இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா? திரை அனுபவத்தை அள்ளி வழங்கும் சூப்பர் டீலக்ஸ்! (விடியோ)

ஆரண்ய காண்டம் இன்னும் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே திரை ஆர்வலர்கள்
இப்படியெல்லாம் கூட படம் எடுக்க முடியுமா? திரை அனுபவத்தை அள்ளி வழங்கும் சூப்பர் டீலக்ஸ்! (விடியோ)

நடிகர்கள் - விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின்
கதை - தியாகராஜன் குமாரராஜா, நீலன், நலன் குமாரசாமி, மிஷ்கின்
ஒளிப்பதிவு - நீரவ் ஷா மற்றும் P.S.வினோத்
படத்தொகுப்பு - சத்யராஜ் நடராஜன்
இசை - யுவன் சங்கர் ராஜா
இயக்கம் - தியாகராஜன் குமாரராஜா

ஆரண்ய காண்டம் இன்னும் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தே திரை ஆர்வலர்கள் (ரசிகர்கள் உள்ளிட்டு) வெளிவர மனமில்லாமல் உள்ள நிலையில், எட்டு ஆண்டு கால காத்திருப்பிற்குப் பிறகு, எந்த அவசரமும் இல்லாமல் அழகான ஒரு படத்தை தந்துள்ளார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. சூப்பர் டீலக்ஸ் இது என்ன மாதிரியான திரைப்படம், இயக்குநரது முந்தைய படத்தைப் போன்று நியோ நாயர் வகைமையைச் சார்ந்ததா என்று சிலர் ஆவலாக தொழில்நுட்ப விஷயங்களை ஆராயும் வேளையில், இப்படியொரு அற்புதம் தமிழ் சினிமாவிலும் நடக்கும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளார். இத்திரைப்படத்தில் பல கதாபாத்திரங்கள் படம் நெடுகிலும் வந்தாலும்,  பிரதானமானவர்களாக மூன்று தம்பதியரைச் சொல்லலாம். (ஃபகத் பாசில் - சமந்தா, மிஷ்கின் - ரம்யா கிருஷ்ணன், காயத்ரி - விஜய் சேதுபதி) இவர்கள் தவிர்த்து முக்கிய கதாபாத்திரங்களுக்கு நிகராக ஐந்து சிறுவர்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனி குறுங்கதைகள் அவற்றை இணைக்கும் சில புள்ளிகள், மற்றும் கோடுகள், என ஹைபர் லின்க் வகைமையில் படமாக்கம் செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு கதைகளானாலும் அதற்கொரு மையப் புள்ளியும், தனியே தொக்கி நிற்காத எதுவொன்றும் இல்லாத முடிவும் கொண்டது இத்திரைப்படம். ஊடுபாவாக பின்னப்பட்ட திரைக்கதையில் மிக அழுத்தமான காட்சிகள், கதை சொன்னவிதம் எனப் பல வகையில் ரசிர்களுக்கு புதியதொரு அனுபவம் தருகிறது. இப்படத்தின் முந்தைய தலைப்பு 'அநீதிக் கதை’ எல்லா வகையிலும் பொருத்தமான ஒன்று. 

அநீதிக் கதை 1

பெற்றோர் நிச்சயம் செய்து வைத்த திருமண வாழ்க்கை என்பது ஒரு டெம்ப்ளேட் வாழ்க்கை. கணவன் மனைவியாக இச்சமூகத்தில் வாழ்ந்து தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம்தான் அவ்வுறவை தொடர்ந்து நீடித்திருக்க வைத்திருக்கிறது. கட்டாயத்தின் பேரில் காதலனை விட்டு பெற்றோர் நிச்சயித்தவரை மணம் முடித்து ஏதோ ஒரு சலிப்பான நேரத்தில் முன்னாள் காதலன் ஏதோ பிரச்னை என்று ஃபோன் செய்தால் ஒரு பெண், அவனை தீவிரமாக ஒரு காலத்தில் காதலித்தவள் என்ன செய்வாள்? அதைத்தான் வேம்பு (சமந்தா) செய்கிறாள். ஆனால் அதன் பின் நிகழ்ந்த விபரீதங்களால் அவள் நிம்மதியை இழக்கச் செய்யும் சம்பவங்கள் நடந்தேறுகிறது. அவள் கணவன் முகில் (ஃபகத் ஃபாசில்) இதை அறிந்த போது அவர்கள் உறவு என்னவாகிறது? களவு, கற்பு, கலாச்சாரம், ஆண் பெண் உறவு, பெண் உடல், என படத்தின் இந்தக் கதைப் பகுதி நேரடியாகவும், சிலவற்றை சொல்லாமல் விடுத்தும் பல கிளைக் கதைகளை உள்ளடக்கியும் உள்ளது. தாலி கட்டிய ஒரே காரணத்துக்காக பெண் உடலை உடமையாகப் பார்க்கும் ஆண் சமூகத்தை கேள்விக்கு உட்படுத்துகிறது. தாய் வழிச் சமூகமாக இருந்த மனிதர்கள் ஒருகட்டத்தில் அதிகாரத்தை கைப்பற்றி பெண்ணை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள பல விதிகளை உருவாக்கினர். பெண் தன்னிடமிருந்து விலகிச் செல்லும் போது ஆண் அடையும் பதற்றமும் கோபமும் வார்த்தைகளில் கூற முடியாத ஒன்று. அதுவே வன்முறைக்கு நேரடி காரணமாகிறது. 

பெண்ணுக்கு உயிரை விட மானமே பெரிது, கற்பொழுக்கம் உடையவளே நல்ல பெண் என்பன போன்ற கற்பிதங்களை கால காலமாக பெண்களின் மூளைக்குள் செலுத்தி, அவர்களை பயிற்றுவிக்கப்பட்டவர்களாக மாற்றி வைத்துள்ள இச்சமூகம் அவள் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் தன் வசம் இழந்துவிட்டாள் அல்லது தன் மனம் சொன்னதைக் கேட்காமல், உடல் சொன்னதை கேட்டு, இச்சைக்கு (lust) உட்பட்டுவிட்டால் அவளை சோரம் போனவள், நெறி கெட்டவள், துக்கிரி, வேசை என இன்னும் வாய் கூசும் வார்த்தைகளைப் பயன்படுத்தி அவளை குதறியெடுத்துவிடும். பெண்ணின் உடலை புனிதப்படுத்தி, அதை கற்பென நிர்ணயித்தவர்கள்தான் இச்சமூகத்தின் பண்பாட்டு காவலர்கள். ஆனால் அவர்களுக்கு ஆணுக்கும் அதே நீதியை வைத்திருக்க வேண்டும் என்ற அறிவோ அக்கறையோ இல்லை. காரணம் ஆயிரம் இருந்தாலும் அவன் ஆண்மகன், அவன் ஆம்பளைச் சிங்கம் அப்படி இப்படித்தான் இருப்பான் என்று அதை அங்கீகரிக்கவும், அவனை புகழ்பாடவும்தான் கற்பித்துள்ளனர். தனி நபர் வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு துரோகம் செய்தால் அது கண்டும் காணாமல் மனைவியை வாழச் சொல்லும் மனிதர்கள், அதையே மனைவி செய்துவிட்டால் அவளை வெட்டி போட வேண்டாமா? குடும்ப மானத்தை கெடுத்தவள் என்று வசைபாடும். இவையெல்லாம் காலந்தோறும் நடந்து கொண்டிருக்கும் ஒரு (குடும்ப) அநீதிக் கதை. இது சரி இது தவறு என்று சொல்வதல்ல இத்திரைப்படம். இது சரியில்லை என்று சொல்வது என்ன சரி என்கிறது.

அநீதிக் கதை 2

பள்ளிக்கு கிளம்புவது போல் கிளம்பி நண்பனின் வீட்டுக்குச் செல்கிறான் பதின் வயது சிறுவன் ஒருவன். ஐந்து நண்பர்கள் முதன் முறையாக நீலப்படத்தை பார்க்க நண்பனின் வீட்டில் கூடியிருக்கின்றனர். அதிர்ச்சி தரும் விதமாக அதிலொருவனின் அம்மா (லீலா) அப்படத்தில் தோன்ற, அதிர்ச்சியடைந்த அவன் அந்த டிவியை உடைத்துவிட்டு, தன் தாயைக் கொல்ல ஓடுகிறான். அவனைத் துரத்தி ஓடுகிறான் அவன் நண்பன். வீட்டு வாசலில் அமர்ந்து அமைதியாக அரிசியில் கல் எடுத்துக் கொண்டிருந்த லீலாவை தூரத்திலிருந்து பார்க்கிறான். அவளா இவள் என்று ஆத்திரம் தலைக்கேற கையில் கத்தியை எடுத்துக் கொண்டு ஓடி வருகிறான். ஆனால் மாடிப்படியில் ஏறுகையில் எதிர்பாராதவிதமாக அவனது கத்தி அவன் மீதே பாய, அலறித் துடித்து வீழ்கிறான். ரத்த வெள்ளத்தில் மிதந்த மகனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறாள் லீலா. அதீத மதப் பற்றாளனாகிய லீலாவின் கணவன் தனசேகர் என்ற அற்புதம் (மிஷ்கின்) மகனின் உயிரைக் காப்பாற்ற உதவினானா இல்லையா, அவன் ஏன் தன்னை ஒரு அற்புதமானவாக நினைத்துக் கொள்கிறான். அவன் மனம் பிறழ்ந்த கணம் எதுவாக இருக்கும்? தற்கொலை செய்யும் வரை உன்னைத் துரத்திய காரணம் என்னவென்று ஒரு கூட்டத்தில் அவன் முன் விழந்த கேள்விக்கு விடையும், கத்தி பாய்ந்த மகனின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலைக்கும் காரணமும் ஒன்றுதான்.. அதிலிருந்து தப்பியோடி, அவன் கண்டடைந்த விஷயம் மதம். ஆயிரம் பேரை பலி கொண்ட சுனாமி ஏன் தன்னை மட்டும் காக்க வேண்டும் என்ற ஒற்றைக் கேள்வியில் துவங்குகிறது அவனது ஆன்மிக வாழ்க்கை. ஆனால் அதிலும் அவனால் முழுமையான நம்பிக்கையுடன் இருக்க முடிவதில்லை. தன்னைத் தேடி வருபவர்களையும் சந்திக்க மனமற்றவனாக இருக்கிறான். ஆனால் அவனுக்கு வேறு வழியில்லை. ஏதேனும் செய்து பிழைத்தாக வேண்டும். அல்லது இருத்தலின் காரணம், வாழ்வதற்கான பற்றுதல் தேவையாக இருக்கும் நிலையில் அதை செய்கிறான். ஆனால் கடைசியில் தன்னைப் போல சுனாமியிலிருந்து உயிர் பிழைத்த இன்னொருத்தியை அவன் காண நேரிடும் போது அதிர்ந்து போகிறான். அற்புதங்கள் தனக்கு மட்டுமல்ல, உண்மையில் அது அற்புதமும் அல்ல. வாழ்தல், தப்பித்தல், மரணித்தல் எல்லாம் இயற்கை. இறை நம்பிக்கை என்பது வாழ்தலின் நிமித்தம் மனிதர்கள் செய்து கொண்ட ஏற்பாடு என்பது போன்றெல்லாம் அவன் சிந்திக்கலாம் அல்லது சிந்திக்காமலும் போகலாம், ஆனால் அவனுக்கு அதன் பின் கிடைத்த அற்புதம் இரண்டு விஷயங்களே ஒன்று பொருள்வயமானது, இன்னொன்று இழந்ததைத் திரும்ப பெற்றது. (இதை கதையின் சம்பவங்களூடே சொன்னால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய குறியீடு). எது நல்லது, எது கெட்டது? எது நீதி எது அநீதி? ஒரு செயலுக்கு காரணம் செய்தவர் மட்டுமா அல்லது அதற்கு உடன் இருந்த பலருமா? கடவுள் உண்மையில் இருக்கிறாரா? தர்க்கரீதியாக பல கேள்விகளை எழுப்பும் மற்றொரு (உறவியல்) அநீதிக் கதையிது.

அநீதிக் கதை 3

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் கணவனை பிரிந்து வாழும் பெண் அவள் (காயத்ரி). ஐந்து வயது மகன் ராசுக்குட்டியுடன் மகிழ்ச்சியாக அந்த தினத்துக்காக காத்திருக்கிறாள். அன்றுதான் பிரிந்து சென்ற கணவன் வீடு திரும்பவிருக்கிறான் என்ற மகிழ்ச்சியில் உறவினர்கள் சூழ அவனுக்காக பரிதவிப்புடன் காத்திருக்கிறாள். ஆனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்து போய்விடும் வகையில் வந்து சேர்கிறான் மாணிக்கம் (விஜய் சேதுபதி). தற்போது அவள் பெயர் ஷில்பா மாணிக்கம் அல்ல என்பதை தெரிந்து உறவினர்கள் வெறுப்பை உமிழ்ந்து வெளியேறுகின்றனர். தன் வருகைக்காக நீண்ட காலம் காத்திருந்த மகனுடன் அவன் பள்ளிக்குச் செல்கிறாள் ஷில்பா. வீட்டிலிருந்து பள்ளி செல்லும் வரை அவளுக்கு நேரும் அவமானங்கள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவளைப் பார்க்கும் கேலிப் பார்வைகள், எதிர்பாராதவிதமாக சிக்கிக் கொள்ளும் போலீஸ் (பகவதி (பக்ஸ்) பாலியில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்குதல் என நீண்டு செல்லும் கொடுமைகளுக்கு இடையில் மகனின் சின்னஞ்சிறு கரங்களைப் பற்றி அவன் பள்ளிக்குச் சென்று அவனது நண்பர்களை சந்திக்கவே நினைக்கிறாள் ஷில்பா. வாழ்க்கை அத்தனை சுலபமானதா என்ன? இந்தச் சிறு பயணத்தையே திருநங்கைகளுக்கு அவலமாகவும் கடுமையானதாகவும் மாற்றக் கூடிய சமூகத்தில் அல்லவா நாம் வாழ்கிறோம். தன்னை விட எளிய உயிரைக் கண்டுவிட்டால் மனித மனம் எப்படி வக்கரிக்கிறது என்பதற்கு ஒருவர் திருநங்கைகளையும், சிறுவர் சிறுமியராக இருந்தால் போதும். வழிநெடுக தொடரும் அவமானங்களிலிருந்து தப்பி ஷில்பா ராசுக்குட்டியில் ஆசையை நிறைவேற்றினாளா, அம்மை அப்பனாக இருக்கும் ஷில்பாவை ராசுக்குட்டி எந்தளவு நேசிக்கிறான் என்பதை வெகு அழகாகவும் நெகிழ்ச்சியாகவும் விவரித்துச் செல்கிறது இந்தக் கதை. திருநங்கைகளுக்கு தரக் கூடிய அங்கீகாரம் இருக்கட்டும், முதலில் அவர்களுடன் மனித நேயத்துடன் பழகக் கற்று, மூன்றாம் பாலினமாக ஏற்று சம உரிமையுடன் மதிப்பளிக்கக் கூடிய காலம் எப்போது வருமோ அப்போதுதான் உண்மையான சமூகமாக அனைவரும் வாழத் தகுந்த இடமாக இவ்வுலகம் மாறும். அது ஆகப் பெரிய கனவாகவே இன்னும் இருப்பதால், இதுவும் (சமூக) அநீதிக் கதையாகிறது

சூப்பர் டீலக்ஸ்

ஆண் குழந்தைகளை எப்படி வளர்த்தாலும் அவர்கள் பருவம் அடைந்த காலகட்டத்தில் அவர்களுக்குள் நடக்கும் மாற்றங்களை வீட்டினர் கூட எளிதில் கண்டறிய முடியாது. அப்போது அவர்களது உலகம் நண்பர்களால் மட்டும்தான் நிரம்பியிருக்கும். அன்று தொடங்கும் நட்பு பாலம் வாழ்க்கை முழுவதும் தொடரும். இந்தப் படத்திலும் அத்தகைய இளம் நண்பர்களைப் பார்க்கலாம். நீலப்படம் பார்ப்பது தொடங்கி எப்போதும் ஒன்றாகவே எல்லா இடங்களுக்கும் செல்லும் நட்பின் நெருக்கம் மட்டும் இல்லாவிட்டால் இங்கு பலர் பைத்தியமாகி இருப்பார்கள். கோபமாக ஓடிச் சென்ற நண்பனை துரத்திச் சென்று இறுதி வரை அவனை கைவிடாது நிழலாக இருக்கும் நண்பனொருவன். கடும் கோபத்தில் நண்பன் உடைத்த டிவியை அப்பா வீடு திரும்பும் முன் மாற்றி புதிதாக ஒன்றை அங்கு வைத்துவிட துடித்து அதற்கான பணத்தை எப்பாடுபட்டாவது சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து களத்தில் இறங்கும் மற்ற மூன்று நண்பர்கள் என இளம் நண்பர்கள் கூட்டம் படத்தின் கதையூடே தொடர்ந்து வருகிறது. மற்ற கதாபாத்திரங்களுடன் ஊடுபாவிச் செல்லும் தன்மையுடனும், தனித்தும் இதுவொரு குறுங்கதையாகிறது.

பருவ வயதில் தோன்றக் கூடிய பாலியல் வேட்கைகளை எப்படி தணிப்பது இதை யாரிடம் பேச. அப்பா அமமா பெரியவர்கள். ஆசிரியர் கண்டிப்பானவர்கள், சமூகம் எப்போதும் கூர்முனையான ஒரு கத்தியுடன் குற்றம் சாட்டி கொல்லத் தயாராக இருக்கிறது. எனவே சக பயணிகளான நண்பர்கள்தான் இதற்கு உகந்தவர்கள் என குழுவாகச் சேரும் நண்பர்கள் எல்லா வீடுகளிலும், எல்லாத் தெருக்களிலும், ஊர்களிலும் உலகம் முழுவதும் உள்ளார்கள். செக்ஸ் எஜுகேஷன் தேவையா இல்லையாவென்று இன்னும் இங்கு பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வித மாற்றங்களும் நிகழாமல் குற்றங்களின் எண்ணிக்கையை மட்டும் அதிகரித்துக் கொண்டிருக்கும் அரசாங்கம், அரசு இயந்திரங்கள் என அனைத்தும் ஏன் இன்னும் அறியாமையில் மூழ்கிக் கிடக்க வேண்டும்? அண்டம் நிறையும் அளவிற்கு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருப்பதும், பார்வையாளனை சக படைப்பாளியாக திரைப்படம் முழுவதும் பயணிக்கச் செய்துள்ளார். அதிமானுடப் பெண்னுடன் காதல் கொள்ளும் நண்பர்களில் ஒருவன் மொட்டை மாடியிலிருந்து அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் அதன் அருகேயுள்ள சூப்பர் டீலக்ஸ் திரையரங்கில் அவனது பிற நண்பர்களும், அவனின் ஒரு பாதியும் ‘வாழ்க்கை தொடங்கும் பாடம்’ பற்றிய படத்தை கண்டு ரசித்துக் கொண்டிருக்க புரியாத பல புதிர்களுடன் படம் முடிகிறது.

இந்த விமரிசனத்தைப் படித்து குழப்பமடையாவிட்டால் நீங்கள் படம் பார்க்கவில்லை என்று அர்த்தம். இது மாதிரியான படங்கள் அபூர்வமாகவே எடுக்கப்படுகிறது.  ஒவ்வொரு ஃப்ரேமையும் மெனக்கிட்டு தேர்ந்த கலைஞனின் நுட்பத்துடன் ஒவ்வொரு விஷயங்களையும் செதுக்கியிருக்கிறார் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. அவருக்கு பக்கபலமாக கதையில் பங்காற்றிய நீலன், இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் நலன் குமாரசாமி ஆகியோரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இப்படத்தின் இசை, அதிலும் குறிப்பாக பழைய படங்களிலிருந்து தருணத்திற்கேற்ற பாடல்களை ஒலிக்கச் செய்தது வரை, அது பூனையொலியாக இருந்தாலும் சரி, பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. பாடல்கள் இல்லாமல் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஒரு படத்தைப் பார்க்க வைத்துள்ளது சாதனை. இப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக இயல்பாக, மிகையற்ற நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ரம்யா கிருஷ்ணன், ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பெரிய நட்சத்திரங்கள் மட்டுமல்லாது புதிய முகங்கள், இளைஞர்கள் என அனைவருமே தங்களுடைய பங்களிப்பை கச்சிதமாக செய்துள்ளனர்.

திரைப்படம் என்பது ஒரு விஷுவல் மீடியா என்பதை ஒரு சில இயக்குநர்களே உணர்ந்துள்ளனர். அவர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா திரைமொழி என்பதற்கான மிகச் சரியான உதாரணம் சூப்பர் டீலக்ஸ் எனலாம். அடுத்து வரும் காட்சிக்கான க்ளூவை முந்தைய காட்சிகளிலும், காட்சியழகியலின் பேரனுபவத்தையும் உணர வைக்கும் படமிது. ஆந்த்ரே தார்கோவஸ்கி எனும் ரஷ்ய திரைமேதையின் படங்களை ரசிப்பவர்கள், நம் தமிழ்ச் சூழலில் தார்க்கோவின் வழித்தோன்றல் எனப் போற்றத்தக்க தியாகராஜன் குமாரராஜாவை மனதார பாராட்டி, மீண்டுமொரு முறை சூப்பர் டீலக்ஸ் படத்தை திரை அரங்கிற்குச் சென்று பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com