தமிழ் ராக்கர்ஸை ஊதித் தள்ளிய 'பிகில்' வசூல் சாதனை!

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார்.
bigil
bigil

ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடித்துள்ள பிகில் படத்தை இயக்கியுள்ளார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்தப் படம் கடந்த 25-ம் தேதி வெளியான நிலையில் படம் சூப்பர் என்று ஒரு தரப்பினரும், நினைத்த அளவுக்கு இல்லை என்று சிலரும் விமரிசனம் செய்து வந்தாலும், வெளியான இத்தனை வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வெற்றி நடை போடுகிறது. பெரிய திரையரங்கங்களிலும் சரி லோக்கல் தியேட்டர்களிலும் சரி ஃபேமிலி ஆடியன்ஸின் வருகை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெள்ளித்திரையில் வெளியான அன்றே, தியேட்டர் பிரிண்ட் ஒன்றை தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்டது. ஆனால் அதையும் மீறிய இந்த பிரம்மாண்ட வெற்றி விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் படத்தயாரிப்பாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.

இப்படத்தின் வசூல், 300 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக அண்மையில் வெளிவந்த பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த படம் பிகில்தான் என்றும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாகவும் பிரபல திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது. 

சென்னை- குரோம்பேட்டையில் உள்ள புகழ்பெற்ற திரையரங்கரமான வெற்றியில் இந்த வருடம் வெளியான படங்களில் அதிக வசூலைக் கண்டுள்ளது பிகில் படம். இத்தகவலை வெற்றி திரையரங்கின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் கெளதமன் தெரிவித்துள்ளார். 70,000-க்கும் மேலான ரசிகர்கள் வெற்றி திரையரங்கில் பிகில் படத்தைக் கண்டு களித்துள்ளார்கள். இந்த வருடம் வெளியான படங்களிலிருந்து கிடைத்த - வரி நீங்கலான வசூல், மொத்த வசூல், பார்வையாளர்கள் எண்ணிக்கை என எல்லாவற்றிலும் பிகில் படமே முதலிடத்தில் உள்ளதாக ராகேஷ் கெளதமன் தெரிவித்திருந்தார்.

மூன்று வாரங்களில் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 நாட்களில் வசூலான தொகை 144 கோடி, இந்தியாவின் இதர மாநிலங்களில் 66 கோடி, வெளிநாடுகளில் ரூ 90 கோடி வசூலில் கொடி கட்டிப் பறக்கிறது என்கின்றனர் படக்குழுவினர்.

பிகில் பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் தமிழ்ப் படங்களில் இதற்கு முன்பு இப்படி 300 கோடி வசூலைத் தொட்ட ஒரே தமிழ்ப்படம் ரஜினியின் 2.0 மட்டுமே! அதன்பின் மெர்சல் 250 கோடி வசூலித்தது. இந்த வசூல்களை எல்லாம் ஒரேடியாக பிகில் முறியடித்திருப்பதாக உற்சாகத்தில் துள்ளுகிறார்கள் விஜய்யின் ரசிகர்கள்.

பிரான்ஸில் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக விஜய் படம்தான் வசூலில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளதாம். பிரான்ஸில் விஜய் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு முன் வெளிவந்த தெறி, மெர்சல், சர்கார் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது பிகிலும் சக்கை போடு போடுகிறது.  

பிகில் வசூல் தற்போது உலக அளவில் 300 கோடி ரூபாயை கடந்துள்ளது என்று புள்ளி விபரங்கள் வெளிவந்தாலும் இது குறித்த அதிகாரபூர்வமாக அறிவிப்பு படக்குழுவினர் தரப்பிலிருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com