‘சிம்டாங்காரன்’ பாடல் வரிகள் மீதான விமரிசனம்: பாடலாசிரியர் விவேக் உருக்கமான விளக்கம்!

என்னைக் கேலி செய்தவர்களுக்கு, உங்கள் நிலையிலிருந்து அதைப் புரிந்துகொள்கிறேன்...
‘சிம்டாங்காரன்’ பாடல் வரிகள் மீதான விமரிசனம்: பாடலாசிரியர் விவேக் உருக்கமான விளக்கம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்தடுத்த கட்டங்களாக இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த சிம்டாங்காரன் என்கிற பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. சிம்டாங்காரன் என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன்.  கண் சிமிட்டாமல் சிலரைப் பார்க்கத் தோன்றும். அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என்று பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்தார்.

பாடல் வெளியான நிமிடத்திலிருந்து பாடலுக்கு பல்வேறு வகையான விமரிசனங்கள் கிடைத்துவருகின்றன. பெரும்பாலான ரசிகர்கள் பாடலை விரும்பவில்லை என்பது அவர்களுடைய சமூகவலைத்தளப் பதிவிலிருந்து தெரிந்துகொள்ளமுடிகிறது. எனினும் வழக்கமான ரஹ்மான் பாடல் போல இந்தப் பாடலும் கேட்கக் கேட்கப் பிடிக்கும் என்றும் சிலர் ஆதரவாக எழுதியுள்ளார்கள்.

ஒரு பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சிம்டாங்காரன் பாடலுக்குக் கிடைத்த விமரிசனங்கள் குறித்துக் கூறியதாவது:

விமரிசனங்கள் என் இசைவாழ்க்கையில் முக்கிய அங்கம் வகிக்கிறது. பெரும்பாலான சமயங்களில், என் அனுபவம் காரணமாக மக்களின் கருத்துகளை நான் கணித்துவிடுவேன். சிலசமயங்களில், அவர்களுடைய விமரிசனமும் பாராட்டும் என்னை ஆச்சர்யப்படுத்தும். ஒரு படத்தின் இயக்குநர், கதாநாயகன், நடன இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோர் கேட்டபிறகே ஒரு பாடல் வெளிவருகிறது. இதன்மூலம் ரசிகர்களிடமிருந்து என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பதை அறிந்துகொள்ள இது உதவுகிறது என்று கூறியுள்ளார்.

பாடலாசிரியர் விவேக், பாடல் வரிகள் மீதான விமரிசனங்கள் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்டாங்காரன் பாடல் குறித்த உங்களுடைய எதிர்மறை, நேர்மறையான கருத்துகளைப் படித்தேன். 

* பாடலில் சென்னைத் தமிழைப் பயன்படுத்தியதைப் புரிந்து கொண்டவர்களுக்கு நன்றி.
* பாடல் வரிகளைப் பிடிக்காதவர்களுக்கு - உங்கள் கருத்துகளை மதிக்கிறேன். 
* எந்தக் காரணமாக இருந்தாலும் எனக்குப் பின்னால் நிற்கும் தளபதி ரசிகர்களுக்கு - நீங்கள் அசத்துகிறீர்கள். எனக்கு எல்லாமும் நீங்கள்தான். 

ரஹ்மானின் இசைத்திறமையும் விஜய்யின் வீச்சும் பாடலை உயரத்துக்குக் கொண்டு சென்றுள்ளன. இந்தத் தனித்துவமான பாடலுக்காக அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். அந்தப் பாடல் 1 கோடிக்கும் அதிகமான வியூஸைப் பெற்றுள்ளது. 

விமரிசனங்களிலிருந்து நான் பின்வாங்கியதில்லை.

என்னைக் கேலி செய்தவர்களுக்கு, உங்கள் நிலையிலிருந்து அதைப் புரிந்துகொள்கிறேன். படத்தின் காட்சியமைப்புடன் ஒப்பிட்டுப் பாடல் வரிகளைப் புரிந்துகொள்ள முடியாமல் போனாலும் உங்களை கருத்துகளை முன்வைத்து என் வருங்காலப் பணிகளில் மாற்றம் கொண்டு வர முயல்கிறேன். உங்களுக்கு அன்பைச் செலுத்தவே விரும்புகிறேன் என்று பதில் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com