ரஜினி பராக்.. பராக்..! காலா விமர்சனம்

தமிழர்களின் அடையாளமாக இருக்கும் தாராவிக்காக நடக்கும் ரத்த யுத்தம்தான் காலா' திரைப்படம்.
ரஜினி பராக்.. பராக்..! காலா விமர்சனம்

தமிழர்களின் அடையாளமாக இருக்கும் தாராவிக்காக நடக்கும் ரத்த யுத்தம்தான் காலா' திரைப்படம்.
மும்பை நகரத்தை தங்களது உழைப்பால் உருவாக்கியவர்களை அவர்கள் வாழும் தாராவி பகுதியிலிருந்து அகற்றி விடப் பார்க்கிறது அரசு அதிகாரம். குடிசைப் பகுதிகளை அழித்து விட்டு நவீன கட்டமைப்புக்குள் கொண்டு வர நினைக்கிறார் அதிகாரம் மிக்க நானா படேகர்.
இதற்கு எதிராக புரட்சிக் கொடி பிடிக்கிறது ரஜினியின் படை. தாராவியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பது நானா படேகரின் கனவு. அந்த ரணகளத்தில் ரஜினி - நானாவுக்கும் இடையே நடக்கிற முட்டல், மோதல்களே கதை.
அதிகாரமிக்க நானாவின் படைகளின் சதி வலையிலிருந்து ரஜினி வெளியே வந்தாரா... பல தலைமுறைகளாக ரத்தம் பூசிய அந்த தாராவி என்ன ஆனது... சமூக விரோதிகளை போராட்டம் மூலம் வென்றெடுத்தாரா என்பது திக்...திக்...கிளைமாக்ஸ்.
இனம், மொழி, தேசம் எல்லாம் உடைந்து சிதறிக் கிடக்கும் ஒரு தெருவில், புன்னகைத்துக் கொண்டே இருக்கும் தமிழர்களின் கதைகளை, அவஸ்தைகளை, போராட்டக் குணத்தை, சின்ன சின்ன எள்ளலுடன் பேசுகிறது படம். நகரத்தை உருவாக்கியவர்களை அங்கிருந்து அகற்றி நகரத்துக்கு வெளியே தள்ளி விட நினைக்கிறது நவீன மயமாக்கல் என்பதுதான் காலா திரைப்படத்தின் அடிப்படைச் செய்தி.
ஒவ்வொரு விடியலிலும் அரசியல் வாரிசுகளும் பண முதலைகளும் தொழில் அதிபர்களும் எப்போது பொக்லைன் இயந்திரங்களோடு வந்து நிற்பார்களோ என்ற நிராதரவான பயத்துடனே கழிகின்றன தாராவி தமிழர்களின் பொழுதுகள். 
தாய் நிலத்தை அதன் ஆதி மனிதர்களிடமிருந்து பிடுங்கி, அதன் அத்தனை அடையாளங்களையும் அழிக்கப் பார்க்கிற பின்னணியில் ஒரு நுண்ணிய அரசியலை முன் வைத்து கதை சொல்லுகிறது படம். 
விலக்கப்பட்டவர்களாக, விளிம்பில் வாழும் மும்பை வாழ் தமிழர்களை, அவர்களின் உரிமைகளை நசுக்கப் பார்க்கும் அரசியலை அசலாக, அழுத்தமாக, அட்டகாசமாகப் பதிவுசெய்திருப்பதற்கு...ராயல் சல்யூட் இயக்குநர் ரஞ்சித்துக்கு...!
கேங்ஸ்டர் படம் என்ற வரையறைக்குள் வராமல், துப்பாக்கி சண்டை பாணி பிடிக்காமல், ஆழமான அன்பையும் பாசப் பரிதவிப்பையும் ஆனந்த நெகிழ்ச்சியையும் நுணுக்கமாகப் பதிவு செய்திருக்கிறது பா.ரஞ்சித்தின் திரைக்கதை.
இராவண காவியம், மதுரை வீரன், கிருஷ்ணரின் கீதாசாரம், மதவாத பின்புல அரசியல், குருúக்ஷத்ர தர்மம், பீம்ஜிக்கு அஞ்சலி போஸ்டர், காமராஜர் பள்ளி, பெரியார் சிலை, அம்பேத்கர் படம், ரஜினியின் மகனுக்கு லெனின் பெயர் என்று படம் முழுவதும் பா.ரஞ்சித்தின் அரசியல், ஜாதிய குறியீடுகள். 
காட்சிகள் எங்கு காணினும் ரஜினியின் ஆதிக்கம். ஹீரோயிஸத்தைத் தள்ளிவைத்துவிட்டு கிட்டத்தட்ட கதைக்காகவே உழைத்து அர்ப்பணித்திருக்கிறார். நெல்லை வட்டார வழக்கு மொழி. தன் முன்னோர்களின் நிலத்தின் தீராத நினைவுகளை சதா மீட்டிக் கொண்டே, சிறகுகள் வலிக்க வலிக்கப் போராடும் குணம். குடும்பம் என்ற ஒற்றைக் குடையின் மீது அன்பு செலுத்தி நிற்கிற இடம். மனைவியை இழந்த ஏக்கம். எதிரிகள் மீதான பழியுணர்ச்சி. தன் மக்கள் மீது கொண்டுள்ள உறவு பாசம். காதலியை சந்தித்துப் பேசுகிற போது, பேரன்பின் கண்ணீரில் ஆன்மா கரையும் தருணம்.... என சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வெடித்து நிற்கிறார். 
புருவங்கள் துடிக்கும் ஆக்ஷன், கண்கள் கசியும் காதல், பரபர வசன வார்த்தைகள் எனக் காட்சிகள் எங்கும் பிரதிபலிக்கிறார். மதவாதம், ஏகாதிபத்தியம், நகரின் ஆபத்தான உருமாற்றங்கள், மொழி - இன வீழ்ச்சி, உலகமயமாக்கலின் சுரண்டல் எனக் கோபங்களிலும், தாபங்களிலும் கரைந்து நிற்கிறார் ரஜினி. 
பழைய காதலி ஹீமா குரோஸிக்காக நெகிழ்ச்சியுடனான காத்திருப்பு, மனைவியைப் பார்த்ததும் விம்மி வெளிப்படுத்துகிற காதல் என ரஜினிக்கு இது களம். 
படத்தின் பிற்பகுதியை அள்ளி நிறைக்கிறார் நானா படேகர். மிரட்சி, அதிகார பலம், தைரியம் என உடல் மொழியில் கவர்கிறார். தனது கதாபாத்திரத்தை அத்தனை இயல்பாக, அழகாகக் கொண்டு வந்து கவனிக்க வைக்கிறார். 
காலாவின் மனைவியாக வரும் ஈஸ்வரிராவுக்கு அத்தனை அலட்சியமான உடல்மொழி. குடிகார மச்சான் சமுத்திரக்கனி, தளபதி திலீபன், லோக்கல் அரசியல் புள்ளி அருள்தாஸ், போலீஸ் அரவிந்த் ஆகாஷ் என ஒவ்வொருவரும் கதைக்கான வார்ப்புக்கள்.
குடிசையின் இடுக்குகளோ, முட்டுச்சந்துகளோ... கதாபாத்திரங்களின் தோளில் தவ்விப் பயணித்து பரபரக்கிறது முரளியின் ஒளிப்பதிவு.
உமா தேவியின் கண்ணம்மா...', பாடலுக்கு மெல்லிசை தரும் சந்தோஷ் நாராயணன், அருண்ராஜ் காமராஜாவின் நீதான் என் தங்க சில...' பாடலில் தடதட வைக்கிறார். பின்னணியில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் சந்தோஷ். 
ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பில் தடதடக்கும் வேகம் ஆங்காங்கே குறைகிறது. முதல் பாதியில் அரசியல், அதிகாரத்துக்கு எதிராக நகரும் படம், இரண்டாம் பாதியில் தனிப்பட்ட பழிவாங்குதல் எனச் சுணங்கி நிற்கிறது. கட்டக்கடைசியில் நானா படேகர் - ரஜினி சண்டைக் காட்சிகளில் அவ்வளவும் சினிமாத்தனம். கமர்ஷியல் சினிமாவுக்கான சங்கதிகள் இல்லாமல் போனது, ரஜினி ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம்தான்.
காலா, ரஜினியின் அரசியல் பிரவேசத்துக்குக் களம் ஏற்படுத்திக் கொடுக்கிறது...
-ஜி.அசோக்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com