
இளவரசி டயானாவில் மரணத்தை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாரும் மறந்திருக்க முடியாது. பாபரசி (paparazzi) கலாச்சாரம் வெளிநாடுகள் போல இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக பாலிவுட்டில் நடிகர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வேவு பார்க்கவே சில மீடியாக்கள் செயல்பட்டு வருகின்றன என்பது வருந்தத்தக்கது.
இந்த பாபரசியில் அடிக்கடி சிக்குபவர்கள் பாலிவுட் தமபதியரான ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன், ஷாருக்கான் - கவுரி, விராட் கோலி - அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள். அவர்கள் மட்டுமல்லாது அவர்களின் குழந்தைகளையும் மீடியா விடுவதில்லை. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் போடும் இடுகையை வெளியிட்டும், இந்த நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவர்களது குடும்பத்தாரை ஃபோட்டோ தாக்குதல்களையும் நிகழ்த்துகின்றனர். என்னதான் பிரபலம் என்றாலும் ஒரு கட்டத்தில் இந்த புகைப்படங்கள் அவர்களது சொந்த வாழ்க்கையில் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்று கூறியுள்ளனர் சில நடிகைகள்.
நடிகர்களின் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் வெளிச்சத்துக்கு வர விரும்பாத போதுஅவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தற்போது இந்த பிரச்னையால் கோபம் அடைந்துள்ளவர்கள் கரீனா கபூர் - சையப் அலி கான் தம்பதியர். காரணம் அவர்களது குழந்தை தைமூரின் புகைப்படங்களையும் அவனைப் பற்றிய செய்திகளையும் அடிக்கடி வெளியிடுவது தங்கள் சொந்த வாழ்க்கையில் தேவையற்ற வெளிச்சத்தை தருகின்றது என்று நினைக்கின்றனர்.
இது குறித்து அண்மையில் கரீனா அளித்த பேட்டியில் கூறியது, 'பிரபலம் என்ற காரணத்தால் குழந்தைகளுடன் எங்கு சென்றாலும் நிருபர்கள் துரத்தி வந்து புகைப்படம் எடுப்பதும், பொதுவெளியில் வலுக்கட்டாயமாக தேவையற்ற பர்சனல் கேள்விகள் கேட்பதும் நாகரிகமல்ல. நடிகர்களின் குழந்தைகள் என்றால் என்ன, அவர்களுக்கும் இயல்பான குழந்தைப்பருவம் முக்கியமானது இல்லையா? எங்கள் மகன் தைமூரை துரத்தி ஃபோட்டோ எடுப்பதற்கு பதில் ரன்வீர் சிங்கை எடுக்கலாமே? குழந்தைகளின் பாதுகாப்பாகவும், அவர்களின் விருப்படியும் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஆனால் நிஜத்தில் அவர்களுடைய சின்னஞ் சிறிய உலகத்தில் அவர்களுக்கான சுதந்திரம் பல சமயம் பாதிக்கப்படுகிறது. இப்போதெல்லாம் தைமூர் போட்டோ எடுக்கும் சத்தம் கேட்டாலே எரிச்சல் அடைகிறான். நாங்கள் கேட்டால்கூட எங்களுக்கே ஃபோட்டோவுக்கு போஸ் குடுக்க மறுக்கிறான். காரணம் அந்தளவுக்கு மீடியாவால் பாதிக்கப்பட்டுள்ளான். எங்களுக்கும் எங்கள் குழந்தைகளுக்கும் எங்களுக்கான இடம் வேண்டும் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்’, என்று கரீனா கபூர் உணர்ச்சிகரமாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.