தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போகும்: திரையரங்கு உரிமையாளர்களின் முடிவுக்கு பாரதிராஜா எதிர்ப்பு!

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும்...
தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போகும்: திரையரங்கு உரிமையாளர்களின் முடிவுக்கு பாரதிராஜா எதிர்ப்பு!

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கமும், தமிழ்நாடு  மல்டிபிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் சங்கமும் இணைந்து ஒரு முடிவெடுத்து அதை விநியோகஸ்தர் சங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை (மே 27) அனுப்பியுள்ளன. இந்தச் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்,  செயலாளர் பன்னீர்செல்வம் இருவரும் இணைந்து அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவித்திருப்பதாவது:  வரி விதிப்புடன் கூடிய விதிமுறைகள் கடுமையாக உள்ளன. இந்த வேளையில் பராமரிப்புச் செலவு உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாள்கள் ஊதிய உயர்வு போன்றவை திரையரங்க நிர்வாக நடைமுறைக்கு பெரும் பாரமாக உள்ளன. எனவே அவற்றை மனதில் கொண்டு, இதனை எதிர்கொள்ளும் விதமாக நமது நிர்வாக நடைமுறையில் ஒரே நிலையான வழிமுறைகளைச் செயல்படுத்தும் வண்ணம்  படம் வெளியான முதல் வாரத்தில் நடிகர்கள் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு 60 முதல் 65 சதவீதம் வரை பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீதம் வரை பங்கும் பிற நடிகர்களுக்கு ஐம்பது சதவீதம் வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. படம் வெளியான இரண்டாவது வாரத்தில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு 55 முதல் 60 சதவீத பங்கும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 50 முதல் 55 சதவீத பங்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திரையரங்கு உரிமையாளர் சங்க முடிவுக்கு இயக்குநர் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு ஒரு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தை சூறையாடக்கூடிய ஓர் அபாயகரமான செயல் திட்டத்தை திருப்பூர் சுப்பிரமணியம் தலைமையில் இயங்குகிற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இருக்க தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்து விட்டார்களோ என்ற அச்சம் எழுவதைத் தடுக்கமுடியவில்லை. இந்த விகிதாசாரமுறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கெனவே மிகப்பெரிய  நஷ்டத்தை சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் வர்க்கம் அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்கமுடியாது. 

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. திரையரங்கு உரிமையாளர்கள் எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதைப் பற்றி அந்தக் குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு அதற்குப் பிறகு முடிவுகளைத் தெரியப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால் இந்த முடிவுகளை எதிர்த்து பெரிய போராட்டத்தை நடத்தவேண்டிய சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com