சீனாவில் ‘பாகுபலி 2’ எதிர்பார்த்த வசூலை அடையாதது ஏன்?

சீனாவில், ஹிந்திப் படங்களைப் போல பாகுபலி 2 படத்தால் வசூலில் சாதனை நிகழ்த்த முடியவில்லை...
சீனாவில் ‘பாகுபலி 2’ எதிர்பார்த்த வசூலை அடையாதது ஏன்?

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). 

இந்நிலையில் பாகுபலி 2 படம் சீனாவில் சமீபத்தில் வெளியானது. சமீபகாலமாக சீனாவில் ஏராளமான ஹிந்திப் படங்கள் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் வெளியீடு மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஹிந்திப் படங்களைப் போல சீனாவில், பாகுபலி 2 படத்தால் வசூலில் சாதனை நிகழ்த்தமுடியவில்லை. முதல் நாளன்று 2.43 மில்லியன் டாலர் வசூலித்த பாகுபலி 2, அடுத்த இரு நாள்களில் 2.94 மில்லியன் டாலர், 2.26 மில்லியன் டாலர் மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் முதல் மூன்று நாள்களில் 7.63 மில்லியன் டாலர் மட்டுமே அதாவது ரூ. 51.20 கோடி வசூலித்துள்ளது.

சீனாவில் வெளியான ஹிந்திப் படங்களுக்கு நிகராக வசூலிக்கும் என்று எண்ணிய நிலையில் இந்த வசூல் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சமீபத்தில் சீனாவில் வெளியான டங்கல், பஜ்ரங்கி பைஜானை விடவும் முதல் நாளில் பாகுபலி 2 அதிக வசூலைக் கண்டாலும் சீக்ரெட் சூப்பர் ஸ்டார், ஹிந்தி மீடியம் ஆகிய படங்களை விடவும் குறைவாகவே வசூலித்துள்ளது. 

டங்கல், பஜ்ரங்கி பைஜான் ஆகிய படங்கள் சீனாவில் முதல் நாளன்று குறைவான வசூலைப் பெற்றாலும் அடுத்த நாள் முதல் அதிக வசூலைக் கண்டன. டங்கல் சீனாவில் முதல் நாளன்று ரூ. 12.99 கோடி வசூலித்தது. ஆனால் அடுத்த நாளன்று அதன் வசூல் ரூ. 26.81 என எகிறியது. அதேபோல சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் முதல் நாளன்று ரூ. 14.66 கோடியும் அடுத்த நாளில் ரூ. 20.78 கோடியும் வசூலித்தது. இதுபோல பாகுபலி 2 படத்தின் இரண்டாம், மூன்றாம் நாள் வசூல் எகிறவில்லை. முதல் நாளைவிடவும் அதன் மூன்றாவது நாள் வசூல் குறைவாகவே உள்ளது. மேலும் இன்னும் ஒருவாரத்தில் அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் சீனாவில் வெளியாகவுள்ளது. இதனால் பாகுபலி 2 படத்தின் வசூல் அதிகபட்சமாக ஒருவாரத்துக்கு மட்டுமே இருக்கும், ரூ. 100 கோடி முதல் ரூ. 150 கோடி வரை வசூலிக்க வாய்ப்புண்டு என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தக் குறைவான வசூலுக்குக் காரணம் என்ன?

பாகுபலி படத்தின் முதல் பாகம் சீனாவில் அவ்வளவாக வசூலாகவில்லை. இரண்டாம் பாகத்துக்கு முதல் நாளன்று கிடைத்த வசூலை விடவும் குறைவாகவே முதல் பாகத்துக்குக் கிடைத்தது. சீனாவில் முதல் பாகம் கிட்டத்தட்ட ரூ. 8 கோடி மட்டுமே ( $1.18 மில்லியன்) வசூலித்தது.  இதனால் இரண்டாம் பாகத்தைப் பார்க்க பலர் விருப்பப்படவில்லை. மேலும் நேரடியாக இரண்டாம் பாகத்தைப் பார்த்தவர்களுக்குக் கதை புரியாததால் படத்துக்கு நல்ல விமரிசனங்களும் கிடைக்கவில்லை. இதுதவிர,  டங்கலை விடவும் குறைவான திரையரங்குகளில் பாகுபலி 2 வெளியாகியுள்ளது. 

பாகுபலி 2 படம் உலகளவில் ரூ. 1700 கோடி வசூலித்துள்ளது. சீன வசூலின் மூலம் எப்படியும் ரூ. 300 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ரூ. 2000 கோடி வசூலை அடையும் என்றும் கணிக்கப்பட்டது. ஆனால் முதல் மூன்று நாள் வசூல் இதற்குச் சாதகமாக அமையவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com