சர்கார் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை அகற்றாவிட்டால் நடவடிக்கை: சுகாதாரத்துறை நோட்டீஸ்

உடனடியாக நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...
சர்கார் போஸ்டரில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை அகற்றாவிட்டால் நடவடிக்கை: சுகாதாரத்துறை நோட்டீஸ்

நடிகர் விஜய்யின் 62-வது திரைப்படத்துக்கு சர்கார் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கத்தி, துப்பாக்கி ஆகிய வெற்றிப் படங்களுக்கு பின் மீண்டும் விஜய் -முருகதாஸ் கூட்டணி இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு, பழ. கருப்பையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசை - ஏ.ஆர். ரஹ்மான். உதயா', அழகிய தமிழ் மகன்', மெர்சல்' படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளதால் அதற்குப் பலதரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.  நீங்கள் சிகெரெட் இல்லாமல் இன்னும் ஸ்டைலாக இருப்பீர்கள் விஜய் என்று அன்புமணி ராமதாஸ் கருத்து தெரிவித்தார்.

விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைக்கும் காட்சியை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார். புகைப்பது உடல் நலனுக்குத் தீங்கானது என்று சிகரெட் தயாரிப்பு நிறுவனங்கள் தொடங்கி, உலக சுகாதார நிறுவனம் வரை அனைவரும் அறிவுறுத்தி வரும் நிலையில், விஜய் புகைக்கும் காட்சியைப் பார்க்கும் சிறுவர்கள் அந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடமாட்டார்களா? புகை விளம்பரங்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், திரைப்பட நிறுவனங்கள் அவற்றுக்கு மறைமுக விளம்பரம் கொடுப்பது பெரும் பாவம். திரைத்துறையினருக்கும் சமூகப் பொறுப்பு தேவை. சிகரெட் சாத்தானைத் தூக்கிப் பிடிக்கும் செயல்களில் நடிகர் விஜய் ஈடுபடக் கூடாது. புதிய திரைப்படத்தின் புகைக் காட்சியை நடிகர் விஜய்யும், சன் பிக்சர்ஸும் உடனே நீக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டார். 

சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் புகைப்பது போன்று தோன்றியுள்ளதற்கு நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகையிலைக் கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிரில் அலக்ஸாண்டர், மாநில கண்காணிப்புக் குழுவுக்கும், இந்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் விஜய் புகைபிடித்தபடி உள்ள சர்கார் பட போஸ்டரை இணையத்தளம், சமூகவலைத்தளங்களில் இருந்து அகற்ற விஜய், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு பொதுசுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உடனடியாக நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்பழக்கத்தை ஒழிக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிக்கு திரைத்துறையைச் சார்ந்தவர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com