
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோமாளி. ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 15 அன்று வெளியானது.
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த காட்சியால் படத்தின் டிரெய்லர் அதிகக் கவனத்துக்கு ஆளானது. இந்நிலையில் கோமாளி படத்துக்கு இதுவரை நல்ல வசூல் கிடைத்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள், நிர்வாகிகள் பலரும், வேறெந்த ஜெயம் ரவி படமும் ஆரம்ப நாள்களில் இந்தளவுக்கு வசூலித்ததில்லை, காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகச் செல்கின்றன என்று சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதனால் டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளார் என அவருக்குப் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
நேற்று வரை தமிழ்நாட்டில் கோமாளி படத்துக்குக் கிட்டத்தட்ட ரூ. 18 கோடி வசூல் கிடைத்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. முதல் வார இறுதியில் சென்னையில் மட்டும் ரூ. 1.86 கோடி வசூல் கிடைத்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆகஸ்ட் 15 முதல் 18 வரை நேர்கொண்ட பார்வை படத்தை விடவும் அதிக வசூலைக் கண்டுள்ளது கோமாளி படம். ஏற்கெனவே வெளியான நேர்கொண்ட பார்வை படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் அடுத்த வாரம் வெளியான கோமாளி படமும் ஹிட் ஆனதால் தமிழ்நாட்டுத் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.