ஆதரவின்றித் தவிக்கும் மூத்த நடிகர்கள்: நடிகர் கார்த்தி கவலை!
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் - கடைக்குட்டி சிங்கம். இதில் விவசாயி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கார்த்தி.
இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை நடிகரும் கார்த்தியின் சகோதரருமான சூர்யா தயாரித்துள்ளார். சத்யராஜ், சூரி, சயீஷா, ப்ரியா பவானிசங்கர் போன்றோர் நடித்துள்ளார்கள். தெலுங்கிலும் வெளியாகும் இந்தப் படத்துக்கு சின்னபாபு என்று பெயரிடப்படுள்ளது.
கடைக்குட்டி சிங்கம் படம் குறித்து நடிகர் கார்த்தி கூறியதாவது:
இந்தப் படம் வலியுறுத்தும் விஷயம் என் மனத்துக்கு மிகவும் நெருக்கமானது. இந்தியக் கூட்டுக் குடும்பத்தின் அருமையை இந்தப் படம் விளக்குகிறது. என் சகோதரர் சூர்யா தயாரித்துள்ளார்.
கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதால் கிடைக்கும் சந்தோஷத்தை நகரங்களில் வாழும் நாம் இழந்து வருகிறோம். இது மிகப்பெரிய நஷ்டம். கூட்டுக் குடும்பத்தின் மகத்துவம் நமக்குத் தெரிவதில்லை.
நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளேன். 60 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள், அவர்களுடைய குழந்தைகளால் கைவிடப்பட்ட நிலையில் ஆதரவின்றி மனைவியுடன் வசித்து வருகிறார்கள். நடிகர் சங்கம் அளிக்கும் ஓய்வுத்தொகைதான் உதவுகிறது. இது பயமுறுத்தும் சூழலாக உள்ளது.
நான் கூட்டுக்குடும்பத்திலிருந்து வருகிறேன். அதன் மகத்துவம் எனக்குத் தெரியும். என் குடும்பம் எந்தளவுக்கு எனக்கு முக்கியம் என்றும் தெரியும். ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது இளம் நடிகர்கள் சிலர், பாசக்காட்சிகளில் நாங்கள் ஏன் உணர்வுபூர்வமாகிறோம் என்று வியக்கிறார்கள். அவர்கள் தனிக்குடித்தனத்தில் வசிக்கிறார்கள். கூட்டுக்குடும்பம் என்கிற அமைப்பிலிருந்து முற்றிலும் விலகிவிட்டார்கள் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.