சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் நடித்த 'மாய’ அனுபவங்கள் -  பகிர்கிறார் பாபி சிம்ஹா!

அது 2003-ம் ஆண்டு. கோயமுத்தூரில் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் அவர். பெயர் ஜெயசிம்ஹா.
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 'பேட்ட' படத்தில் நடித்த 'மாய’ அனுபவங்கள் -  பகிர்கிறார் பாபி சிம்ஹா!
Published on
Updated on
3 min read

ஒரு மெகா ப்ளாஷ்பேக்

அது 2003-ம் ஆண்டு. கோயமுத்தூரில் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் அவர். பெயர் ஜெயசிம்ஹா. துறுதுறுவென்று இருக்கும் அவர் ஒரு தீவிர சினிமா ரசிகர். இல்லையில்லை வெறியர் என்றே சொல்லலாம். காரணம் அப்போது ரிலீஸ் ஆகியிருந்த சாமி படத்தை 17 தடவைக்கும் மேலாக தியேட்டருக்குச் சென்று பார்த்துக் கொண்டே இருந்தார். 

அவரது ஆதர்ச இயக்குநரான ஹரிக்காக மட்டுமல்லாமல் மிகவும் பிடித்த நடிகரான விக்ரமுக்காகவும் தான் அந்தப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தார். நடுவில், விக்ரம் நடிப்பில் அதே ஆண்டில் வெளியான தூள் படத்தையும் பார்த்தார். அந்த ஆண்டு இறுதிக்குள் சாமி படத்தில் முக்கியமான டயலாக் அனைத்தும் அவருக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. ஆறுச்சாமி பியரில் இட்லியை அடித்து நொறுக்கும் காட்சியைப் பார்த்து ரசித்திருந்த ஜெயசிம்ஹா, தானும் அதே போல ஆம்லெட்டில் செய்துள்ளார். 

ஒரு மினி ப்ளாஷ்பேக்

15 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஸ்டூடண்ட் ஜெயசிம்ஹா இப்போது ஆக்டர் பாபி சிம்ஹாவாக புதிய அவதாரம் எடுத்துவிட்டார். காலச் சுழற்சியில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தைக் கூடப் பெரியதாக நினைக்காத அவர், சாமி 2 படத்தின் வில்லனாக நடித்ததை, கிடைப்பதற்கு அரிய பேறாக நினைக்கிறார். சாமி படத்தில் விக்ரம் பேசும், ‘தொடைக்கு மேல லுங்கி எவனும் தூக்கி கட்டக் கூடாது’ என்ற டயலாக்கைப் அதே மாடுலேஷனில் பேசிக் காட்டிய பாபி, விக்ரமுடன் நேர் எதிரில் நின்று நடித்தது ஒரு அழகிய கனவு ஒன்று நினைவானது என்கிறார். ஒரு சினிமா ரசிகன் நடிகனாக மாறிய கதை தான் கடந்த பத்தாண்டு காலம் பாபி சிம்ஹாவின் வாழ்க்கை.

மறக்க முடியுமா? ஜிகிர்தண்டா நினைவுகள்!

ஆனால் அது அத்தனை ஈஸியாக கிடைத்த வெற்றி அல்ல. ஜிகிர்தண்டா படம் மறக்க முடியாத அனுபவத்தை மட்டுமல்லாமல் அவரது நடிப்பு வாழ்க்கையில் இன்று வரை அசைக்க முடியாத ரோல் அதுதான். அசால்ட் சேது ரசிகர்களால் இன்று வரை கொண்டாடப்பட்டு வருவது உண்மை. அதன் பிறகு எத்தனையோ படங்களில் நடித்து விட்டாலும், அந்த கதாபாத்திரம் மிரட்டியது போல எதுவும் அமையவில்லை. குறுகிய இடைவேளைக்குப் பிறகு சில படங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் சாமி 2 அவருக்கு முக்கியமானது.

ஹீரோவா வில்லனா? எது பெஸ்ட்?

நாயகன் பட வசனம் போல நீ நல்லவனா கெட்டவனா என்று பாபியைக் கேட்டால் வில்லனாக நடித்தாலும் சரி ஹீரோவாக நடித்தாலும் சரி ஒரு ரோலில் ஜொலிக்க வேண்டும் என்கிறார். ஒவ்வொரு நடிகனுக்கும் ஹீரோவாக ஆசைதான். ஆனால் அப்படி முடிவு செய்தவர்கள் அதன் பின் ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். பாபி சிம்ஹா இதில் வேறுபடுகிறார். தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக இருந்தால் அதில் வில்லனாகவும் நடிக்க முடிவெடுத்துள்ளார். தனக்கான பாத்திரங்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார் பாபி சிம்ஹா.

 யார் அந்த ராவணப் பிச்சை?

சாமி 2 வைப் பொருத்தவரை பாபி சிம்ஹா ராவணப் பிச்சை ரோலில் அதகளப்படுத்தி மிரட்டியிருக்கிறார். வில்லனாக இது அவருக்கு முதல் படமல்ல என்றாலும், விஜய் சேதுபதியுடன் கருப்பன் மற்றும் இறைவி ஆகிய படங்களில் வித்யாசமான வில்லனாக அசத்தியிருந்தாலும், இது அவரை முற்றிலும் வேறாக காட்சிப்படுத்தியுள்ள பாத்திரம். கருப்பன் மற்று இறைவி ஆகிய படங்களில் எதிர்நாயகனின் பாத்திரத்துக்கு நியாயம் இருக்கும். போலவே சாமி 2 படத்திலும் ராவண பிச்சை ஒரு நேர்க்கோட்டில் செல்பவன். அவன் பாதையில் குறுக்கிட்டால் மட்டுமே கொலைவெறியாகிவிடும் தன்மை உடையவன். இவ்வகையில் தான் நடிக்கும் கதாபாத்திரங்களில் இயல்பை உணர்ந்து அதற்கேற்றபடி நடிப்பது பாபி சிம்ஹாவின் தனித்துவம்.

யார் பிடிக்கும்?

பாபி சிம்ஹாவுக்குப் பிடித்த ஹீரோயிச காரெக்டர்கள் ஹரி திரைப்படங்களின் கலக்கியிருக்கும் துரை சிங்கம், ஆறுச்சாமி ஆகியோர். ஹரி பட ஷூட்டிங்கின் போது மொத்த யூனிட்டே பரபரப்பாகிவிடும். நூறு ரெட் புல் குடித்தவர் போல ஹரிக்கு எனர்ஜி அதிகமுண்டு. சாப்பிடக் கூட ப்ரேக் எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்பவர் அவர் என்று தன் மனம் கவர்ந்த இயக்குநரைப் பற்றி கூறுகிறார் பாபி சிம்ஹா. 

வெவ்வேறு இயக்குநர்களிடம் இணைந்து வேலை செய்யும் போது ஒவ்வொரு அனுபவம் கிடைக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் வாத்யார் தான். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மிக முக்கியமானவை. கார்த்தி சுப்பராஜ், ஹரி இவர்களுடைய ஸ்டைல், திரையாக்கம் எல்லாமே வித்யாசமாக இருக்கும்’ என்றார் பாபி.
 
மெர்க்குரியைத் தவிர்த்து கார்த்திக் சுப்பராஜின் மற்ற படங்களில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். ‘மற்றவர்களை விட என்னுடைய பலம் என்ன என்பதை நன்கு அறிந்த இயக்குநர் அவர். சூது கவ்வும் படத்தில் நயன்தாரா ரசிகராக நடிக்க வாய்ப்பு வந்தபோது கார்த்திக் சுப்பராஜிடம் தான் அறிவுரை கேட்டாராம் பாபி. அவர் உனக்கு அது சரியாக வரும் என்று உற்சாகப்படுத்திய பிறகே நடித்துள்ளார்.

கனவு நினைவானது

தற்போது கார்த்திக் சுப்பராஜ் பாபி சிம்ஹாவுக்கு அளித்திருக்கும் வாய்ப்பு தான் அவரது வாழ்க்கையின் கனவு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்கும் வாய்ப்பு. பேட்ட படத்தில் பாபி சிம்ஹாவின் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. தலைவரை ஒரு அஞ்சு நிமிஷம் பார்த்து பேச எதை வேணா தரத் தயார இருந்தவன் நான். இப்ப அவர்கூட ஒரு படம் நடிக்கறேன் என்பது நம்ப முடியாத நிஜம். ஏதோ ஒரு மாயம் மாதிரி இதெல்லாம் இருக்கு என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் இந்தத் தீவிர ரஜினி ரசிகர்.

(சினிமா எக்ஸ்ப்ரஸ் சிறப்பு நிருபர் சுதீர் ஸ்ரீனிவாஸன் மற்றும் நடிகர் பாபி சிம்ஹாவின் நேர்காணலின்  சில துளிகள்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com