இளையராஜா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த குறும்படம் இதுதான்!

இளையராஜா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த குறும்படம் இதுதான்!

அருள் சங்கர் என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படம்தான் "தென்றல் வந்து தீண்டும்போது". 

இசைஞானி இளையராஜாவின் பிறந்த தினத்தையொட்டி (ஜூன் 2) அவரது கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரும், குறும்படத் தயாரிப்பாளருமான அருள் சங்கர் என்பவரால் உருவாக்கப்பட்ட குறும்படம்தான் 'தென்றல் வந்து தீண்டும் போது". 

இந்தப் படத்தின் பல காட்சிகளை இளையராஜாவின் பாடல்கள்தான் நகர்த்திச் செல்கிறது. இளையராஜாவின் பாடல்களைக் கொண்டுதான் இந்தப் படமே என்றும் கூறலாம். 'தமிழ் சமூகம் தவிர்க்கவே முடியாத இம்மாபெறும் கலைஞனுக்கு தலைவணங்கி இக்குறும்படத்தை சமர்ப்பிக்கிறோம்' என்று டைட்டில் கார்டில் படிக்கும் போதே இக்குறும்படத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து விடுகிறது.

'ராசாத்தி உன்ன காணாத நெஞ்சம்' என்ற காதல் தோல்விப் பாடலுடன் குறும்படம் தொடங்குகிறது. காதல் தோல்வியால் துவண்டு போயிருக்கும் அருணுக்கு அவரது நண்பர், அதை எல்லாம் மறந்துவிட்டு பெண் பார்க்க செல்லுமாறு அறிவுறுத்துகிறார். இதையடுத்து, பெண் பார்க்கும் படலம் அரங்கேறுகிறது.

யாழினி, அருண் இடையே முதல் சந்திப்பு. தனது முன்னாள் காதலி குறித்து அருண், யாழினியிடம் மறைக்காமல் கூறிவிடுகிறார். உண்மையைக் கூறும் ஆணைத் தான் பிடிக்கும் என்று கூறி அவரைப் பிடித்திருப்பதாக யாழினி கூறுகிறார். திருமணத்துக்கு முன்பே முன்னாள் காதலி குறித்தும், அவரது பெயரையும் கேட்டுத் தெரிந்து கொள்கிறார் யாழினி. அருணுக்கு இளையராஜா பாடல் என்றால் உயிர். முன்னாள் காதலியின் பெயர் சத்யா. இளையராஜா இசையமைத்த 'சத்யா' படத்தில் இடம்பெறும் பாடலான 'வளையோசை கலகலகலவென' என்ற பாடலைக் கேட்கும்போது முன்னாள் காதலி நினைவுக்கு வருவார் என்பது தெரிய வர, அப்போது முதல் குழப்ப நிலைக்குச் செல்கிறார் யாழினி.

இளையராஜா பாடலையே கேட்க கூடாது என கணவரிடம் கண்டிப்பாக கூறிவிடுகிறார். இளையராஜா பாடலைக் கேட்காமல் அவரால் வாழ முடிகிறதா? இவர்களின் குடும்ப வாழ்க்கை என்ன ஆனது? என்பது மீதமுள்ள படம்.

முதலில் இதுபோன்ற ஒரு பொருளுடன் படம் எடுத்திருப்பதே புதுமைதான். அதுவும் இளையராஜாவின் பாடல்கள் தமிழர்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த ஒன்று.

எண்ணங்களையும், உணர்வுகளையும் மாற்றும் சக்தி இளையராஜாவின் இசைக்கு உண்டு.

அருண் கதாபாத்திரத்துக்கு இளையராஜாவை மிகவும் பிடிக்கும் என்பதற்கு நம்பகத்தன்மையை சேர்க்கும் வகையில் அவர் வீட்டில் பல இடங்களில் இளையராஜாவின் புகைப்படங்கள் இருக்கின்றன!

ஒரு படத்துக்கு கதாபாத்திரங்களுடன் ஒரு ஃபிரேமில் இருக்கும் பொருள்களும் முக்கியப் பங்கு வகிக்கும். அது இந்தப் படத்தில் நேர்த்தியாகக் கையாளப்பட்டுள்ளது.

அருணாக நடித்துள்ள சூரஜ் நடராஜன் நாகோஜியும், யாழினியாக நடித்துள்ள ஜாக்குலின் பிரகாஷும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர்கள் ராசாமதி, சந்தோஷ் தயாளன் ஆகியோரின்  பங்களிப்பு கவனம் ஈர்க்கிறது. வெளிப்புறப் படப்பிடிப்புகள் கண்களுக்குக் குளிர்ச்சியைத் தருகின்றன! இசையையும், பாடலையும் களமாகக் கொண்டுள்ள இந்தப் படத்துக்கு பின்னணி இசை மிகவும் முக்கியம். அதை திறம்பட நரேன் பாலகுமார் செய்துள்ளார்.

ரஷியா, அமெரிக்கா, கொல்கத்தா, ஹைதராபாத், பஞ்சாப் என உலகம் முழுவதும் பல்வேறு குறும்பட விழாக்களுக்கு இந்தப் படத்தை அனுப்பி, சிறந்த படம், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒளிப்பதிவும், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த தயாரிப்பு என இதுவரை 22 விருதுளை அள்ளி வந்துள்ளது தென்றல் வந்து தீண்டும்போது குறும்படம்.

இந்தப் படத்தை எழுதி இயக்கிய அருள் சங்கரிடம் பேசிய போது அவர் கூறியதாவது:

கடந்த 16 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறேன். இளம் வயதிலிருந்தே எனக்கு சினிமா மீது தீராதக் காதல். 2009ஆம் ஆண்டு முதல் குறும்படங்களைகத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டேன். திருமணத்துக்கு பிறகு, குறும்பட தயாரிப்பை விட்டுவிட்டேன். பிறகு இங்கிலாந்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அங்குதான் அதிக புத்தகங்களை வாசித்தேன். எழுத்தின் மீது ஆர்வமும் அப்போது பிறந்தது. தென்றல் வந்து தீண்டும்போது படத்தின் கதை எனக்கும், எனது மனைவிக்கும் இடையே நடந்த ஒரு நிகழ்வு. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனைவரும் சினிமாவில் பணிபுரிந்தவர்கள்.

இளையராஜாவின் புகழை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல நாடுகளில் நடைபெற்ற குறும்பட விழாக்களுக்கு இந்தக் குறும்படத்தைக் கொண்டு சென்றேன்.

காதல் குறித்த தவறான புரிதல் இளம் சமூகத்தினரிடம் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும். நல்ல புரிதலுடன் உண்மையான காதல் இருக்க வேண்டும் என்பதையும் இந்தப் படத்தில் கூறியிருக்கிறேன்.

இந்தப் படத்தின் தலைப்பும் இசைஞானியின் பிரபலமான பாடல் ஒன்றை வைக்க வேண்டுமென்றே விரும்பினேன். முதலில் 'சந்தனக் காற்றே" என வைக்கலாம் என்று யோசித்தேன். பின்னர், தென்றல் வந்து தீண்டும் போது பாடலை தேர்வு செய்தேன். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இளையராஜா ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தப் படத்தை உருவாக்கினேன். பல ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் பாராட்டினர். இந்தப் படத்தை பெரிய படமாக எடுக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்' என்று கூறிய அருள் சங்கர் வெள்ளித்திரையிலும் தடம் பதிக்க வாழ்த்துகள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com