வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. அதற்கு முன்பு கார்த்தி நடிப்பில் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அதன்பிறகு அஜித் நடிக்கும் படங்களை மட்டுமே இயக்கியுள்ளார்.
வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை என்கிற படத்தில் நடித்துவருகிறார் அஜித். அடுத்ததாக, போனி கபூர் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இயக்குநர் சிவாவின் அடுத்தப் படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. என்ஜிகே, காப்பான் என இரு படங்களில் தற்போது நடித்துமுடித்துள்ளார் சூர்யா. இறுதிச்சுற்று சுதாவின் படத்தில் அடுத்ததாக நடிக்கவுள்ளார் சூர்யா. அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தபிறகு இந்த வருட இறுதியில் சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.