ஆஹா..நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பதிலாக 'அல்வா' 

நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்த சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அதேநேரத்தில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆஹா..நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பதிலாக 'அல்வா' 
Published on
Updated on
2 min read

சென்னை: நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்த சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அதேநேரத்தில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்கான தேர்தல் ஜூன் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் நடிகர் நாசர் தலைமையில் பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது: நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற உள்ள அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரிக்கு அருகில் தமிழக அமைச்சர்கள், நீதிபதிகள் ஆகியோரின் குடியிருப்புகள் உள்ளன. தேர்தலின்போது அசம்பாவிதச் சம்பவங்கள் நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. எனவே தேர்தலுக்கான வாக்குப்பதிவின்போது போலீஸ் பாதுகாப்பு வழங்க சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மக்கள் அதிகமாகக் கூடும் இடத்தில் நடிகர் சங்கத் தேர்தலை நடத்தினால், மக்களின் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால் காவல்துறை பாதுகாப்புக்கு அனுமதியளிக்கவில்லை. ஈசிஆர், ஓஎம்ஆர் போன்ற நகர்ப்புறத்துக்கு வெளியே தேர்தலை நடத்தலாம் என்று காவல்துறை சார்பாக நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, நடிகர் சங்கத் தேர்தலை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடத்தக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சங்கத் தேர்தலைப் பற்றி கவலையில்லை. பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இடத்தை நாளை தெரிவிக்க உத்தரவிட்டுள்ளது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களைக் கருத்தில் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. 

இந்நிலையில் நடிகர் சங்கத் தேர்தல் நடப்பதாக இருந்த சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அதேநேரத்தில் எஸ்.வி.சேகரின் 'அல்வா' நாடகம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. நாடகத்திற்காக ஜூன் 23-ஆம் தேதியன்று காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை அரங்கம் முன்பதிவு செய்யப்பட்டு, அதற்காக எஸ்.வி.சேகரிடம் இருந்து ரூ 10 ஆயிரம் வாடகை முன்பணமாக பெறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எனவே அங்கு அன்று நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், எல்லோருக்கும் 'அல்வா' கொடுக்கப்பட்டுள்ளது.       

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com