ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கே.ஆர். பிரபு இயக்கியுள்ள படம் எல்கேஜி. ப்ரியா ஆனந்த், ஜே.ஜே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்துள்ளார்கள். பிப்ரவரி 22 அன்று படம் வெளியானது.
தமிழ்நாட்டில் இந்தப் படம் 310 திரையரங்குகளில் வெளியாகி முதல் மூன்று நாள்களில் கிட்டத்தட்ட ரூ. 8.80 கோடி வசூலை அள்ளியதாகக் கூறப்படுகிறது. இந்த வருடம் வெளியான படங்களில் விஸ்வாசம், பேட்ட படங்களுக்கு அடுத்ததாக முதல் மூன்று நாள்களில் அதிக வசூல் கண்ட தமிழ்ப் படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது. பிரபல நடிகர்கள் யாரும் நடிக்காத இந்தப் படம் ஆர்ஜே பாலாஜியின் புகழையும் அவருடைய நகைச்சுவையையும் அதிகம் நம்பி வெளியானது. சமூகவலைத்தளங்களில் இப்படங்களின் விளம்பரங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து படத்துக்கும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
இந்த வசூல் தான் எதிர்பாராத ஒன்று என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது: எல்கேஜி படத்தை ஏற்றுக்கொண்டதும் அதன் வசூல் விவரங்களும் நம்பமுடியாதவையாக உள்ளன. நம்பமுடியாத அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன் என்று கூறியுள்ளார்.