பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!

இது என் கதைக்குத்தான் பொருந்தும், என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம்....
பிரபல இயக்குநர் ரூ. 10 லட்சம் அளிக்க முன்வந்தும் பாடல் வரிகளைத் தர மறுத்த கவிஞர் வைரமுத்து!
Published on
Updated on
1 min read

ஆர்.கே. சுரேஷ் - சீமான் நடிப்பில் இரா. சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகவுள்ள படம் அமீரா. அனுசித்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இசை - விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு - இரா. செழியன். சீமானின் தம்பி திரைக்களமும் ஸ்டூடியோ 9 ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. 

இந்நிலையில் இப்படத்துக்காக எழுதிய பாடல் வரிகளை இயக்குநர் சீனு ராமசாமி கேட்டும் தர மறுத்துள்ளார் கவிஞர் வைரமுத்து. இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பு:

சீமானின் தம்பி திரைக்களமும், ஆர்.கே.சுரேஷின் ஸ்டுடியோ 9-ம் இணைந்து தயாரிக்க, இரா.சுப்பிரமணியன் இயக்கும் படம் அமீரா. ஒரு திருடனின் வாழ்க்கையில் ஓர் அழகான பெண் குறுக்கிடுகிறாள். அவள் அழகு அவனைத் திக்குமுக்காட வைக்கிறது. அந்த அழகின் வழியே வந்த அன்பு அவனது திருட்டுத் தொழிலையே மாற்றுகிறது; அவன் திருந்துகிறான். அவள் எப்படிப்பட்ட அழகி, அந்த அழகு அவனை என்னவெல்லாம் செய்தது என்பதுதான் பாட்டு. 15 நிமிடங்களில் பாடல் எழுதி முடித்தாராம் கவிஞர் வைரமுத்து. அந்த நேரத்தில் தொலைப்பேசியில் வந்த இயக்குநர் சீனுராமசாமியிடம் பேச்சோடு பேச்சாக அந்தப் பாடலைப் படித்துக் காட்டியிருக்கிறார். உணர்ச்சிவசப்பட்டு ஆஹா என்ற சீனுராமசாமி, இது என் கதைக்குத்தான் பொருந்தும், என் கதாநாயகிக்குத்தான் பொருந்தும். இதை எனக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று குழந்தைபோல் அடம்பிடித்தாராம். இது சீமானுக்கு என்று எழுதப்பட்ட பாட்டு; கொடுத்த வாக்கு மாறக்கூடாது என்றாராம் வைரமுத்து. இந்தப் பாட்டுக்கு மட்டும் 10 லட்சம் வாங்கித் தருகிறேன், கொடுங்கள் என்றாராம் சீனுராமசாமி. 10 ரூபாய் கொடுத்தாலும் சீமானுக்குத்தான் இந்தப் பாட்டு என்றாராம் கவிஞர்  சிரித்துக்கொண்டே.

இதோ அந்த அழகான பாட்டு :

ஆதார் அட்டையிலும்
அழகானவள்
அழுகின்ற வேளையிலும்
அழகானவள்

ஆடை சூடியும்
அழகானவள்
அதனைத் தாண்டியும்
அழகானவள்

பேசும்போதும் அழகானவள்  - நீ
பேசாத போது பேரழகானவள்

நெற்றி சரியும்
கற்றை முடியைச்
சுட்டு விரலால்
சுற்றும் போது
சுழற்றியடிக்கும் புயலானவள்

*

பத்துகிராம் புன்னகையில்
பைத்தியமாய் ஆனேன்
பூப்பறிக்கும் உயரம் கண்டு
புத்திமாறிப் போனேன்

ஓடைப்பார்வை தீண்டிச் செல்ல
அரசனாகிப் போனேன்
ஆடை ஓரம் உரசும் போது
அடிமையாகிப் போனேன்

சாயம்போன  வாழ்வோடு
நிறமூட்டினாய்
ஈயம்போன பாத்திரத்தில்
ஒளியேற்றினாய்

அழகென்ற பொருள்கொண்டு
அன்பென்ற வழிகண்டு
திருடுகின்ற என்வாழ்வைத்
திருவாக்கினாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com