காஷ்மீர் விவகாரம்: இந்தியத் திரைப்படங்களை வெளியிடத் தடை விதித்தது பாகிஸ்தான் அரசு!

இந்த விவகாரத்தின் விளைவாக, பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வது, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பது என்ற முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு எடுத்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த முடிவால் இந்திய தேசத்தின் ஒட்டுமொத்த பார்வை மட்டுமல்லாது, சர்வதேச நாடுகளின் பார்வையும் ஜம்மு-காஷ்மீர் மீது குவிந்துள்ளது. மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு பெரிய அளவில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.

இதையடுத்து, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு கமிட்டி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர், முப்படை தலைமைத் தளபதிகள், ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் தலைவர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்திருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை ரத்து செய்வது, இருதரப்பு உறவுகள் தொடர்பான ஏற்பாடுகளை மறு ஆய்வு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் விவகாரம் தொடர்பான இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடமும் முறையீடு செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் பாகிஸ்தான் சுதந்திர தினத்தை காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தினமாக கடைப்பிடிக்கவும், ஆகஸ்ட் 15ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.  ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்தியத் தூதர் அஜய் பிசாரியாவை பாகிஸ்தான் புதன்கிழமை வெளியேற்றியது.

இந்நிலையில் இந்த விவகாரத்தின் விளைவாக, பாகிஸ்தானில் இந்தியத் திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையைச் சேர்ந்த ஃபிர்டோஸ் ஆஷிக் அவான் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளியாகவுள்ள, வெளியாகியுள்ள எந்த ஒரு படத்தையும் பாகிஸ்தானில் திரையிடக்கூடாது. இந்தியப் படங்களுக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com