
பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
அர்ஜூன் ரெட்டி படம் கபீர் சிங் எனத் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகியுள்ளது. பிரபல நடிகர் சாஹித் கபூர் கதாநாயகனாகவும் கியாரா அத்வானி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள். தெலுங்கில் இப்படத்தை இயக்கிய சந்தீப் வங்கா, ஹிந்தியிலும் இயக்கியுள்ளார்.
கபீர் சிங், வசூலில் எதிர்பாராத அளவுக்குச் சாதனை படைத்துள்ளது. முதல் 5-வது நாளிலேயே இந்தியாவில் ரூ. 100 கோடி வசூலை எட்டியது. இந்நிலையில் தற்போது இதன் வசூல் ரூ. 275 கோடியைத் தாண்டியுள்ளது. 6 வாரங்களில் இந்த வசூலை அடைந்துள்ளது. ரூ. 100 கோடி வசூலை 5-ம் நாளிலும் ரூ. 200 கோடி வசூலை 13-வது நாளிலும் ரூ. 275 கோடி வசூலை 37-வது நாளிலும் அடைந்து சாதனை படைத்துள்ளது. கடந்த வாரத்தில் இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 3 கோடி மட்டுமே பெற்றுள்ளதால் ரூ. 300 கோடியைத் தொடுவது சிரமம் என்று அறியப்படுகிறது.
எனினும் படம் வெளியான தருணத்தில் சமூகவலைத்தளங்களில் ஏராளமான விமரிசனங்களை எதிர்கொண்ட கபீர் சிங், இந்தளவுக்கு வசூலை அள்ளியுள்ளதை சினிமா ரசிகர்களும் நிபுணர்களும் ஆச்சர்யமாகவே பார்க்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.