
ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கிய அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) படம் கடந்த வருடம் வெளியானது. அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையைப் பெற்ற அவெஞ்சர்ஸ் படம், இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையையும் படைத்தது. இந்தியாவில் ரூ. 225 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. மேலும் உலகளவில் அதிக வசூல் செய்த படங்களில் நான்காம் இடத்தையும் பிடித்தது. படம் வெளியான ஏழு வாரம் கழித்து, உலகளவில் 2 பில்லியன் டாலர் (ரூ. 13,000 கோடி) வசூலித்தது அவெஞ்சர்ஸ். அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens) ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலரை வசூலைத் தாண்டிய நிலையில், இந்த வெற்றிக்கோட்டை எட்டிய நான்காவது படம் என்கிற பெருமையைப் பெற்றது. மொத்தமாக $2.048 பில்லியன் வசூலை அடைந்தது.
இதையடுத்து அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்தின் அடுத்தப் பாகமான அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் (Avengers: Endgame) படம் அதே படக்குழுவினரால் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ளார்கள்.
இந்தப் படமும் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வசனத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் எழுதியுள்ளார். இந்தியாவில் 2டி, 3டி, ஐமேக்ஸ் ஆகிய வடிவங்களில் ஏப்ரல் 26 அன்று வெளியாகவுள்ளது அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம் படம். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மார்வெல் ஏந்தம் என்கிற பாடலுக்கு இசையமைத்துள்ளார். இதுதவிர இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோரும் பங்கேற்றுள்ளார்கள். அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதியும் பிளாக்விடோவுக்கு ஆண்ட்ரியாவும் குரல் கொடுத்துள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.