ஆர்ஜே பாலாஜி நடிப்பில் கே.ஆர். பிரபு இயக்கியுள்ள படம் எல்கேஜி. ப்ரியா ஆனந்த், ஜே.ஜே. ரித்தீஷ், நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்துள்ளார்கள். பிப்ரவரி 22 அன்று படம் வெளியானது. ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் இப்படத்தைத் தயாரித்துள்ளது.
இந்நிலையில் இந்தப் படம் வசூலில் சாதனைகள் செய்து தமிழ்த் திரையுலகை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தப் படத்துக்காக சம்பளம் பெற்றுக்கொள்ளாமல் நடித்த ஆர்ஜே பாலாஜி தற்போது அதன் லாபத்திலிருந்து ஒரு பகுதியைச் சம்பளமாகப் பெறவுள்ளார். தமிழ்த் திரையுலகில் பட பெட்ஜெட்டில் பாதி, கதாநாயகர்களின் சம்பளங்களுக்கே செலவாகிற நிலைமையில் பாலாஜியின் இந்த அணுகுமுறைக்குப் பாராட்டு கிடைத்துள்ளது.
எல்கேஜி படம் வெளிவருவதற்கு முன்பே, விநியோக உரிமை, தொலைக்காட்சி - டிஜிடல் உரிமங்கள், வெளிநாட்டு உரிமம் போன்றவற்றால் படத் தயாரிப்பாளருக்கு லாபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பட வெளியீட்டுக்குப் பிறகும் எல்கேஜி படம் வசூலில் ஒரு பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
3.5 கோடி பட்ஜெட்டில் உருவான எல்கேஜி படம், வெளியான மூன்றாவது நாளிலிருந்து லாபம் அளிக்க ஆரம்பித்துவிட்டது. முதல் மூன்று நாள்களில் ரூ. 8.80 கோடி வசூலைத் தமிழ்நாட்டில் அள்ளி, 2019-ல் அதிக வார இறுதி வசூலைக் கண்ட மூன்றாவது படம் என்கிற பெருமையைத் தட்டிச் சென்றது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கு ரூ. 3.50 கோடிக்கு மினிமம் கியாரண்டி என்கிற முறைப்படி இந்தப் படம் விற்கப்பட்டுள்ளது. ஆனால் முதல் மூன்று நாள்களிலேயே விநியோகஸ்தரின் பங்காக ரூ. 4.25 கோடி கிடைத்துள்ளது. முழுவதுமாக ஓடிமுடிந்தபிறகு எப்படியும் விநியோகஸ்தருக்கு ரூ. 10 கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று கணக்கிடப்படுகிறது. பிரபல நடிகர்கள் யாரும் நடிக்காத இந்தப் படம் ஆர்ஜே பாலாஜியின் புகழையும் அவருடைய நகைச்சுவையையும் அதிகம் நம்பி வெளியானது. சமூகவலைத்தளங்களில் இப்படங்களின் விளம்பரங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து படத்துக்கும் நல்ல வசூல் கிடைத்துள்ளது.
விநியோகஸ்தர் சக்திவேலன், எல்கேஜி வெற்றி விழாவில் கூறியதாவது: 310 திரையரங்குகளில் படத்தை வெளியிட்டேன். இரு நாள்களில் முதலீட்டை மீட்டுவிட்டேன். ஆனால் இதுவரை ஆர்ஜே பாலாஜி பட வசூலைக் கேட்கவில்லை. மக்களுக்குப் படம் பிடித்ததா என்பதில்தான் அவர் கவனமாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
இந்த வசூல் தான் எதிர்பாராத ஒன்று என ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது: எல்கேஜி படத்தை ஏற்றுக்கொண்டதும் அதன் வசூல் விவரங்களும் நம்பமுடியாதவையாக உள்ளன. நம்பமுடியாத அன்புக்கும் நம்பிக்கைக்கும் நன்றி. எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன் என்றார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள 10 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மேம்படுத்த உள்ளதாக வெற்றி விழாவில் அறிவித்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.