
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இஸ்லாமிய முறைப்படி நிகாஃப் உடை அணிந்துகொண்டு ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா வந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அதற்கு கதிஜா பதிலடி கொடுத்துள்ளார்.
ஸ்லம்டாக் மில்லினியர் படம் ஆஸ்கர் விருது பெற்று பத்து ஆண்டு நிறைவடைந்ததையொட்டி மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் அனில் கபூர், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டார்கள். இந்த விழாவில் ரஹ்மானின் மகள் கதிஜாவும் கலந்துகொண்டார். அந்த விழாவில் தனது தந்தையைப் புகழ்ந்து பேசினார் கதிஜா.
இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் ரஹ்மானின் மகள் கதிஜா, இஸ்லாமிய முறைப்படி, கண்கள் தவிர முகத்தையும் சேர்த்து மறைக்கும் ஆடையான நிகாஃப்-பை அணிந்துகொண்டு வந்தார். இதையடுத்து ரஹ்மானின் மீது விமரிசனங்கள் வந்தன. இதற்கு ஃபேஸ்புக்கில் பதில் அளித்துள்ளார் மகள் கதிஜா. அவர் கூறியுள்ளதாவது:
என் தந்தையுடனான உரையாடலுக்குக் கிடைத்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. அதேசமயம், அந்த நிகழ்ச்சியில் நான் அணிந்த உடை, என் தந்தையின் வற்புறுத்தலினால் அணிந்ததாகவும் என் தந்தை இரட்டை நிலைப்பாடு கொண்டவர் என்றும் சில விமரிசனங்கள் எழுந்துள்ளன. நான் அணியும் உடைகள், என் வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகள் ஆகியவற்றுக்கும் என் பெற்றோருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். முகத்திரை என்பது எனது முழு சம்மதம் கொண்ட, மரியாதையுடனான தனிப்பட்ட விருப்பம். வாழ்க்கையில் என்ன முடிவுகள் எடுக்கவேண்டும் என்று தெரிந்த ஒரு தெளிவான, பக்குவம் கொண்ட வளர்ந்த பெண் நான். எந்த ஒரு மனிதனுக்கும் என்ன உடை அணிய வேண்டும், என்ன செய்யவேண்டும் என்கிற விருப்பம் உள்ளது. அதைத்தான் நானும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மையான சூழலைப் புரிந்துகொள்ளாமல் தயவுசெய்து எதையும் முடிவு செய்யவேண்டாம் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மானும் தன் மீதான விமரிசனங்களுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். என் குடும்பத்தின் மதிப்புமிக்க பெண்கள் என தனது இரு பெண்கள், மனைவி ஆகிய மூவரும் உள்ள ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மூவரும் நீதா அம்பானியுடன் எடுத்துக்கொண்ட அந்தப் புகைப்படத்தில் கதிஜா மட்டுமே நிகாஃப் உடை அணிந்துள்ளார். தேர்வின் சுதந்தரம் என்றும் இந்த ட்வீட்டுக்கு ரஹ்மான் ஹேஷ்டேக் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.