தி லயன் கிங் படத்தில் உள்ள அரசியல்: இயக்குநர் வசந்த பாலன் விமரிசனம்!

மகாராஜாவின் மகனைத் தவிர, இந்த உலகத்தில் வேறு யாருக்கும் அறிவு என்பதே இல்லை என்கிற ஒருவித மூளைச் சலவையைத் தொடர்ந்து...
தி லயன் கிங் படத்தில் உள்ள அரசியல்: இயக்குநர் வசந்த பாலன் விமரிசனம்!

உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய தி ஜங்கிள் புக் படத்தை இயக்கிய ஜோன் ஃபவ்ரே தற்போது தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது. லயன் கிங் படம் இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் 2,140 திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியானது.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து இயக்குநர் வசந்த பாலன், ஃபேஸ்புக்கில் கூறியுள்ளதாவது:

ஜெயில் திரைப்படத்தின் இறுதி ஒலிக்கலவை வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், இன்றுதான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு லயன் கிங் திரைப்படத்திற்கு செல்ல இயன்றது. திரையரங்கு முழுக்க கிராமத்தையும், வனத்தையும் பார்க்க அழைத்துச் செல்லாத பெற்றோர்கள், ஒருவிதக் குற்ற உணர்ச்சியுடன் லயன் கிங் திரைப்படத்திற்குத் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்திருந்தார்கள். ஒருநாளும் தங்கள் குழந்தைகளுக்கு இவர்கள் அடர் வனத்தைக் காட்டப்போவதில்லை. ஆகவே இது ஒரு சமரச ஏற்பாடு. இதைக் குழந்தைகளும் அறிந்திருந்தார்கள். திரையரங்கில் குழந்தைகளின் ஆரவார ஒலி இடையறாது கேட்ட வண்ணம் இருந்தது. 

முக்கியமாக மனோபாலா, சிங்கம்புலி, ரோபோ சங்கர் இவர்களுடைய காமெடியான குரல் திரையரங்கில் இடைவிடாத சிரிப்பலையை ஏற்படுத்திக்கொண்டே இருந்தது . ஆனால் எனக்குப் படம் பார்க்கும்போது ஒன்றுதான் தெரிந்தது. வயது வந்தவர்களுக்கு ஒரு பாகுபலி என்றால் , குழந்தைகளுக்கு ஒரு லயன் கிங் என்று தோன்றியது. இடைவிடாது இங்குக் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் சொல்லப்படுகிற கதைகளின் அரசியல், ராஜாவுடைய மகன் மீண்டும் அந்த ராஜ பதவிக்கு வர வேண்டும். அதற்காகப் போராட்டம், மற்றும் யுத்தம், குருதியாறு. இறுதியில் ராஜாவிடம் மகன் வில்லனைக் கொன்று அந்தச் சிம்மாசனத்தை அடைகிறான். மக்கள் சந்தோஷமடைகிறார்கள். இந்த அரசியலை, இது போன்ற கதைகளைத் தொடர்ந்து படங்களில் பார்ப்பது ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. மகாராஜாவின் மகனைத் தவிர, இந்த உலகத்தில் வேறு யாருக்கும் அறிவு என்பதே இல்லை என்கிற ஒருவித மூளைச் சலவையைத் தொடர்ந்து மக்களிடம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது வாரிசு அரசியலை மக்களாட்சியில் உருவாக்குகிற ஆயுதமாக நான் பார்க்கிறேன் என்று எழுதியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com