காலா படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...
காலா படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

காலா படத்தின் வெளியீட்டுக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த மாதம், ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வரவுள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.எஸ்.ராஜசேகரன் தாக்கல் செய்த மனுவில், 'கரிகாலன்' என்ற படத்துக்கான தலைப்பை நான் கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2006-ஆம் ஆண்டு வரை முறையாகப் பதிவு செய்து புதுப்பித்து வந்தேன். திடீரென இந்தத் தலைப்பை நடிகர் ரஜினிகாந்த் படத்துக்கு 'காலா' என்ற கரிகாலன் என பெயர் வைத்து தயாரித்து வருகின்றனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகளிடம் கேட்டதற்கு, 'நான் எனது படத்தின் தலைப்பை புதுப்பிக்காததால் அந்த தலைப்பை வேறு ஒருவருக்கு மாற்றி விட்டதாகக் கூறுகின்றனர். ஒருவேளை அப்படியிருந்தால் அந்த விதிகளை ரத்து செய்ய வேண்டும். மேலும் 'காலா என்ற கரிகாலன்' திரைப்படத்துக்கு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ரஞ்சித் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், இந்த வழக்குத் தொடர்பாக மனுதாரர் போதுமான ஆவணங்களைத் தாக்கல் செய்யவில்லை. எனவே 'காலா' என்ற கரிகாலன் திரைப்படத்துக்குத் தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்தத் தீர்ப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜசேகரன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, கரிகாலன் அடைமொழியில்லாமல் வெளியாவதில் ஆட்சேபனை இல்லை என்று ராஜசேகரன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.  ஆனால் காலா படத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், படத்தலைப்பைப் புதுப்பிக்காமல் இருந்தால் அந்தத் தலைப்பை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்றார். இதையடுத்து காலா பட வெளியீட்டுக்கு தடை விதிக்கமுடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள்.

மேலும் ராஜசேஜர் மனு குறித்து, ரஜினிகாந்த், இயக்குநர் பா. இரஞ்சித், காலா படத் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய வர்த்தக சபை ஆகியோர் ஜூன் மாதம் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார்கள்.  

கபாலி படத்தை இயக்கிய இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தில் ரஜினி, சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, 'வத்திக்குச்சி' திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்‌ஷி அகர்வால் எனப் பலரும் நடித்துள்ளனர். ஜூன் 7-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகியுள்ள படத்தின் அனைத்து பாடல்களும் நேற்று வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com