பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; நீட் தேர்வு எப்படி எழுத முடியும்?: ஜோதிகா கேள்வி!

அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசாங்கப் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள்...
பல பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை; நீட் தேர்வு எப்படி எழுத முடியும்?: ஜோதிகா கேள்வி!

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் கெளதம் ராஜ் இயக்கியுள்ள படம் - ராட்சசி. இசை - ஷான் ரோல்டன். 

ஜூலை 5 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் ஜோதிகா கூறியதாவது:

அரசுப் பள்ளிகள் எப்படி இயங்கவேண்டும் என இதற்கு முன்பே பல படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இந்தப் படத்தின் திரைக்கதையின் அணுகுமுறை அவ்வளவு புதிதாக உள்ளது. இதில் ஒரு காதல் கதை உள்ளது. அதுவும் புதிதாக இருக்கும். அப்பா - மகள் உறவும் அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. கல்யாணத்துக்கு முன்பே இயக்குநர் கெளதம் ராஜ் எப்படி முதிர்ச்சியுடன் சிந்திக்கிறார் என்று தெரியவில்லை. புதிய இயக்குநர்கள், தங்களுடைய படங்கள் மூலமாக என்ன அறிவுரை சொல்லப்போகிறோம் என்பதில் தெளிவாக உள்ளார்கள். நடிகைகளின் அந்தஸ்து, மார்க்கெட் நிலவரத்தைப் பற்றி யோசிக்காமல் கதை பண்ணுகிறார்கள். 

இந்தப் படத்தில் படப்பிடிப்பில் இயக்குநரும் ஒளிப்பதிவாளர் கோகுலும் சாப்பிடக் கூட நேரமில்லாமல் கடுமையாக உழைத்தார்கள். எடிட்டிங் புதிய ஸ்டைலில் உள்ளது. ட்விட்டரில் படத்தின் டீசரைப் பார்த்து லேடி சமுத்திரக்கனி, இன்னொரு சாட்டை என்று கூறியுள்ளார்கள். நான் ட்விட்டரில் இல்லை. கணவரின் ட்விட்டர் மூலமாகப் பார்த்தேன். இதேபோல இன்னொரு படத்திலும் இதுபோன்ற சமூகக் கருத்துகள் வந்தால் நன்றாகத்தான் இருக்கும். இது இன்றைய தேவை. பெரிய பட்ஜெட் படங்களில் நானும் நடித்துள்ளேன். அதில் ஒரே கதை பலமுறை வந்தால் யாரும் எதுவும் புகார் அளிப்பதில்லை. ஆனால் இந்தப் படத்தை ஏன் இன்னொரு பள்ளிக்கூடம், இன்னொரு சாட்டை படங்கள் மாதிரி உள்ளது என்று கேட்கிறார்கள்? இந்தக் கதைகள் நூறு தடவை வந்தாலும் பரவாயில்லை.

அகரம் பவுண்டேஷனில் 99% மாணவர்கள், அரசாங்கப் பள்ளிகளில் இருந்து வந்தவர்கள். 35% மாணவர்களிடம் பேசும்போது தெரிகிறது, அவர்களது வகுப்புகளில் ஒரு மாதமாக, ஏன் முழு வருடத்திலும் ஆசிரியர்களே இருப்பதில்லை என்று. எனவே அந்த மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல் வகுப்புகளில் உள்ளார்கள். அதுபோன்ற ஒரு சிஸ்டத்தை அரசாங்கம் தந்துவிட்டு, மாணவர்கள் நீட் தேர்வு எழுதவேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறார்கள்? தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பாதி, அரசாங்கப் பள்ளிகளில் படிக்கிறார்கள். எனவே இந்தப் பிரச்னைகளைக் கூறும் கதைகள் நூறு படங்களில் வந்தாலும் நாம் பார்க்கவேண்டும். ஆக்‌ஷன் படத்தை விடவும் இது மேலானது. எனது 2-வது திரைப்பயணத்தில் நல்ல கதைகள் வருகின்றன. பெண்களுக்கு மரியாதை அளிக்கும் ஆண்களை என்னுடைய இந்த 2-வது பயணத்தில்தான் அதிகம் சந்தித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com