ஜெயலலிதாவாக உருமாறி வரும் ‘தலைவி’ கங்கனா ரனாவத்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என இதுவரை ஆறு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
kangana ranaut
kangana ranaut
Published on
Updated on
2 min read

ஜெயலலிதா பயோபிக் என்று நீங்கள் கூகுள் செய்தால், அதன் திரையாக்கம் குறித்த பல அறிவிப்புகளை கூகுள் அள்ளித் தரும். அந்த அளவுக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது என்ற செய்தி ஆறேழு தடவை வெளிவந்துள்ளது. அவற்றில் குறிப்பிடத்தக்கது கெளதம் வாசுதேவ் மேனன் எடுக்கவிருக்கும் வெப் சீரீஸ் மற்றும் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தலைவி' படம்.

மேலும் தலைவிதான் முதலில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'தலைவா', 'மதராசபட்டிணம்’, சைவம் உள்ளிட்ட பல படங்கள் இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று வெற்றிகரமாகத் தொடங்கியது.

தமிழக மக்களால் ‘அம்மா’ என்று அன்பாக அழைக்கப்படும் ஜெயலலிதா, முதலில் நடிகையாகவும் பின்னர் அரசியல்வாதியாகவும் மாறிய வரலாற்று கதையில் நடிக்க கங்கனா கடினமாக பயிற்சி எடுத்து வருகிறார். தமிழ் கற்றுக் கொள்வதுடன், கடந்த ஒரு மாத காலமாக பரதநாட்டியமும் கற்றார். மேலும் ஜெயலலிதாவைப் போல உருமாற ப்ராஸ்தடிக் மேக்கப்புக்கான அளவுகளை கொடுத்த போது எடுத்த ஃபோட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அவருக்கு இந்தப் படத்தில் மேக் அப் செய்யவிருப்பவர் பிரபல ஹாலிவுட் மேக்கப் ஆர்டிஸ்ட் ஜேசன் காலின்ஸ். 

தமிழில் தாம் தூம் படத்தில் அறிமுகமான கங்கனா ரனாவத் தொடர்ந்து, ஹிந்தியில், குவீன், ஃபேஷன், தனு வெட்ஸ் மனு, மணிகர்னிகா, ஜட்ஜ்மென்டல் ஹே கியா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக தேசிய விருதுகள் பெற்றவர் கங்கனா ரனாவத், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஒல்லியான அவரது உடல்தோற்றம் ஜெயலலிதாவுக்குப் பொருத்தமாக இருக்குமா என்று நினைத்தவர்களின் வாயை மூடும் விதமாக அவர் ஜெவாக உருமாறிக் கொண்டிருக்கிறார் என்கிறது கங்கனா வட்டாரம். ஜெயலலிதாவைப் பற்றி பல விஷயங்களைப் படித்தும், அவர் பழகிய மனிதர்களிடம் பேசியும் ஹோம்வொர்க் செய்து அவரால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார் கங்கனா. இது தன் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகக் கருதுகிறார்.

'தலைவி’யில் எம்.ஜி.ஆர் வேடத்தில் அரவிந்த்சாமி நடிக்கவிருக்கிறார். மைசூரில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் நிலையில், நவம்பர் 15-ம் தேதி அரவிந்த்சாமி படப்பிடிப்பில் கலந்து கொள்வார். தலைவி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் படம் தயாராகிறது. ஹிந்தியில் இந்த படத்திற்கு ஜெயா என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com