அதிக ரேட்டிங் வழங்கும் போட்டியாளர்கள் நீண்ட நாள் இருக்க வேண்டும்: ‘பிக் பாஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பம்!

நாங்கள் எந்த ஒரு போட்டியாளரையும் நல்லவராகவோ கெட்டவராகவோ காண்பிப்பதில்லை...
அதிக ரேட்டிங் வழங்கும் போட்டியாளர்கள் நீண்ட நாள் இருக்க வேண்டும்: ‘பிக் பாஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் விருப்பம்!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 சமீபத்தில் தொடங்கியுள்ளது. விஜய் டி.வி.யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் முதல் சீஸனை நடிகர் ஆரவ்வும் கடந்த வருட போட்டியை நடிகை ரித்விகாவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள். 

தமிழ் பிக் பாஸ் குறித்து இந்நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவமான எண்டமோல் ஷைன் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி அபிஷேக் ரேக், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டியளித்ததாவது:

போட்டியாளர்களிடம் இரு விதமான மன ரீதியிலான சோதனைகளைச் செய்வோம். முதலில் 20-25 போட்டியாளர்களைத் தேர்வு செய்துகொள்வோம். எங்களிடம் நீண்ட நாளாக உள்ள மருத்துவர், அவர்களிடம் பேசுவார். போட்டியிலிருந்து விலகுவது, வன்முறையாளராக மாறுவது போன்ற அம்சங்களைக் கவனிப்போம். இதைவைத்து போட்டியாளர்களை உடனடியாக எங்கள் பட்டியலில் இருந்து நீக்கிவிடுவோம். பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்பது குறித்த சம்மதத்தை அவர்களிடம் கேட்போம். 

போட்டியாளர்களை வீட்டுக்குள் அனுப்புவோம். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று கூறுவோம். அவர்களுடைய நடவடிக்கையைக் கவனிப்போம். இப்படித்தான் நடிக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறமாட்டோம். அவர்களுடைய மனநிலையைக் கொண்டு டாஸ்குகள் வடிவமைக்கப்படுகின்றன. அதை வைத்து போட்டியாளர்களை ஒரே அணியிலோ எதிரணியிலோ ஒன்று சேர்ப்போம். எங்களுக்கு அதிக ரேட்டிங் வழங்கும் போட்டியாளர்களை நீண்ட நாள் தக்க வைத்துக்கொள்ள விரும்புவோம். அதேசமயம் விதிமுறைகள் உட்பட்டுத்தான் எல்லாமும் நடக்கும். அவர்களை அதை மீறும்போது நாங்கள் ஒரு சம்பவத்தை இழக்கிறோம். 

நாங்கள் எந்த ஒரு போட்டியாளரையும் நல்லவராகவோ கெட்டவராகவோ காண்பிப்பதில்லை. 70 கேமராக்கள் இருந்தாலும் எல்லாமும் எல்லாவற்றையும் பதிவு செய்யாது. தலா 24 மணி நேரம் என நான்குப் பதிவுகள் கிடைக்கும். அந்த 96 மணி நேரக் காட்சிகளைக் கொண்டு ஒன்றரை மணி நிகழ்ச்சியை உருவாக்கவேண்டும். ஏதாவது ஒரு சம்பவத்தைப் பார்க்கவே பார்வையாளர்கள் பணம் தருகிறார்கள். சும்மா நின்றுகொண்டிருப்பவரைக் காண்பித்துக்கொண்டிருக்க முடியாது. உலகின் முக்கியமான விஷயங்களைப் போட்டியாளர்கள் பேசலாம். ஆனால் நிகழ்ச்சியில் கதையை நகர்த்த அது உதவுகிறதா எனப் பார்க்கவேண்டும். 

எண்டமோல் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் ஆகிய இரு தரப்பிலிருந்து இரு கிரியேட்டிவ் இயக்குநர்கள் நிகழ்ச்சிக்காகப் பணிபுரிவார்கள். அவர்கள் எதை வேண்டாம் என்று சொன்னாலும் அது வேண்டாம் தான். என்னால் கூட அவர்கள் முடிவை மாற்ற முடியாது. அவர்களுக்கு உதவ எங்களிடம் 45 கதை இயக்குநர்கள் உள்ளார்கள். அவர்கள் நான்கு மணி நேரம் தொடர்ச்சியாகக் காட்சிகளைப் பார்ப்பார்கள். நான்கு மணி நேர ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பார்ப்பார்கள். நிகழ்ச்சிக்குப் பொறுப்பாக டெய்லி புரொடியூசர் இருப்பார்.  அவர் 36 மணி நேரம் வேலை பார்ப்பார். (காட்சி படமாக்கப்படும் 24 மணி நேரம் மற்றும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் முன்பு, 12 மணி நேரம் வரை). பிறகு அவர்கள் இரு நாள்கள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். 

குடும்பப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அல்லாத காட்சிகளை ஒளிபரப்புவதில் அர்த்தம் இல்லை. குடும்பப் பார்வையாளர்களுக்குப் பிடிக்காததைக் காண்பித்து, அவர்கள் சேனலை மாற்ற வைத்துவிடக்கூடாது என்கிற அச்சம் எங்களுக்கு உண்டு. எங்களை எதித்து யார் நீதிமன்றத்துக்குச் சென்றாலும், குடும்பத்துக்கு ஏற்றமாதிரியான தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குவதே எங்கள் நோக்கம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com