‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்தது ‘சஞ்சு’ ஹிந்திப் படம்!

முதல் மூன்று நாள்களில், அதாவது வெள்ளி முதல் ஞாயிறு வரை இந்தப் படம் ரூ. 120.06 கோடி வசூலித்தும் சாதனை படைத்துள்ளது...
‘பாகுபலி 2’ சாதனையை முறியடித்தது ‘சஞ்சு’ ஹிந்திப் படம்!

நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை, திரைப்படமாக வெளிவந்துள்ளது. சஞ்சு என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் ரன்பீர் கபூர், சஞ்சய் தத் வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், பரேஷ் ராவல், மனிஷா கொய்ராலா, அனுஷ்கா சர்மா, சோனம் கபூர், தியா மிர்சா போன்றோர் நடித்துள்ளார்கள். கடந்த வெள்ளியன்று இந்தப் படம் வெளியானது.

இந்தியாவில் 4000 திரையரங்குகளிலும் வெளிநாடுகளில் 1300 திரையரங்குகளிலும் வெளியாகியுள்ள சஞ்சு படம் முதல் நாளன்று முதல் பல சாதனைகளைப் புரிந்துவருகிறது. 

விடுமுறை தினமாக இல்லாவிட்டாலும் முதல் நாளன்று இந்தியா முழுக்க ரூ. 34.75 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. இதற்கு முன்பு இந்த வருடம் வெளியான ரேஸ் 3 படம் முதல் நாளன்று ரூ. 29.17 கோடி வசூல் செய்து சாதனை செய்தது. அந்தச் சாதனையை முறியடித்து 2018-ம் வருடம் முதல் நாளன்று அதிக வசூல் செய்த படம் என்கிற சாதனையை எட்டியது. ரன்பீர் கபூர் நடித்த படங்களில் இதற்கு முன்பு பேஷ்ராம் படம்தான் அதிகமாக முதல் நாளன்று ரூ. 22 கோடி வசூல் செய்தது. அந்தச் சாதனையையும் சஞ்சு முறியடித்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்தியா முழுக்க ரூ. 46.71 கோடி வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. இதற்கு முன்பு பாகுபலி 2 படத்தின் ஹிந்திப் பதிப்பு ரூ. 46.50 கோடி வசூலித்ததே இந்தியாவில் ஒருநாளின் அதிகபட்சத் திரைப்பட வசூலாக இருந்தது. அந்தச் சாதனையை சஞ்சு படம் முறியடித்துள்ளது.  

அதேபோல முதல் மூன்று நாள்களில், அதாவது வெள்ளி முதல் ஞாயிறு வரை இந்தப் படம் ரூ. 120.06 கோடி வசூலித்தும் சாதனை படைத்துள்ளது. இந்த வருடம் இதுபோல எந்தவொரு இந்தியப் படமும் முதல் மூன்று நாள்களில் இவ்வளவு வசூலைக் கண்டதில்லை.  இதற்கு முன்பு ரேஸ் 3 படம், 106.47 கோடி வசூலித்தது, முதல் மூன்று நாள்களில்.  அந்தச் சாதனையை மிக எளிதாகத் தாண்டியுள்ளது. 

மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குத் துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்து உதவி புரிந்ததாக சஞ்சய் தத்துக்கு எதிராகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், நன்னடத்தையைக் காரணம் காட்டி, தண்டனைக் காலம் முடிவதற்கு 8 மாதங்களுக்கு முன்பே அவரை மகாராஷ்டிர அரசு விடுவிக்க உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com