பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
பி.எம். நரேந்திர மோடி திரைப்படம் ஏப்ரல் 11-ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வருவதால் இத்திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது. மின்னணு ஊடகங்களில் எந்த கட்சி அல்லது தனிநபருக்கோ ஆதாயம் அளிக்கும் வகையிலான எந்தவித ஒலிபரப்புகளையும் மேற்கொள்ளக்கூடாது என்ற நெறிமுறையின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இந்த தடையை விதித்தது. பிரதமர் மோடி கதாபாத்திரத்தில் விவேக் ஓப்ராய் நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்குநர் ஓமுங்க் குமார் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. பல தடங்கல்களைத் தாண்டி இந்தப் படம் வெளியாவது குறித்து விவேக் ஓப்ராய் கூறியதாவது:
அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்று சேர்ந்து இந்தப் படத்தின் வெளியீட்டைத் தடுத்துவிட்டார்கள். கருத்துச் சுதந்தரமும் பேச்சுரிமையும் எங்கே போயின? எங்களை ஒவ்வொரு நீதிமன்றமாக அலைக்கழித்தார்கள். ஜனநாயகமற்ற செயல் இது. எங்கள் படம் பிரசாரப் படமல்ல. ஆனால் எங்கள் படத்துக்கு எதிராக நிறைய பிரசாரம் செய்தார்கள்.
பிஎம் நரேந்திர மோடி பட வெளியீட்டுக்கு பாலிவுட் ஆதரவு தராதது குறித்து நான் அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை. ஆனால் அவர்களுடைய செயலால் வருத்தமடைந்தேன். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தபிறகு பட வெளியீட்டை யாரும் தடுக்கக்கூடாது. ஆனால் திரையுலகினர் ஒற்றுமையாக இல்லாததால் அளவற்ற அதிகாரத்தைப் பெற்றுள்ளது தேர்தல் ஆணையம். அரசியல் படங்கள் மட்டுமல்லாமல் எந்தப் படத்தையும் தற்போது அவர்களால் தடுத்து நிறுத்த முடியும். இந்தப் படம் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் நிரூபிக்க முடியாமல் போனாலும் அதை உணர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இங்குதான் நாம் தோற்றுவிட்டோம். திரையுலகினரிடையே ஒற்றுமை இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது. கருத்தியலும் அரசியல் நிலைப்பாடுகளும் ஒன்றாக இருக்கிறதோ இல்லையோ நாம் ஒன்றாக இணைந்து இதை எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.