விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. சமீபத்தின் வெளியான இந்தப் படம் மக்களின் அதிக வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார் எழுத்தாளர் சி. சரவண கார்த்திகேயன். ராம்களும் ஜானுக்களும் இங்கே இருப்பதால் தான் இப்படம் பெருவெற்றி. அல்லது ராமாக, ஜானுவாக இருக்க முடியவில்லையே என்ற பெருவலி தான் அதன் செல்வாக்குக்குக் காரணம். எவ்வகையில் என்றாலும் நம் தமிழர்கள் காதலின் ஆன்மாவுக்கு வெகுஅருகிலான படம் இது என்று 96 படம் பற்றி ஃபேஸ்புக் பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிர்மை பதிப்பகம் பதிப்பித்துள்ள, 96: தனிப்பெருங்காதல் என்கிற இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. நூல் குறித்து 96 பட இயக்குநர் பிரேம் குமார் பேசவுள்ளார். 96 புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.