அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்

மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில் நுட்பம் மூலம் உருவான "கோச்சடையான்'
அதை வெளியில் சொல்வதில் தவறில்லை! நடிகை தீபிகா படுகோன்
Published on
Updated on
3 min read

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் "மாநாடு'. "அதோ தொடங்குகிறார்கள்; இதோ தொடங்குகிறார்கள்' என செய்திகள் மட்டும் அவ்வப்போது அலையடிக்கும். இந்த மாதத்தில் வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடங்க இருந்தது. இந்தநிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்தப் படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். "அன்புத் தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார். தன்னை வைத்து "மாநாடு' படத்தை எடுக்க என்னைத் தூண்டிய அவருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் காலமும் நேரமும் கடந்து கொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக் கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன். அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறான் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம்தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு நடிக்கவிருந்த "மாநாடு' படத்தினைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. வெங்கட் பிரபு இயக்க "மாநாடு' படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும்'' என்று தெரிவித்தார். இந்தநிலையில் வெங்கட் பிரபு, "மாநாடு' படத்தில் எனது சகோதரருடன் வேலை செய்ய முடியவில்லை என்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தயாரிப்பாளர் அனுபவிக்கும் உணர்ச்சி மற்றும் பண அழுத்தத்தை கருத்தில் கொண்டு, தயாரிப்பாளர் எடுக்கும் முடிவை நான் மதிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 

**

தமன்னா சினிமாவில் நடிக்க வந்து 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது அதிக படங்களில் நடிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளார். தெலுங்கில் "சைரா நரசிம்ம ரெட்டி', ஹிந்தி குயின் ரீமேக்கான "மகாலட்சுமி', தமிழில் "பெட்ரோமாக்ஸ்', சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் ஜோடியாக பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் அவர், கிளாமர் கலந்த ஹீரோயின் வேடங்களை மறுக்க ஆரம்பித்துள்ளார். காரணம், விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளார். இது குறித்து தமன்னா கூறுகையில், "என்னைச் சந்திப்பவர்கள் முதலில் கேட்கும் அல்லது கடைசியாகக் கேட்கும் கேள்வி, எனக்கு எப்போது திருமணம் என்பதுதான். நானும் நல்ல மாப்பிள்ளையைத் தேடி வருவதாகப் பலமுறை சொல்லிவிட்டேன். தற்போது எனக்குப் பொருத்தமான மாப்பிள்ளை தேடும் பணியில் அம்மா தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நான் யாரையும் காதலிக்கவில்லை. எனவே, என் திருமண விஷயத்தை பெற்றோர் முடிவுக்கு விட்டுவிட்டேன். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பது பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது'' என்றார்.

**

தமிழில் பல வாய்ப்புகளை நிராகரித்த வித்யா பாலன், கடைசியாக அஜித்துடன் "நேர்கொண்ட பார்வை' படத்தில் நடித்துவிட்டார். அதுவும் தனது மறைந்த தோழி ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பு என்பதால் நடித்திருக்கிறார். இது பற்றி வித்யா பாலன் கூறும்போது, "நேர்கொண்ட பார்வை படத்தில் கெளரவ வேடம் என்றாலும் நல்ல அணியுடன் பணியாற்றியதை மறக்க முடியாது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அஜித், ரொம்பவும் எளிமையானவர். இதற்கு முன் "கபாலி', "காலா' படங்களில் ரஜினியுடன் நடிக்க மறுத்ததாகச் சொல்கிறார்கள். "காலா' படத்துக்கு என்னிடம் யாரும் பேசியதில்லை. "கபாலி' வாய்ப்புதான் எனக்கு வந்தது. அந்த சமயத்தில் ஹிந்தி படத்தில் நடித்து வந்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆரம்பத்தில் மாதவனுடன் "ரன்' படத்தில் நடிக்க என்னைத்தான் கேட்டனர். டெஸ்ட் ஷூட்டிற்கு பிறகு நிராகரிக்கப்பட்டேன். "மனசெல்லாம்' படத்திலும் அதேபோல் நிராகரிக்கப்பட்டபோது வருத்தப்பட்டேன். இதயமே உடைந்து போனது. பின்னர் ஹிந்தி சினிமாவில் அறிமுகமாகி எனது சினிமா பயணம் மாறியது'' என்றார். 

**

ஆடை' பட சர்ச்சைகளுக்குப் பின் அவரைப் பற்றித்தான் இணையதளங்களில் விவாதங்கள் நடந்து வந்தன. போராட்டத்துக்குப் பிறகு அந்த படம் வெளியானது. பெரிய சர்ச்சை எழும் என்று எதிர்பார்த்தநிலையில் அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இனி அமலாபால் பற்றி பேச பரபரப்பு ஒன்றுமில்லை என்று சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டநிலையில், இதோ மறுபடியும் ஆரம்பித்துவிட்டார்... சமீபத்தில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து அரசியல்வாதிகள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நடிகை அமலாபால் இதுகுறித்து கருத்தைப் பதிவிட்டிருக்கிறார். "காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்துக்கான ஆர்ட்டிகிள் 370-ஆவது பிரிவை ரத்து செய்திருப்பது ஆரோக்கியமான, நம்பிக்கை தரக்கூடிய தேவையான மாற்றம். கல்வி, வளர்ச்சி, அமைதிக்கு காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள். 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீரில் பெரிய வளர்ச்சி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. இது எளிதான காரியம் அல்ல' என குறிப்பிட்டிருக்கிறார். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன் என்று அமலாபால் ஏற்கெனவே ஒருமுறை குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அரசியல்ரீதியான கருத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். 

**

மோஷன் கேப்சர் அனிமேஷன் தொழில் நுட்பம் மூலம் உருவான "கோச்சடையான்' படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் தீபிகா படுகோனே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு தமிழ் படத்தில் நடிக்க பேச்சு நடக்கிறது. ஹிந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து கோடி கோடியாகச் சம்பாதித்தாலும் தனக்குள்ள குறையை வெளிப்படையாகப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியவர். அதாவது தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டபோது அனுபவித்த வேதனைகளை அவர் தெரிவித்திருந்தார்.  "ஏழை, பணக்காரன் என்று யாருக்கு வேண்டுமானாலும் மனஅழுத்தம் வரும். அதை மறைக்காமல் தகுந்த நேரத்தில் டாக்டரிடம் சொல்லி உதவி பெற வேண்டும். எனக்கு ஏற்பட்ட மனஅழுத்தம் பற்றி ஒரு வார்த்தையில் கூற வேண்டுமென்றால் ஒவ்வொரு நொடியுமே போராட்டமாக இருந்தது. அந்த நேரத்தில் நான் மிகவும் அசதியாக உணர்வேன். மன அழுத்தம் ஏற்படுவது நம் கையில் இல்லை. சமீபத்தில் பிரபல நடிகர் ஒருவர் தான் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். யாருக்கும் மன அழுத்தம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்படுவது இல்லை. அப்படி ஏற்பட்டிருந்தால் அதை வெளியில் சொல்வதில் தவறில்லை. ஆனால் அதை வெளியில் சொல்ல சிலர் பயப்படுகிறார்கள்'' என்றார் தீபிகா படுகோனே. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com