது சில காலமாவது. ஆனால் என் பாத்திரத்தின் மரணம் அழுத்தமான தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தினால், அப்படி நடிப்பதில் பிரச்னையில்லை.

வன்முறை கூட உங்கள் அனைத்து படங்களிலும் தொடர்ந்து வருகிறதே

பெரும்பான்மையான நமது படங்களில் சில வகையான வன்முறை அல்லது குற்றம்தான் மைய புள்ளியாக இருக்கும். ஒரு கதையில் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தால் அதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? மோதல் இருந்தால்தானே படம் சுவாரஸ்யமாக இருக்கும்..

பா. ரஞ்சித் படங்களுடன் நீங்கள் எப்படி உங்களை இணைத்துப் பார்க்கிறீர்கள்?

பரியேறும் பெருமாள் சமத்துவம் பற்றி பேசும் படம். இது அரசியலைப் பேசவோ போதிக்கவோ இல்லை. இந்தப் படத்தில் உ:ள்ளீடாக பல சமூக செய்திகள் உள்ளன, ஆனால் ஒருவர் இதனை ஆக்‌ஷன் மற்றும் நகைச்சுவை நிறைந்த பொழுதுபோக்கு படமாக பார்க்க விரும்பினால் விரும்பினால், அவர்களுக்கும் இந்தப் படம் பொருந்தி வரும். எதையும் வலிய திணிக்காமல்தான் இப்படம் உள்ளது. இருப்பினும், இந்தப் படம் எத்தகையது என்பதை பார்வையாளர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com